வியாழன், 27 ஜூன், 2019

உங்களோடு அப்பவே வந்திருக்கணும்!’ – செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்?

செந்தில் பாலாஜி
தங்க தமிழ்ச்செல்வன்துரை.வேம்பையன் 0- vikatan.com/நா.ராஜமுருகன் : தமிழக அரசியலில் இப்போதைய ஹாட் டாபிக், டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன், ‘நான் விஸ்வரூபம் எடுத்தா, அவர் தாங்கமாட்டார்’ என்று பேசியதாக சொல்லப்படும் ஆடியோவும், தொடர்ந்து, ‘தங்கம் எடப்பாடி முயற்சியில் அ.தி.மு.கவுக்கு தாவப்போறாராமில்லே..’ என்ற பரபர தகவலும்தான். இந்த நிலையில், செந்தில் பாலாஜியும் தங்க தமிழ்ச்செல்வனிடம் பேசிகொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. செந்தில் பாலாஜியிடம் தங்கம், “நீங்க தி.மு.க போனப்பவே, நானும் தி.மு.க-வுக்கு வந்திருக்கணும். இந்நேரம் நானும் உங்களைப்போல மாவட்டச் செயலாளராகவும், ஆண்டிபட்டி அல்லது பெரியகுளம் எம்.எல்.ஏ-வாகவும் ஆகியிருப்பேன்” என்று புலம்பியதாக அதிரிபுதிரி தகவல்கள் றெக்கைக் கட்டுகின்றன.

அ.ம.மு.க-வை கலகலக்கவைத்துவிட்டு, முதலாவதாக கட்சி மாறியது செந்தில் பாலாஜிதான். 41 நாள்களிலேயே செந்தில் பாலாஜியை கரூர் மாவட்ட பொறுப்பாளராக ஆக்கினார் ஸ்டாலின். அதோடு, அ.ம.மு.க, அ.தி.மு.க-வில் இருந்து முக்கிய விக்கெட்களை தி.மு.கவுக்கு இழுத்துப்போட செந்தில் பாலாஜிக்கு பல்க் அசைன்மென்டையும் ஸ்டாலின் கொடுத்தார்.
ஸ்டாலின் மருமகன் சபரீசன், திருச்சி கே.என்.நேரு ஆகியோரோடு, அந்த அசைன்மென்டில் இறங்கினார் செந்தில் பாலாஜி. அ.தி.மு.க தரப்பில் சில எம்.எல்.ஏ-க்களின் மனதை கரைத்து, கலைத்துப்போட்டது இந்த டீம். இந்த நிலையில், அ.ம.மு.க-வில் இருந்து தங்க தமிழ்ச்செல்வனைதான் முதல் விக்கெட்டாக வீழ்த்த அப்போதே முயற்சி செய்தார் செந்தில் பாலாஜி.

“தி.மு.கவுக்கு வந்தால், எனக்கு கிடைத்ததுபோல் மாவட்டப் பொறுப்பாளர் பதவி கிடைக்கும்; கூடவே, ஆண்டிபட்டி அல்லது பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் சீட், இல்லைன்னா தேனி நாடாளுமன்றத் தொகுதியில் சீட் கிடைக்க நான் நான் கியாரண்டி” என்று தூபம் போட்டுப் பார்த்ததாக சொல்லப்பட்டது. ஆனால், அப்போது, தங்க தமிழ்ச்செல்வன், “அம்மா கட்டிக்காத்த கட்சிக்கு எதிர்நிலையில் இருக்கும் கட்சிக்கு வரமாட்டேன்” என்று நழுவிக்கொண்டதாக சொல்லப்பட்டது. செந்தில் பாலாஜி எடுத்த அத்தனை முயற்சிகளும் வீணாகதான் போனது.

இந்த நிலையில்தான், தங்க தமிழ்ச்செல்வனே கட்சி மாறும் மூடுக்கு வந்து, அ.ம.மு.க நிர்வாகிகளிடம் டி.டி.வி.தினகரனைப் பற்றி எக்குத்தப்பாக பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. அதன்பிறகு, தங்கம், `தொடர்பு எல்லைக்கு அப்பால்’ போய்விட்டார். “விஸ்வரூபமெல்லாம் அவர் எடுக்கமாட்டார். என்னைப்பார்த்தால், பொட்டிப்பாம்பாக அடங்கிவிடுவார். அவரை விரைவில் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவோம். அவரைப் பின்னால் இருந்து இயக்குவது யார் என்பது விரைவில் தமிழக மக்களுக்குத் தெரியவரும்” என்று டி.டி.வி.தினகரன் பேட்டிக் கொடுத்ததில் இருந்தே, இந்த பரபர அரசியல் பஞ்சாயத்து உண்மைதான் என்பது ஊர்ஜிதமாகி இருக்கிறது.

இந்த நிலையில்தான், “தங்கத்தை அ.தி.மு.க-வுக்கு இழுக்க முயற்சி செய்தது, முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். தங்கத்தை அ.தி.மு.க-வில் சேர்ப்பதின்மூலம், ஓ.பி.எஸ்ஸை தேனியில் தட்டிவைக்கலாம் என்று முதல்வர் கருதுகிறார். இதன்மூலம், ஒற்றைத்தலைமை என்ற சலசலப்பையும், தேனியில் புதிதாக உதயமாகி இருக்கும் சக்தியான ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் குமாரையும் அடக்கிவைக்கலாம்னு கணக்கு பண்ணுகிறார். ஆனால், ஓ.பி.எஸ்ஸோ, `தங்கம் அ.தி.மு.கவுக்கு வந்தால், இதெல்லாம் அவர் மூலமாக தனக்கு நடக்கும்’ என்று பயப்படுகிறார். அதனால், தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களை வைத்து, முதல்வரை மிரட்ட இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். இந்நிலையில்தான், செந்தில் பாலாஜி இடையில் புகுந்து தங்கத்தை தி.மு.க-வுக்கு கொத்திக்கொண்டு போக முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது” என்று அ.தி.மு.க தரப்பிலேயே சொல்கிறார்கள்.

இதுபற்றி, செந்தில் பாலாஜியிடமே பேச, அவரை பலமுறை தொடர்புகொண்டோம். அவரது போன் சுவிட்ச் ஆஃப்லேயே இருந்தது. அவருக்கு நெருக்கமான தி.மு.க புள்ளி ஒருவரிடம் பேசினோம். “ஆமாம். இரண்டு நாள்களாக செந்தில் பாலாஜி தங்கத்தை தி.மு.க-வுக்கு இழுக்க பேசிவருவது உண்மைதான். செந்தில் பாலாஜியிடம் தங்கம், `பேசாம, நான் உங்ககூட அப்பவே தி.மு.க-வுக்கு வந்திருந்தால், இந்நேரம் நானும் உங்களைப் போல மாவட்டச் செயலாளர் ஆகி இருப்பேன்; பெரியகுளத்துக்கோ அல்லது ஆண்டிபட்டிக்கோ எம்.எல்.ஏ ஆகி இருப்பேன்ல’ என்று வருத்தப்பட்டிருக்கிறார். அதுக்கு செந்தில் பாலாஜி, `இப்பயும் ஒண்ணும் குறைஞ்சுபோயிடலை. உடனே, தி.மு.க-வுக்கு வாங்க. தளபதியிடம் பேசி, நீங்க நினைக்கும் அத்தனை பதவிகளையும் வாங்கித் தர்றேன்’னு சொன்னாராம். ஆனா, தங்கம், `இப்போதும் என்னால் அம்மா விசுவாசத்தை விட்டுட்டு தி.மு.க-வுக்கு வர மனமில்லையே. அ.தி.மு.க-வுக்கு போறதுல எனக்கு சங்கடம் இல்லை. ஆனா, அங்க ஓ.பி.எஸ் என்னை விடமாட்டேங்குறார்’னு புலம்பினதா சொல்றாங்க.

ஆனாலும் விடாத செந்தில் பாலாஜி, `தி.மு.கவுல இருந்து வந்ததுதானே அ.தி.மு.க கட்சியே. அ.தி.மு.க-வுல உள்ளவங்கதான் அம்மாவுக்கு துரோகம் பண்றாங்க. சஞ்சலப்படாம தி.மு.க-வுக்கு வாங்க. தேனி மாவட்ட தி.மு.க-வுல மூக்கையாவைதவிர சொல்லிக்கிறமாதிரி ஆள்கள் இல்லை. அதனால், தி.மு.க-வுக்கு வந்துட்டு, உங்களை குப்புறத் தள்ள பார்க்கிற ஓ.பி.எஸ்ஸை ஒருவழி பண்ணிடலாம்’னு பேசினாராம். ஆனா, அதுக்கு, `பார்ப்போம்’னு பட்டும்படாமலும் சொன்னாராம் தங்கம். நேற்று (25-ம் தேதி) கரூர் கோர்ட்டுக்கு கரூர் ஆட்சியர் போட்ட வழக்கில் ஜாமீன் வாங்க வந்த செந்தில் பாலாஜியிடம், `தங்கம் தி.மு.க-வுக்கு வரப்போறதா சொல்றாங்களே’னு கேட்டேன். அதைக்கேட்டு பதில் ஏதும் சொல்லாமல் சிரித்த செந்தில் பாலாஜி, `இப்போதைக்கு ஒண்ணும் சொல்றதுக்கில்லே. நல்லது நடக்கும். ஓரிரு நாளில் நல்ல சேதி சொல்றேன்’னு பூடகமா சொல்லிட்டுப் போனார். அதன்பிறகு எங்கே போனார்னு தெரியலை. அவரது மொபைலும் சுவிட்ச் ஆஃப்ல இருக்கு. தங்கத்தோட முதல் சாய்ஸ் அ.தி.மு.கதான். அதற்கு, ஓ.பி.எஸ்ஸால் குந்தகம் வந்தால், யோசிக்காமல் செந்தில் பாலாஜி உபயத்தால் தி.மு.க-வுக்கு தாவிவிடுவார். இதுதான் நடக்கப்போகுது” என்று கண்சிமிட்டியபடி, முடித்தார்.
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…!.
vikatan.com

கருத்துகள் இல்லை: