வெள்ளி, 22 மே, 2020

சின்னகுத்தூசி நினைவு நாள் (மே 22).. திராவிட இயக்க சிந்தனையாளர்

திரு.சின்னகுத்தூசி
Govi Lenin : நடுநிலை முகமூடிகளைக் கிழித்த பேனா
மூத்த பத்திரிகையாளர்-திராவிட இயக்க சிந்தனையாளர் சின்னகுத்தூசி நினைவு நாள் (மே 22)
சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு சிறிய வாடகை அறையில், படுப்பதற்கான இடம் தவிர மற்ற எல்லா இடத்திலும் புத்தகங்களை நிறைத்து வைத்து, வாழ்நாளெல்லாம் அறிவுச்செல்வம் தேடியவர்.
ஏற்றுக் கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தவர். தான் ஆதரித்த இயக்கத்தையும் அதன் தலைமையையும் நோக்கி வந்த எதிர்ப்புக் கணைகள் அனைத்திற்கும் தன் பேனாவையே கேடயமாகப் பயன்படுத்தியும், வாளாகச் சுழற்றியும் கருத்து யுத்தத்தில் கலங்காது நின்றவர். நடுநிலை என்ற பெயரில் உலவும் போலிகளின் முகமூடிகளைக் கிழித்துத் தொங்கவிட்டவர்.
எந்த இடத்திலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் திராவிட இயக்கத்திற்கும் அதனுடைய கொள்கைகளுக்காகவும் மட்டுமே தன்னுடைய சிந்தனையையும் பேனாவையும் அர்ப்பணித்தவர் மூத்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசி.

பிறப்பால் பார்ப்பனர் என்றாலும் சிறு வயதிலேயே பூணூல் அணிய மறுத்து, உறவுகளிடமிருந்து விலகியவர். திராவிடக் கொள்கையே அவரது சொந்தமானது. தந்தை பெரியாரால் திருச்சியிலுள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டு, அவருடைய செலவிலேயே புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கப்பட்டு, சின்னகுத்தூசி என்று பின்னாளில் புனை பெயர் கொண்ட திருவாரூர் தியாகராஜனை படிக்கச் செய்தார் பெரியார். குன்றக்குடி அடிகளார் நடத்திய பள்ளியில் சிறிது காலம் சின்னகுத்தூசி பணியாற்றினார்.
பின்னர் பத்திரிகை துறையில் முழுமையாக ஈடுபட்டார். சின்னகுத்தூசியின் எழுத்துகள் பெரியாரின் கொள்கைகளையும் , திராவிட இனத்தின் நலனையும், தமிழ்மொழியின் வளர்ச்சியையும் வலியுறுத்தியவை. அந்த நிலையிலிருந்து அவர் ஒருபோதும் மாறியதில்லை.
அவர் தன் வாழ்நாளில் ஏற்றுக்கொண்ட ஒரே விருது, முரசொலி அறக்கட்டளை வழங்கிய விருது மட்டும்தான், அந்த விருதை 30-1-2006 அன்று வழங்கிப் பேசிய ஓய்வறியா உழைப்பாளியான கலைஞர், “எனக்கு சோர்வு சிறிது ஏற்பட்டால், களைப்பு சிறிது தோன்றினால், இல்லத்திலிருந்து நான் முரசொலி அலுவலகத்திற்கு செல்கிறேன் என்றால் எழுதுவதற்காக மாத்திரமல்ல. ஏற்பட்ட சோர்வை நீக்க-கவலைகளைப் போக்கிக்கொள்ள அங்கே சென்றால் சின்னகுத்தூசியைப் பார்க்கலாமே, உரையாடலாமே அதன் காரணமாக மனதிற்கு ஒரு நிம்மதியைத் தேடிக்கொள்ளலாமே என்பதற்காகவும் நான் முரசொலி அலுவலகத்திற்குச் செல்வதுண்டு” என்றார். அவை விருதினை விடவும் மதிப்புமிகு சொற்கள்.
பொடா சட்டத்தில் நக்கீரன் ஆசிரியரை கைது செய்ய போலீசார் தீவிரமாகத் தேடியபோது, இவரது அறைக்கு வந்து விசாரித்தனர். ஒரு தீவிரவாதியை விசாரிப்பது போல கேள்விகள் இருந்தன. நீண்ட நேர விசாரணைக்கு, பொறுமையாக பதில் சொல்லி, போலீசாருக்கு இரண்டு முறை டீ வாங்கிக் கொடுத்து உபசரித்தார்.
புத்தகங்கள் நிறைந்த அறையை சோதனையிட போலீசார் முயன்றபோது அவர்களிடம், "இந்த அறையில் எந்த ஆயுதமும் கிடையாது. ஒரேயொரு வெடிகுண்டுதான் இருக்கு" என்று சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பெரியார் படத்தை கைக்காட்டினார். போலீசார் நடையைக் கட்டினர் .
திருமணம் செய்து கொள்ளாமல் எளிமையான வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, நேர்மைமிகு சுயமரியாதைக்காரராக கடைசிவரை வாழ்ந்தவர் சின்னகுத்தூசி.
திருவள்ளுவர் ஆண்டு 2051 வைகாசி 9

கருத்துகள் இல்லை: