வியாழன், 27 ஜூன், 2019

சமூகநீதி காவலர் வி.பி.சிங் குறுகிய காலமே பிரதமராக இருந்து வரலாற்றில் மிகபெரிய திருப்பு முனையை ..

கதிர் ஆர்.எஸ் : எப்படி பெரியாரை கடவுள் மறுப்பு என்ற எல்லைக்குள்
சுருக்குகிறார்களோ அப்படித்தான் வி.பி.சிங் அவர்களை இட ஒதுக்கீடு என்ற வரையறைக்குள் சுருக்கி ஒரு சாரார் புறக்கணிக்கின்றனர்.
இந்தியாவின் பிரதமராக ஓர் ஆண்டு கூட நிறைவு செய்யாத வி.பி.சிங் செய்து முடித்த காரியங்கள் பல நூறு ஆண்டுகள் நினைவுக்கூறத்தக்கவை. பிரதமர் ஆவதற்கு முன்பும்,
பின்பும் அவர் செய்த சாதனைகளும் எடுத்த முடிவுகளும் எந்த ஒரு அரசியல் தலைவராலும் அத்தனை எளிதில் எடுக்க முடியாததாகும்.
முதல்வர் பதவியை துறந்ததாகட்டும், தான் சார்ந்த கட்சியின் மீதே கரிசனம் காட்டாமல் தான் வகித்த மத்திய அமைச்சர் பதவிக்கு மதிப்பளித்து எடுத்த முடிவுகளாகட்டும், அதனால் தலைமையுடன் ஏற்பட்ட முரண்களை விசிறியடித்து கட்சியை விட்டு வெளியேறியதாகட்டும், பிரதமர் பதவியை துறந்த பின்னும் தனது வாழ்நாளின் இறுதி மூச்சுவரை நோயுடன் போராடிய வேளையிலும் ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நடத்திய போராட்டங்களாகட்டும், உடலில் வலிமையிருந்தால் நான் இந்நேரம் ஒரு மாவோ போராளியாக இருந்திருப்பேன் என்று உறுதிபட முழங்கியதாகட்டும். எந்த அரசியல் வரம்புகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் இந்திய அரசியல் எனும் மாபெரும் உப்புகடலில் கலந்தபின்னரும் தனித்தன்மையுடன் நன்னீர் நதியாக பல்லாண்டுகாலம் மக்களுக்கான அரசியலை மட்டுமே முன்னெடுத்த மாவீரன் வி.பி.சிங் அவர்கள்.

1989ல் இந்திய அரசியலில் ஒரு மிகப்பெரிய புரட்சி நடத்தப்பட்டது. எந்த பெரிய தேசிய கட்சிகளின் தயவுமின்றி திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் ஒன்று சேர்ந்து அந்த புரட்சியை நிகழ்த்தினர். மாநில கட்சிகளின் பலம் என்ன என்பதும், அவை ஒன்று சேர்ந்து பணியாற்றினால் நாட்டில் எப்பேர்பட்ட மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று தில்லிக்கு தெரியவந்த காலகட்டம் அது.
நிலையற்ற அரசு என்ற விமர்சனங்கள் இருந்தாலும் அத்தனை ஆண்டுகளாக நிலையான அரசுகள் செய்த சாதனைகளை விஞ்சும் வகையில் சாதனை புரிந்த அரசாக வி.பி.சிங் அரசு இருந்தது. வி.பி சிங் அரசை கவிழ்க்க இரண்டு பிரதான கட்சிகளுமே மறைமுக கூட்டணி அமைத்தன என்று சொன்னால் அது மிகையில்லை.
“என்னை நீங்கள் தோற்கடிக்கலாம்; ஆனால் நான் இந்த நாட்டுக்கு செய்யவேண்டியதை எப்போதோ செய்து முடித்துவிட்டேன்” என்று பிரதமராக தனது இறுதி பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டார் வி.பி.சிங். தான் எப்போது அவுட் ஆவோம் என்று தெரியாமல் எத்தனை பந்துகள் மிச்சமிருக்கின்றன என்றும் தெரியாமல் அடித்து ஆடிய வி.பி.சிங் அடித்த சில சிக்சர்கள் கீழே:
1.இந்திய அரசியலமைப்பின் தந்தையாக இருந்தாலும் எந்த அரசு மரியாதையும் வழங்கப்படாமல் இருந்த பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கருக்கு "பாரத ரத்னா" பட்டம் வி.பி.சிங் ஆட்சியிலேயே வழங்கப்பட்டது.
2.நாடாளுமன்றத்தில் அம்பேத்கரின் படத்தை இடம் பெற வைத்த பெருமையும் வி.பி.சிங்கையே சேரும்.
3.ராஜிவ்காந்தி பிரதமராக இருந்த போது இலங்கைக்கு சென்றிருந்த இந்திய ராணுவத்தை திரும்ப பெற்றவர் வி.பி.சிங்.
4.1990 மே மாதம் சென்னை வந்திருந்த வி.பி.சிங்கிடம் செய்தியாளர்கள் விடுதலை புலிகளை தீவிரவாத இயக்கம் என்பதாக ஒரு கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், ”எவரையும் தீவிரவாதி என முத்திரை குத்தும் ரப்பர் ஸ்டாம்ப் எனது பாக்கெட்டில் இல்லை” என பதிலளித்தார்.
5.சங்பரிவார் நடத்திய ரத யாத்திரையை நிறுத்தி, அதற்கு தலைவராக இருந்த அத்வானியை பிஹார் முதல்வர் லல்லு பிரசாத் மூலம் கைது செய்ய வைத்தார். அந்த கைது அவர் பதவியையே பறிக்கும் என்று தெரிந்தபோதும் அதற்காக அவர் கவலைப்படவில்லை.
6.அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் வேண்டுகோளை ஏற்று காவிரி நடுவர் மன்றம் அமைத்திட உத்தரவிட்டது.
7.சென்னை மீனம்பாக்கத்திலுள்ள வெளிநாட்டு விமான தளத்துக்கு அண்ணா பெயரும், உள்நாட்டு விமான தளத்துக்கு காமராஜர் பெயரும் சூட்டவேண்டும் என்று கலைஞர் மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்ததும், அந்த வேண்டுகோளை ஏற்று அதனை விழா மேடையிலேயே அறிவித்தது.
8.பொற்கோயிலில் போய் இந்திரா காலத்தில் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார். கூடவே, பஞ்சாபில் அமைதி திரும்ப மனதார முன்னெடுப்புகள் எடுத்தார்.
9.வெகுகாலமாக கிடப்பில் கிடந்த மண்டல் கமிஷனின் பரிந்துரையான பிற்படுத்தபட்டோருக்கு 27% இடஒதுக்கீட்டை தனி மெஜாரிட்டி இல்லாத பொழுதும் தைரியமாக அமல்படுத்தியது.
இப்படி அரசியல்களத்தில் நாட்டின் பிரதமராக எந்த சமரசமுமின்றி துணிச்சலான பல முடிவுகளை எடுத்த விபி சிங் தனது அரசியல் வரலாற்றில் ஆரம்ப காலந்தொட்டே இத்தகைய அணுமுறை கொண்டவராகவே இருந்திருக்கிறார்.
உத்தரபிரதேசத்தில் தையா என்ற ராஜவம்சத்தைச் சேர்ந்தவர் விஷ்வநாத் பிரதாப் சிங் என்கிற வி.பி.சிங்.டமாண்டா என்கின்ற பகுதியை ஆண்டு வந்த ராஜ குடும்பத்தில், 1931-ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி பிறந்தார். இயற்பியல் படித்துக் கொண்டிருந்த காலத்தில், அவருடைய உச்சகட்ட லட்சியமாக இருந்தது, 'எதிர்காலத்தில் மிகப் பெரிய அணு விஞ்ஞானி ஆக வேண்டும்' என்பதுதான். காலம் அவரை அரசியல்வாதியாக்கியது. 1941-ம் ஆண்டு மாண்டாவின் ராஜ் பகதூராக வி.பி.சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரச குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவரது அரசியல் எளியோர்களுக்கானதாகவே இருந்தது. இளம் வயதிலேயே வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தில் ஈடுபாடு கொண்டதால், தன்னுடைய விளைநிலங்களை தானமாக அளித்த நிகழ்வு அவர் எப்படிப்பட்ட அரசியல்வாதி என்பதை உலகத்திற்கு உணர்த்துவதாக இருந்தது.
காங்கிரஸ் கட்சியின் மீது தீவிரமான ஈடுபாடு கொண்டிருந்த வி.பி.சிங். 1969-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் வென்று எம்எல்ஏ அமைச்சர் என்று அடுத்தடுத்து வளர்ந்து காங்கிரஸ்கட்சியின் மிக முக்கிய ஆளுமையானார். 1980-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநில முதல் அமைச்சராக இந்திரா காந்தியால் தேர்வு செய்யப்பட்டார்.
இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி வென்று ராஜீவ் காந்தி பிரதமரானபோது நிதியமைச்சர் ஆனார் சிங். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அவர் தயங்கவில்லை. திருபாய் அம்பானி, நடிகர் அமிதாப் பச்சனின் சகோதரர் என எந்த வி.ஐ.பி-யும், வி.பி.சிங்கின் தாக்குதலில் இருந்து தப்ப முடியவில்லை. அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் கெடுபிடிகளைத் தாங்கிக் கொள்ள முடியாத பெரும் பணக்காரர்கள், ராஜீவ் காந்தியிடம் முறையிடவே, நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் வி.பி.சிங்.
ஆனால், அடுத்து வந்த காலங்களில் பாதுகாப்புத் துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த நேரத்தில் ராணுவத் தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக ஸ்வீடன் வானொலி அறிவித்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க, அமைச்சர் பதவி மற்றும் கட்சிப் பதவியிலிருந்தே நீக்கப்பட்டார் வி.பி.சிங்.
1989-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் திமுக, தெலுங்கு தேசம், அசாம் கனபரிஷத் போன்ற மாநில கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கினார். இந்தக் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பா.ஜனதா வெளியில் இருந்து ஆதரித்த நிலையில், இந்தியாவின் பத்தாவது பிரதமரானார் வி.பி.சிங். அதிலும், டிசம்பர் 1, 1989 அன்று வி.பி.சிங் நாடாளுமன்றத்தின் அவையில் தேவிலாலை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். ஹரியானாவின் ஜாட் தலைவரான தேவிலால், பரிந்துரையை ஏற்க மறுத்து வி.பி.சிங்கையே பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார் என்பது கூடுதல் சிறப்பு. பா.ஜ.க ஒருபுறம், இடதுசாரிகள் மறுபுறம் என இருதுருவங்களின் ஆதரவுடன் ஆட்சியை மிகத் திறமையாக நடத்திக் கொண்டிருந்தார்.
அந்த காலகட்டத்தில் அவர் நிகழ்த்திக்காட்டிய சாதனைகளைத்தான் மேலே குறிப்பிட்டிருந்தோம். தனது பதவியை இழந்த பின்னர் மீண்டும் அந்த பதவியில் அமர விரும்பாத வி.பி.சிங், அதே கூட்டணியின் மூலம் 1996-ம் ஆண்டு தேவகௌடாவைவும், பின்னர் ஐ.கே.குஜ்ராலையும் பிரதமர் பதவியில் அமரத்த முக்கியப் பங்கு வகித்தார்.
ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்னர், பல ஆண்டுகள் பொதுவாழ்க்கையிலிருந்து ஒதுங்கியிருந்தவர், 2006-ம் ஆண்டு ஜனமோர்ச்சா கட்சியை மீண்டும் தொடங்கினார். 2006-ல் உத்தரபிரதேசத்தின் தாத்ரி பகுதியில், விவசாயிகளின் நிலங்களை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றியதைக் கண்டித்து, தீவிரமான போராட்டங்களில் பங்கெடுத்தார். தொடர் போராட்டங்களும் டயாலிசிஸ்களும் அத்துடன் சேர்ந்த புற்றுநோயும் உடலை வாட்ட, 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் காலமானார்.
'பிரதமர் பதவியைவிட முக்கியமானது தேசத்தின் ஒற்றுமை’ என பாராளுமன்றத்தில் முழங்கிய விபிசிங் இந்தியாவின் ஒற்றுமைக்கு மதச்சார்பின்மை எவ்வளவு முக்கியம் என்பதை மட்டுமல்லாமல், பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் எவ்வளவு தூய்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர்.
இந்திய அரசியலையே புரட்டிப்போட்ட அந்த செம்மல் பதவியில் நீடிக்கமுடியாமல் போனது இந்தியாவின் துரதிருஷ்டம் என்றால் அது மிகையல்ல.
தொகுப்பு: கதிர் ஆர்எஸ்

கருத்துகள் இல்லை: