ராதா மனோகர் : முழு இந்தியாவுமே ராகுலை இந்திய பிரதமராக ஏற்றுக்கொள்ள தயங்கிய போது,
ராகுல் காந்திதான் நமது பிரதமர் வேட்பாளர் என்று ஓங்கி குரல் கொடுத்து தூக்கி வைத்தவர்
முதல்வர் ஸ்டாலின்.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பின்புதான் அகில இந்திய ரீதியில் திரு ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு உரியவர்தான் என்ற கருத்து உறுதியானது.
அதுவரை எதிர்க்கட்சிகளின் முகாமில் எல்லோராலும் ஏற்று கொள்ளகூடியாய் பிரதமர் என்று ஒருவரும் அடையாளம் காணப்படவில்லை.
மம்தா பானர்ஜி போன்ற பலரின் பெயர்கள் அடிபட்டாலும் ராகுல் பெயரை ஸ்டாலின் முன்மொழிந்த பின்பு எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் ராகுல்தான் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கட்சி பேதங்களை கடந்து முழுத்தமிழ்நாடும் இதை வரவேற்றது என்றால் அது மிகையில்லை.
அந்த நம்பிக்கையை அந்த அங்கீகாரத்தை இவ்வளவு விரைவில் திரு ராகுல் காந்தி இழப்பாரா என்பது இந்த நிமிடம் வரை பதில் இல்லாத வெறும் கேள்வியாகவே நீடிக்கிறது
இந்த நீண்ட மௌனம் .. திரு ராகுல் மீது தமிழர்கள் வைத்த நம்பிக்கையை நிதானமாக ஆனால் நிச்சயமாக தகர்க்கிறது.
ஏறக்குறைய இதே போன்றதொரு நிலைதான் பிகார் சட்டமன்ற தேர்தலிலும் நடந்தது.
தேஜஸ்வி லாலுவின் கையை எவ்வளவு முறுக்க முடியுமோ அவ்வளவு முறுக்கி தகுதிக்கு மிஞ்சி 61 தொகுதிகளை பறித்து போட்டியிட்டு அதிலும் ஆறே ஆறு தொகுதிகளில் மாத்திரம் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
அது மட்டுமல்ல பேராசையால் அடாவடித்தனமாக தேஜஸ்வியின் கட்சி வேட்பாளருக்கு எதிராகவே பல காங்கிரஸ்காரர்கள் போட்டியிட்டு குழிபறித்தனர்.
ஆக மொத்தம் நிச்சயமாக தேஜ்சிவியின் ராஷ்ட்ரியே ஜனதா தளம் ஆட்சியை பிடிக்கும் என்று எல்லோரும் நம்பிய அந்த தேர்தலில் மீண்டும் பாஜக கூட்டணியே பதவிக்கு வந்தது.
அதே போன்றதொரு நாடகத்தை தமிழ்நாட்டிலும் நடத்த சூழ்ச்சி நடக்கிறது.
தெரிந்தோ தெரியாமலோ திரு ராகுல் காந்தி அதற்கு பலியாகி விட்டார்.
இனி மாநில கட்சிகளின் கூட்டணிதான் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வரும் என்ற நிலையை காங்கிரசின் இந்த தடுமாற்றம் அல்லது நிலை மாற்றம் உறுதி செய்து விட்டது.
ஒருவேளை மீண்டும் காங்கிரஸ் திமுக கூட்டணி ஒற்றுமை ஏற்பட்டாலும் இப்போது உண்டான கசப்பு தேர்தல் வாக்களிப்பில் நிச்சயமாக உணரப்படும்.
திரு ராகுல் காந்தி அவர்களே மிகவும் நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக