திங்கள், 24 ஜூன், 2019

விஜயசாந்தி :நடிகை ரோஜாவுக்கு நடந்தது அராஜகம் .. அமைச்சர் பதவி கொடுக்காத ஜெகன் ..

தெலுங்கானா தனி மாநிலம் அமைச்சர் பதவி தரவில்லை tamil.oneindia.com - VelmuruganP : நகரி: அரசியலில் நடிகைகளை அலட்சியப் படுத்துவதாகவும். உழைப்பிற்கேற்ற மரியாதை கொடுப்பதில்லை என்றும், நடிகை விஜயசாந்தி வேதனை தெரிவித்துள்ளார். நடிகை ரோஜா 9 ஆண்டுகள் சந்திரபாபு நாயுடு போன்ற அரசியல்வாதியை எதிர்த்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்காக போராடிய நிலையில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்காதது வேதனை அளிப்பதாக கூறினார்.
நடிகை விஜயசாந்தி, தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் உள்பட பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். 30 வருடங்களாக திரை உலகில் இருக்கும் விஜய் சாந்தி துணிச்சலான ஆக்சன் ஹீரோயினாக பல படங்களில் நடித்தார். தற்போது திரைப்பட தயாரிப்பாளராகவும் ஆந்திராவில் அரசியல்வாதியாகவும் திகழ்கிறார்.
விஜய சாந்தி இன்று தனது 53வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்,
"அரசியலில் நடிகைகளை அலட்சியப்படுத்துகிறார்கள். உழைப்பிற்கேற்ற மரியாதை கொடுப்பதில்லை. நடிகை ரோஜா 9 ஆண்டுகள் சந்திரபாபு நாயுடு போன்ற அரசியல்வாதியை எதிர்த்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்காக போராடினார். அவரை சட்டமன்றத்திலேயே அடியெடுத்து வைக்க விடாமல் எவ்வளவு அராஜகம் செய்தார்கள். துணிந்து போராடிய அவருக்கு ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சர் பதவி கொடுக்காதது வருத்தம் அளிக்கிறது.

தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கி கொடுத்ததால் சோனியா காந்தி மீது மரியாதை ஏற்பட்டு நன்றிக்கடன் செலுத்த காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன். கட்சி எதுவாக இருந்தாலும் மக்கள் நலனுக்காக பாடுபடுவதே எனது குறிக்கோள்.

தற்போது அன்றாட வாழ்விலும், சமூக வலைதளங்களிலும் பெண்களை வெட்கமே இல்லாமல் கேவலமாக மானபங்கம் செய்த வருகிறார்கள். பெண்களை மானபங்கம் செய்வோரை நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் பொது இடத்தில் தூக்கிலிட்டு கொல்வது தான் ஒரே தீர்வு.


இந்த சமுதாயம் எதை நோக்கி போகிறதோ என்று தெரியவில்லை. ஒரு வாரத்திற்கு முன் தெலுங்கானாவில் 9 மாத குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற காம கொடூரனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.< இதுபோன்றவர்களை நடு ரோட்டில் நிற்க வைத்து சுட வேண்டும். என்கவுண்டர் செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த குழந்தையின் ஆத்மா சாந்தி அடையும்

ஆண்டு கணக்கில் விசாரணை என்ற பெயரில் தள்ளிப்போடாமல் உடனடியாக தண்டனை கொடுத்தால் தான் இதுபோன்ற தவறுகள் செய்ய இன்னொருவருக்கு துணிவு வராது. அரசாங்கம் சமூக வலைதளத்துக்கு புதிய சட்டம் கொண்டுவர வேண்டும்." இவ்வாறு கூறினார்

கருத்துகள் இல்லை: