வெள்ளி, 28 ஜூன், 2019

நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு முறை அறிமுகம் - மத்திய அரசு திட்டம் விரைவில் அமல்

ராம் விலாஸ் பஸ்வான்நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு முறை அறிமுகம் - மத்திய அரசு திட்டம் விரைவில் அமல்மாலைமலர் : நாடு முழுவதும் “ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு” என்ற திட்டத்தை விரைவில் அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
புதுடெல்லி: ரேசன் கடைகளில் மக்கள் மானிய விலையில் பொருட்களை வாங்குவதற்காக ஒவ்வொரு மாநிலமும் தங்களது துறைகள் மூலம் பொது வினியோகத்திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன.< இவை அனைத்தையும் “ஒரே நாடு, ஒரே ரே‌ஷன் கார்டு” என்ற திட்டம் மூலம் ஒருங்கிணைக்க மத்திய அரசு கடந்த ஆண்டே முடிவு செய்தது. இதற்காக அனைத்து மாநிலங்களில் இருந்தும் ரேசன் கார்டுகள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு கணினியில் பதிவு செய்து மிகப்பெரிய ஆன்லைன் புள்ளி விபர தொகுப்பை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.
“ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு” எனும் பொது வினியோகத்திட்டத்தின் ஒருங்கிணைந்த நிர்வாகத்தை எப்படி அமல்படுத்துவது என்பது பற்றி நேற்று டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மத்திய உணவு மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அனைத்து மாநில உணவுத் துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் ஒருங்கிணைந்த நிர்வாகத்தில் உள்ள சிறு, சிறு இடையூறுகளை எப்படி தவிர்ப்பது என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

தற்போது ஆந்திரா, குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மராட்டியம், ராஜஸ்தான், தெலுங்கானா, திரிபுரா ஆகிய 10 மாநிலங்கள் பொது வினியோக திட்டத்தின் ஒருங்கிணைந்த நிர்வாகத்தில் தங்களை இணைந்துள்ளன.

மற்ற மாநிலங்களும் விரைவில் இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் கோரிக்கை விடுத்தார். இதை வலியுறுத்தி ராம் விலாஸ் பஸ்வான் பேசுகையில் கூறியதாவது:-
பொது வினியோகத் திட்டம் மூலம் இந்தியாவில் சுமார் 81 கோடி பேர் மானிய விலையில் அத்தியாவசிய உணவு தானியப் பொருட்களைப் பெற்று பயன் அடைந்து வருகிறார்கள். இவர்களுக்காக நாடு முழுவதும் இந்திய உணவுக்கழகம், மத்திய உணவுக் கழகம், மாநில உணவுக்கழகம் மற்றும் தனியார் உணவுக்கழகங்களின் கிட்டங்களில் சுமார் 61.2 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன.

உணவு தானியப் பொருட்களை அரசு வாங்குவது முதல் மக்களுக்கு வினியோகம் செய்வது வரை அனைத்தையும் தகவல் தொழில் நுட்ப கட்டமைப்புக்குள் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் பொது வினியோகத் திட்டத்தில் காணப்படும் முறைகேடுகளை முழுமையாக தடுக்க முடியும். அதோடு நாடு முழுவதும் பொது வினியோகத் திட்டத்தை சிறப்பாக அமல்படுத்த முடியும்.

“ஒரே நாடு, ஒரே ரே‌ஷன்” திட்டம் மூலம் பொது மக்கள், நாட்டில் எந்த மாநிலத்திலும், எந்த ஒரு ரேசன் கடையிலும் சென்று எளிதாக தங்களுக்கு தேவையான பொருட்களை பெற முடியும்.

உணவு கிட்டங்கிகளில் உள்ள உணவு தானியப்பொருட்களை உடனுக்குடன் வினியோகம் செய்யும் வகையில் ஆன்லைன் வசதி செய்யப்படும் போது இந்த திட்டத்தை மிகச் சிறப்பாக அமல்படுத்தப்படும்.

இந்த திட்டம் அமலுக்கு வந்தால் மாநிலம் விட்டு மாநிலம் சென்று வேலை செய்யும் ஏழை-எளிய கூலி தொழிலாளர்கள் மிகவும் பலன் அடைவார்கள். அவர்கள் தங்களது குடும்ப அட்டையை பயன்படுத்தி மிக குறைந்த விலையில் தங்களுக்கு தேவையான உணவுத் தானிய பொருட்களை தேவையான அளவுக்கு பெற முடியும்.

“ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு” திட்டம் அமலுக்கு வந்தால் பொது வினியோக திட்டத்தின் அனைத்து மோசடிகளும், ஊழல்களும் ஒழிக்கப்படும். குறிப்பாக ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப அட்டை வைத்திருப்பது தடுக்கப்படும். ஒரே நபர் சில மாநிலங்களில் பல அட்டைகள் வைத்திருக்கும் முறைகேடு முழுமையாக நீங்கும்.

அனைத்து மாநிலங்களும் ஒத்துழைத்தால் மத்திய அரசு இந்த திட்டத்தை நாடு முழுவதும் விரைவில் அமல்படுத்தும். உணவு தானியத்தை மிக சரியான முறையில் பயன்படுத்த வழிவகை உண்டாகும்.

இவ்வாறு ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்

கருத்துகள் இல்லை: