சனி, 29 ஜூன், 2019

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.. மலைக்க வைத்த மதுரை எம்.எல்.ஏ!


Mahalaxmi : மலைக்க வைத்த மதுரை எம்.எல்.ஏ! - அனைவரும் பின்பற்றலாமே?*
தமிழக எம்.எல்.ஏ ஒருவர் இந்தியா முழுவதும் உள்ள எம்.எல்.ஏ-க்களுக்கு முன் உதாரணமாக மாறியிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ‘வைரல்’ ஆகிவரும் அவர், மதுரை மத்தியத் தொகுதி தி.மு.க எம் எல்.ஏ-வான *பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.*
“தமிழகத்தைச் சேர்ந்த இந்த எம்.எல்.ஏ மாதிரி இருக்க வேண்டும் என்று உங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு ஏன் உத்தரவு போடக் கூடாது?” என்று ம.பி, தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம், டெல்லி உள்ளிட்ட முதலமைச்சர் களிடமும் பல்வேறு கட்சித் தலைவர் களிடமும் சமூக வலைத்தளச் செயற் பாட்டாளர்கள் ட்விட்டர் மூலம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல், “இந்த எம்.எல்.ஏ, வட மாநிலத்தில் இருந்திருந்தால் நாடு முழுவதும் பிரபலமாகியிருப்பார்... உங்களைப் போன்றவர் இருப்பதால் எங்களுக்குப் பெருமையாக உள்ளது” என்று பலரும் பாராட்டித் தள்ளுகிறார்கள்.
அப்படி என்ன செய்திருக்கிறார் பழனிவேல் தியாகராஜன்?
நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவர் பி.டி.ராஜன்.
இவரது பேரனும் முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனின் மகனுமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தமிழக எம்.எல்.ஏ-க்களில் வித்தியாசமானவர்.

அமெரிக்கா வின் ஆசியன் பசிபிக் வங்கியின் உயர் அதிகாரி யாக மாதத்துக்கு லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்தவர். தி.மு.க தலைவர் ஸ்டாலின் அழைத்ததால் அரசியலுக்குவந்து மதுரை மத்தியத் தொகுதியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாகவும், தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். அவருடன் நெருங்கிப் பழகும் அனைவருக்கும் அவருடைய செயல்பாடுகள் நன்றாகத் தெரியும்.
இந்த நிலையில், ட்விட்டரில் அவர் பகிர்ந்த ஒரு தகவல், வைரல் ஆகியிருக்கிறது. அந்தத் தகவலைப் பார்த்தவர்கள் 2,94,165 பேர். கருத்துச் சொன்னவர்கள் 17,332 பேர். லைக் செய்தவர்கள் 11,917 பேர். ரீ ட்வீட் செய்தவர்கள் 782 பேர் என்று எண்ணிக்கை எகிறிக்கொண்டிருக்கிறது.
இதுபற்றி *பி.டி.ஆர்.தியாகராஜனிடம்* பேசினோம். ‘‘துருவ் ரதீ என்கிறவர் பிரபலமான சோஷியல் மீடியா ஆக்டிவிஸ்ட். அவர் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளராகவும் உள்ளார். ட்விட்டரில் இவருக்கு ஃபாலோயர்ஸ் அதிகம். ‘மக்கள் பிரதிநிதிகள், தங்கள் தொகுதிக்குச் செய்யும் பணிகள் பற்றி ஏன் ஆண்டுதோறும் அறிக்கையாக வெளியிடுவதில்லை... இதற்காகச் சட்டம் இயற்ற வேண்டும்’ என்று இவர் பேசிய வீடியோவை ட்விட்டரில் எதேச்சையாகப் பார்த்தேன். அதற்குச் சில பேர் கவலையுடன் பதில் அளித்திருந்தார்கள்.
நான் என் தொகுதிக்குச் செய்யும் பணிகளை ஏற்கெனவே அறிக்கையாக மக்களுக்கு அளித்துக்கொண்டிருக்கிறேன். எனவே, ‘இதை நான் செய்துகொண்டிருக்கிறேன். ஆண்டுக்கு ஒரு ரிப்போர்ட் அல்ல... ஆறு மாதங்களுக்கு ஒரு ரிப்போர்ட்டை ஊடகம் மூலம் வெளியிடு வது மட்டுமல்லாமல், என் தொகுதியிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் அதை நேரடியாகச் சேர்த்தும் வருகிறேன்’ என்று பதிவுசெய்தேன்.
உடனே அவர், ‘அதற்கான ஆதாரத்தைக் காட்டுங்கள்’ என்றார். கடந்த மூன்று வருடங்களாக வெளியிட்டுவரும் தொகுதி மேம்பாட்டுப் பணி விவரங்கள் அடங்கிய ஐந்து அறிக்கைகளை ‘அப்லோடு’ செய்தேன். தேர்தல் வந்ததால் ஆறாவது ரிப்போர்ட் நிலுவையில் உள்ளது என்பதையும் தெரிவித்தேன். அதில் ஒவ்வொரு வார்டுக்கும் என்ன செய்திருக்கிறோம், எவ்வளவு ரூபாயை எந்தெந்த விதங்களில் செலவிட்டிருக்கிறோம் என்பதை விளக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறேன். அது மட்டுமல்லாமல், மக்கள் என்னிடம் கொடுத்த மனுக்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, எத்தனை மனுக்கள்மீது நடவடிக்கை எடுக்கப் படாமல் இருக்கிறது என்பதையும் தெரிவித்தேன். அதற்கும் ஆதாரம் கேட்டார்கள். அனைத்தையும் அப்லோடு செய்தேன். அவ்வளவுதான்... துருவின் ட்வீட்டை ஃபாலோ செய்தவர்கள் எல்லோரும் ரொம்ப மகிழ்ச்சியாகி, பாராட்டிப் பல்வேறு கமென்ட்டுகளைப் பதிவுசெய்யத் தொடங்கினார்கள். இந்த விஷயம் நான் தேர்தலில் போட்டியிடும்போதே மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிதான். ‘நான் தொகுதிக்கு என்ன செய்கிறேன் என்பதை ஒவ்வொரு வீட்டுக்கும் தெரிவிப்பேன்... அதில் சந்தேகம் இருந்தால் என்னிடம் கேள்வி எழுப்பலாம்’ என்று அப்போது கூறியிருந்தேன். இந்தச் செயல்பாடுதான் அவர்களுக்கு ஆச்சர்யமாக உள்ளது. எப்படியோ இந்தியா முழுக்க ஒரு வழிகாட்டுதலுக்குத் திராவிட இயக்க எம்.எல்.ஏ-வின் செயல்பாடு முன்னுதாரணமாக இருக்கிறது என்பது மகிழ்ச்சிதான். இதன் பெருமை அனைத்தும் *தி.மு.க-வுக்கும் தளபதி ஸ்டாலினுக்கும்* சேரும்’’ என்றார்.
தொகுதி மேம்பாட்டு நிதியை எப்படிச் செலவு செய்தார்கள் என்று எந்த எம்.பி, எம்.எல்.ஏ-வும் சொல்வதில்லை. அப்படிச் சொல்ல வேண்டிய சட்டமும் இல்லை. ஆனால், அதைச் சொல்லவேண்டும் என்று சமூக ஊடகச் செயற்பாட்டாளர் துருவ் தன்னுடைய ட்விட்டர் மூலம் ஒரு வாக்கெடுப்பு நடத்தி உறுப்பினர்களைச் சேர்த்து வருகிறார். இப்போது அவர்களுக்கு முன்மாதிரியாக *பழனிவேல் தியாகராஜன்* உள்ளதால் அதைக் காட்டியே, ‘இதை ஏன் சட்டமாக்கக் கூடாது’ என்று அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் எம்.எல்.ஏ, எம்.பி-க்களுக்கும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
வட மாநில மக்கள் பிரதிநிதிகள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்!
#PalanivelThiyagaRajan

கருத்துகள் இல்லை: