சனி, 29 ஜூன், 2019

சபரீசனை எம்பி ஆக்குகிறாரா ஸ்டாலின்?

மின்னம்பலம் :
சபரீசனை எம்பி ஆக்குகிறாரா ஸ்டாலின்?
தமிழகத்தில்  காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூலை 18 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யக் கடைசி நாள் ஜூலை 8 என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
திமுகவுக்கு 3, அதிமுகவுக்கு 3 என எம்.எல்.ஏ.க்களின் பலத்தைப் பொறுத்து ராஜ்யசபா எம்.பி.க்கள் கிடைக்கும் நிலையில் இந்தக் கட்சிகள் யாரை அதற்கு தேர்வு செய்யப் போகின்றன என்பது பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அதிமுகவில் ராஜ்யசபா யாருக்கு என்பதில் கடும் குழப்பம் நிலவி வரும் நிலையில், திமுகவில் ஒரு தெளிவு ஏற்பட்டது போல தெரிந்தது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுகவின் மூத்த தொழிற்சங்கவாதியான தொமுச பொதுச் செயலாளார் சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோரது பெயர்கள் திமுகவில் தீர்க்கமாக பேசப்பட்டு வந்தன.

வழக்கறிஞர் வில்சன் தனது முக்கியமான வழக்குகளை எல்லாம் தனது அடுத்த கட்ட வழக்கறிஞர்களிடம் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார். இதுவே அவர் ராஜய்சபா எம்பி ஆவதற்கான முக்கிய அறிகுறியாக படுகிறது. மதிமுகவுக்கு ஒன்று என்பது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட ஒன்று. இந்நிலையில் மூன்றாவது ராஜ்யசபா சீட் யாருக்கு என்பதில் கடந்த சில தினங்களாக வேறொரு தகவல் உலாவருகிறது.
ஸ்டாலின் மகன் உதயநிதி, மாப்பிள்ளை சபரீசன் ஆகியோரின் நெருங்கிய நண்பரும் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் கடந்த சில நாட்களாக தான் சந்திக்கும் ஊடகப் புள்ளிகள், நண்பர்கள் ஆகியோரிடம், “மாப்பிள்ளை சபரீசன் தான் ராஜ்யசபா எம்பி ஆகுறார். இது உறுதியாயிடுச்சு. டெல்லியில தலைவருக்கு இனி எல்லாமுமா அவர்தான் இருப்பார். கலைஞருக்கு முரசொலி மாறன் போல, தலைவருக்கு சபரீசன் இருப்பார்’ என்றெல்லாம் சொல்லிவருகிறார் அன்பில் மகேஷ்.
”ஏற்கனவே மகேஷ்தான் திமுக மாவட்டச் செயலாளர்களுக்கெல்லாம் போன் போட்டு, ‘உதயநிதி இளைஞரணிச் செயலாளரா வரப் போறாரு. அவருக்காக தீர்மானம் நிறைவேற்றி அனுப்புங்க’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அது இன்னும் நடக்கலை. இப்போது சபரீசன் எம்பி ஆகப் போவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார் “ என இரண்டையும் ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் உடன் பிறப்புகள்.

கருத்துகள் இல்லை: