வியாழன், 27 ஜூன், 2019

ஜெகன்:340 கோடி தந்தால் தான் தமிழகத்துக்கு தண்ணீர் : ஆந்திரா முதல்வர் அறிவிப்பு

தினமலர் :'தமிழகத்திற்கு, கிருஷ்ணா நீரை வழங்க வேண்டும் என்றால், 340
கோடி ரூபாய் தர வேண்டும்' என, ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டமாக கூறி விட்டதால், தமிழக பொதுப்பணித் துறையினர், தண்ணீருக்காக தவம் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
சென்னையின் குடிநீர் தேவைக்காக, ஆண்டு தோறும், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, ஆந்திர அரசு வழங்கும் வகையில், இரு மாநிலங் களுக்கு இடையே, 1983ல், ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. அதன்படி, கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நீர், தமிழகத்திற்கு வருவதற்காக, கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த விதி  :
இந்த நீர், பூண்டி ஏரியில் சேமிக்கப்பட்டு, சென்னையின் குடிநீர் தேவைக்காக, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த கால்வாயை, ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை புனரமைத்து தந்த பின்னரே, தமிழகத்திற்கு முறையாக தண்ணீர் எடுத்து வர வழிவகை செய்யப்பட்டது. அதற்கு முன் வரை, தமிழகத்திற்கு, கிருஷ்ணா நீர் கிடைப்பதில், சிக்கல் நீடித்து வந்தது. அதனால், கிருஷ்ணா நீர் வரும் கால்வாயை, சாய்கங்கை கால்வாய் என்று, பொதுப்பணிதுறை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்

சாய்கங்கை கால்வாயின் பராமரிப்பு செலவை, ஆந்திரா - தமிழகம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என, ஒப்பந்த விதி உள்ளது. இதற்காக, தமிழக அரசு தரப்பில், ஆந்திர அரசிடம், 600 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டு உள்ளது.
கால்வாயில், பல்வேறு பாசன விரிவாக்க பணி களை செய்து, அதற்கும் ஆந்திர அரசு, தமிழகத் திடம் நிதி கேட்டு வருகிறது.இதை காரணம் காட்டி, தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க மறுத்து வருகிறது. வரும் ஜூலை முதல், அக்., வரை, 8 டி.எம்.சி., நீரை, ஆந்திர அரசு வழங்க வேண்டும்.இந்தநீர் கிடைத் தால், வறட்சியில் தவிக்கும், சென்னையின் குடிநீர் தேவையை, எளிதாக சமாளிக்க முடியும். எனவே, தண்ணீரை பெறுவதற்காக, ஆந்திர அதிகாரிகளை, சமீபத்தில், தமிழக பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள் குழு சந்தித்து பேசியது.
< கால்வாய் பராமரிப்பு கட்டணமாக, 25 கோடி ரூபாயை வழங்குவதாக, தமிழக அரசு தரப்பில்< உறுதியளிக்கப்பட்டது.இது குறித்து, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் அனில்குமார் ஆகியோ ரிடம் தெரிவிப்பதாக, ஆந்திர அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதையடுத்து, தமிழக அதிகாரிகள், சென்னை திரும்பினர். ஆனாலும், ஆந்திர அதிகாரிகளிடம், தொடர்ந்து பேசி வந்தனர்.
தற்போது, 'கால்வாய் பராமரிப்பு கட்டணமாக, 340 கோடி ரூபாயை வழங்கினால் மட்டுமே, ஜூலையில் தண்ணீர் திறக்க முடியும்' என, ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டமாக கூறி விட்டனர். இதனால், பொதுப்பணித் துறை அதிகாரிகள், அதிர்ச்சி அடைந்துஉள்ளனர். கால்வாய் பராமரிப்பு செலவிற்கான கணக்கு விபரங்களை தரவும், ஆந்திர அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால், தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர் கிடைப்பது, கேள்விக்குறியாகி உள்ளது. - நமது நிருபர்

கருத்துகள் இல்லை: