வியாழன், 27 ஜூன், 2019

கோகுல்ராஜ் கொலை வழக்கு: ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

கோகுல்ராஜ் கொலை வழக்கு: ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!
மின்னம்பலம் :சேலத்தைச் சேர்ந்த வாலிபர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரின் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.
2015ஆம் ஆண்டு சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்பவர் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 17 பேரைக் கைது செய்தனர். சமீபத்தில் இந்த வழக்கு நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இன்று (ஜூன் 27) மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி தனசேகரன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது யுவராஜ் உள்ளிட்ட 14 பேர் நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜோதிமணி இறந்துவிட்டார்.
யுவராஜ் மற்றும் பிரபு என்ற நபரைத் தவிர்த்து சிவகுமார், சங்கர், அருள் செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், சந்திரசேகரன் உள்ளிட்ட 12 பேர் சார்பில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, தற்போதைய சூழலில் 12 பேருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி அவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
வரும் ஜூலை 1ஆம் தேதியன்று கோகுல்ராஜ் கொலை தொடர்பாகச் சாட்சிகளிடம் விசாரணை நடைபெறுவதால், இவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: