வியாழன், 21 மே, 2020

ஸ்டாலினுக்கு வி.பி.துரைசாமி சொன்ன பதில்!.

 தான் வகித்து வரும் துணைப் பொதுச் செயலாளர் பதவி தனக்குக் கிடைக்காது என்றும், அந்தப் பதவி ஆ.ராசாவுக்குத் தரப்படப் போகிறது என்ற அதிருப்த்தியா?
ஸ்டாலினுக்கு வி.பி.துரைசாமி சொன்ன பதில்! மின்னம்பலம் : :  மே 18ஆம் தேதி மாலை திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வி.பி.துரைசாமி தமிழக பாஜக தலைவரான எல்.முருகனை கமலாலயத்தில் சென்று சந்தித்து வாழ்த்தியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழக பாஜகவின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான குறிப்பைத் தவிர வேறு விளக்கங்கள் உடனடியாக பகிரப்படவில்லை.
இதுகுறித்து வி.பி.துரைசாமியிடம் கருத்துக் கேட்க பல பத்திரிகையாளர்கள் முயன்றும் அவர் பிடி கொடுக்கவில்லை. ‘திமுகவில் மரியாதை இல்லை! - வி.பி. துரைசாமி - முருகன் சந்திப்பு பின்னணி!’ என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் வெளியான செய்தியில், வி.பி.துரைசாமி நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் தனது நண்பர்களிடம் இந்தச் சந்திப்பு குறித்து பேசியதைப் பதிவு செய்திருந்தோம்.

மேலும் திமுக தலைமை அவர் மீது கடுமையான கோபத்தில் இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தோம்.
இந்த நிலையில் அறிவாலயத்தில் விசாரித்தபோது இந்த விவகாரத்தின் கூடுதல் தகவல்கள் கிடைத்தன.
“வி.பி.துரைசாமி பாஜக தலைவரைச் சந்தித்துவிட்டார் என்ற தகவல் பரவிய சில மணி நேரத்திலேயே திமுக தலைவர் ஸ்டாலினின் உதவியாளர் தினேஷ் போன் மூலம் வி.பி.துரைசாமியைத் தொடர்புகொண்டிருக்கிறார். அப்போது, ‘என்ன... இப்படி பாஜக தலைவரை பாத்திருக்கீங்களே? என்ன ஏதுனு தலைவர் கேட்கச் சொன்னார்’ என்று கேட்க, அதற்கு வி.பி.துரைசாமி, ‘அதெல்லாம் ஒண்ணுமில்லை. என் மச்சான் பாஜக தலைவர் முருகனை பார்க்கணும்னு ரொம்ப நாளா சொல்லிக்கிட்டிருந்தாப்ல. எனக்கும் நண்பர்தான் அவரு. அதான் போய் பார்த்துட்டு வந்தேன். இந்தச் சந்திப்புல வேற ஒண்ணும் இல்லையே. ஏன் வேற ஏதாச்சும் பேசிக்கிறாங்களா என்ன?’ என்று கேட்டிருக்கிறார். இந்தத் தகவலை அப்படியே ஸ்டாலினிடம் சொல்லிவிட்டார் தினேஷ்” என்கிறார்கள்.
இதேநேரம் வி.பி.துரைசாமியை மையமாக வைத்து இன்னொரு தகவலும் உலா வருகிறது. அடுத்து வரும் கட்சி அமைப்புத் தேர்தலுக்குப் பின் இப்போதைக்கு தான் வகித்து வரும் துணைப் பொதுச் செயலாளர் பதவி தனக்குக் கிடைக்காது என்றும், அந்தப் பதவி ஆ.ராசாவுக்குத் தரப்படப் போகிறது என்றும் வி.பி.துரைசாமிக்குத் தலைமைக்கு நெருக்கமான நபர்களிடம் இருந்து தகவல் கிடைத்திருக்கிறது. தன்னை துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விடுவித்துவிட்டு, உயர் நிலை செயல் திட்டக் குழு உறுப்பினராக நியமித்துவிடுவார்கள் என்றும் தகவல் வர, இதனால் நொந்துபோன துரைசாமி தனது அதிருப்தியைக் காட்டவே பாஜக தலைவர் முருகனை நேரில் சென்று சந்தித்திருக்கிறார் என்றும் அறிவாலய வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
-வேந்தன்

கருத்துகள் இல்லை: