புதன், 26 ஜூன், 2019

அசாம் குடிமக்கள் பட்டியல்: 1 லட்சம் பேர் நீக்கம்


தினமலர் : கவுகாத்தி : அசாமில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியலில் இருந்து மேலும் 1.02 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்க தேசத்தில் இருந்து சட்ட விரோதமாக அசாமில் குடியேறுபவர்களை கணக்கிடும் பெருட்டு, 1951 ம் ஆண்டு முதல் தேசிய குடிமக்கள் பதிவு வரைவு பட்டியல் புதுப்பிக்கப்பட்டு, வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் 40 லட்சத்திற்கும் அதிகமானவர்களின் பெயர்கள் அகற்றப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. இதில் லட்சக்கணக்கானவர்கள் மறுமதிப்பீட்டிற்காக விண்ணப்பித்தனர். இருந்தும் விண்ணப்பித்த 3.29 கோடி பேரில் 2.9 கோடி பேரின் பெயர்கள் மட்டுமே வரைவு பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இறுதி தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் வரும் ஜூலை 31 ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இதற்கான வரைவு பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களில் மேலும் 1.02 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. தேசிய குடிமக்கள் பதிவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் ஜூலை 11 ம் தேதி முதல் அமைக்கப்படும் உதவி மையங்களை அனுகி, உரிய ஆதாரங்களுடன் பதிவு செய்வதற்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: