சனி, 29 ஜூன், 2019

அவனின் அன்பு அந்தப் படத்திலேயே தெரிந்திருக்கும்!’ - உலகை உலுக்கிய புகைப்படத்தின் பின்னணி

உலகை உலுக்கிய புகைப்படம்
vikatan.com - sathya-gopalan :
ஆஸ்கர் - வெலரியாஒவ்வொரு நாளும் உலகை உலுக்கும் ஒரு துயரச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் உள்ளன. சில சம்பவங்களை அங்கு நடந்த கதைகள் உணர்த்தும். ஆனால், சில சம்பவங்களுக்குக் கதைகள் தேவையில்லை வெறும் புகைப்படங்களே அங்குள்ள துயரத்தின் ஆழத்தை உணர்த்திவிடும்.
அப்படி, திங்கள் கிழமை வெளியான ஒரு புகைப்படம்தான் மொத்த உலகையும் ஆட்டுவித்துள்ளது. எல் சால்வடாரைச் சேர்ந்த ஆஸ்கர் அல்பெர்டோ என்னும் நபர் அமெரிக்காவில் குடியேறுவதற்கான கோரிக்கையை முன்வைத்தார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அதனால் ஆற்றைக் கடந்து அமெரிக்காவுக்குள் நுழைவது என்ற முடிவை எடுத்துள்ளார். 


ரியோ கிராண்டே ஆறு
ஆற்றைக் கடக்கும்போது தன் குழந்தை தடுமாறி ஆற்றில் விழ, குழந்தையைக் காப்பாற்ற ஆற்றுக்குள் சென்ற ஆஸ்கர், குழந்தையைத் தனது சட்டைக்குள் வைத்து நீந்த முயன்றிருக்கிறார். ஆனால், முடியாமல் போகவே இருவரின் உடல்களும் கரை ஒதுங்கியது. தந்தையின் சட்டைக்குள் இருக்கும் 2 வயது மகளின் கை தந்தையின் கழுத்தைச் சுற்றி இருக்கும் இந்தக் காட்சியைக் கண்ட பத்திரிகையாளர் ஜூலியா லி டக் தனது கேமராவில் படம் எடுத்தார். அவர் எடுத்த புகைப்படம் கடந்த திங்கள் கிழமை மெக்சிகன் செய்தித்தாளில் வெளியானது. புகைப்படம் வெளியான ஒரு மணி நேரத்தில் அது உலகம் முழுவதும் பரவியது. அந்தப் புகைப்படம், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனிதாபிமானத்தின் அளவை வெளிப்படுத்துவதாக உள்ளது எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர்
`அமெரிக்கா, அமெரிக்கர்களுக்கு மட்டுமே’ என்பதுதான் ட்ரம்பின் பிரதான ஆயுதம். அதனால் பிற நாட்டினர் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையக் கூடாது என்பதற்காக அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் யாரும் கடக்க முடியாத வகையில் 670 மைல் தூரத்துக்கு பிரமாண்ட சுவரை எழுப்ப முயன்றார். இதற்கு அமெரிக்கா உட்பட உலக நாடுகள் பலவும் கண்டம் தெரிவித்த நிலையில், சுவர் கட்டும் பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் அமெரிக்க அதிபர்.

இது ஒரு புறம் இருந்தாலும் தினம் தினம் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடிபெயர்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது. அவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் எவ்வளவோ முயற்சி செய்தும் அது அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இப்படி சட்டவிரோதமாக ரியோ கிராண்டே ஆற்றைக் கடந்து அமெரிக்காவுக்குள் செல்ல முயன்ற ஆஸ்கர் என்பவரும், அவரின் 2 வயது மகள் வெலரியாவும்தான் தற்போது இறந்துள்ளனர்.
மத்திய அமெரிக்கா நாடான எல் சால்வடாரின் தலைநகர், சான் சால்வடாரில் தன் மனைவி டனியா வனீசா, குழந்தை வெலரியா மற்றும் தாய் ரோசா ராமிர்ரெஸுடன் வாழ்ந்து வந்தவர் 25 வயதான ஆஸ்கர் ஆல்பர்டோ மார்டினெஸ். இவர் எல் சால்வடாரில் தங்கி அங்கிருக்கும் ஒரு பீட்ஸா கடையில் வேலை செய்துவருகிறார். அவருக்கு மாதம் 350 அமெரிக்க டாலர்கள் சம்பளம். இந்திய மதிப்பில் 24,000 ரூபாய்.
ஆஸ்கரின் மனைவி
ஆஸ்கரின் மனைவி டனியா, சான் சால்வடாரில் உள்ள ஒரு சீன ரெஸ்ட்டாரென்டில் வேலை செய்து தன் குழந்தையைக் கவனித்து வருகிறார். இந்த நான்கு பேரும் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். ஆஸ்கருக்கு ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும், தன் மகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. தான் அமெரிக்காவுக்குச் சென்றால் அங்கு சில காலங்கள் தங்கி சம்பாதிக்கும் பணத்தை வைத்து புதிய வீடு கட்டலாம் என முடிவெடுத்து அமெரிக்காவுக்குச் செல்ல அனுமதி கோரியுள்ளார்.

ஆனால், ஆஸ்கரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. எப்படியேனும் அமெரிக்காவில் நுழைந்து, நிறைய சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேறிவிட வேண்டும் என்ற கனவில், குழந்தை, மனைவி மற்றும் மனைவியின் தாய் ஆகியோருடன் மெக்ஸிகோவிலிருந்து டெக்ஸாஸ் வழியாகச் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குச் செல்ல முடிவெடுத்துப் புறப்படுகிறார்கள். ஆஸ்கரின் குடும்பம்  ரியோ கிராண்டே ஆற்றுக்கு அருகில் வந்ததும் முதலில் ஒவ்வொருவராக ஆற்றைக் கடக்கலாம் என நினைத்து முதலில் மகளும், தந்தையும் ஆற்றைக் கடக்கின்றனர். அவர்கள் இருவரும் ஆபத்தான ஆற்றை வெற்றிகரமாகக் கடந்து வந்துவிட்டனர்.
இறந்தவர்களின் உடல்கள்
பின்னர், ஆஸ்கர் தன் மகளைக் கரையில் விட்டுவிட்டு மறு முனையில் இருக்கும் மனைவியை அழைத்துச் செல்வதற்காக மீண்டும் ஆற்றில் இறங்குகிறார். ஆஸ்கர், ஆற்றில் இறங்கி சிறிது தூரம் சென்றதும் தந்தையைப் பார்த்த மகளும் ஆற்றில் இறங்குவதற்காக வேகமாக வந்துள்ளார். பின்னர் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மகளை நோக்கி ஓடுகிறார் ஆஸ்கர். அதற்குள் குழந்தை தடுமாறி ஆற்றில் விழுகிறது. காப்பாற்றச் சென்ற தந்தை குழந்தையை எடுத்து தன் சட்டைக்குள் வைத்துக்கொண்டு நீந்த முயற்சி செய்துள்ளார். அது முடியாமல் போகவே இறுதியில் இருவரது உடல்களும் கரையில் ஒதுங்கியதாக அமெரிக்க ஊடகங்களில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த டனியா வனீசாவின் தாய், `` ஆற்றைக் கடப்பது ஆபத்தானது என நாங்கள் பலமுறை கூறினோம். ஆனால், ஆஸ்கர் அதை ஏற்கவில்லை. அவர்கள் வெற்றிகரமாக ஆற்றைக் கடந்த பிறகுதான் இந்தக் கொடுமையான சம்பவம் நடந்தது என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. கணவனும், மகளும் நீரில் மூழ்குவதைக் கண்டு என் மகள் கூச்சல் போட்டாள். அவளும் தண்ணீரில் இறங்கிவிட்டாள் அதற்குள் அருகில் இருந்தவர்கள் டனியாவைக் காப்பாற்றிவிட்டனர். இல்லை என்றால் இப்போது அவளும் தன் கணவருடன் இறந்திருப்பாள்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்கரின் தாய்
இதில் இன்னும் மனதை உருக்கும் சம்பவம் ஆஸ்கரின் தாய் ரோசா ஆங்கில ஊடகமான ஏ.பி-க்கு அளித்துள்ள பேட்டிதான். அவர், குழந்தை வெலரியாவின் விளையாட்டுப் பொருள்களைக் காட்டி மிகவும் வருத்தத்தோடு பேசியுள்ளார். அதில், `` ஆஸ்கர் தன் விருப்பை என்னிடம் கூறியபோதே போகவேண்டாம் எனக் கெஞ்சினேன். ஆனால், அமெரிக்காவுக்குச் சென்று பணம் சம்பாதித்து வீடு கட்ட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அவர் இருந்துவிட்டான்.
நான் மீண்டும் ஆஸ்கரிடம் கூறினேன்,  ``உனக்குப் போக வேண்டும் எனத் தோன்றினால் நீயும் உன் மனைவியும் மட்டும் செல்லுங்கள். குழந்தையை என்னிடம் விடுங்கள்; நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றேன். ஆனால் அவன், `` இல்லை அம்மா. நான் எப்படி அவளை விட்டுச் செல்வேன் என நீங்கள் நினைத்தீர்கள்?” எனக் கேட்டான். தன் மகளை விட்டுச் செல்வதற்கான தைரியம் அவனிடம் இல்லை. அவன் இறந்த புகைப்படத்தைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். ஆஸ்கர் தன் மகளை எவ்வளவு நேசித்தான் என்பது தெரியும்” எனக் கண்ணீர் மல்கப் பேசியுள்ளார்

கருத்துகள் இல்லை: