மாலைமலர் : “அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார்.
அமெரிக்கா மீது பல நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக குற்றம்சாட்டி இந்த வரி நடவடிக்கையை மேற்கொண்டார்.
சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ன்கீழ் இந்த பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தினார்.
உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி உள்பட அமெரிக்க அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், டிரம்ப் விதித்த வரிகளுக்கு எதிராக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் எதிர்க்கட்சி உள்பட பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.இதில் நேற்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் டிரம்ப் அமல்படுத்திய வரி விதிப்பு செல்லாது என்று தெரிவித்தனர்.
6 நீதிபதிகள் அளித்த தீா்ப்பில், வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க பாராளுமன்றத்துக்குத்தான் அரசமைப்புச் சட்டம் மிகத் தெளிவாக வழங்கியுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தை வகுத்தவா்கள் அந்த அதிகாரத்தை அரசு நிா்வாகத்துக்கு அளிக்கவில்லை.
எனவே டிரம்ப்பின் வரி விதிப்புகள் செல்லாது என்று அறிவித்தனர். 3 நீதிபதிகள் டிரம்ப்பின் வரி விதிப்புகள் சட்டபூா்வமானவைதான் என்று தெரிவித்தனா்.
பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்படி டிரம்ப்பின் வரி விதிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்தார். இந்த தீர்ப்பால் ஏற்பட்டுள்ள பின்னடைவை சமாளிக்க உலகளாவிய 10 சதவீத வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்து உள்ளார்.
அரசியலமைப்பு சட்டம் 122-ன் கீழ் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் தற்காலிகமாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரசியலமைப்பு சட்டம் 232 மற்றும் 301 ஆகிய பிரிவுகளின் கீழ் விதிக்கப்பட்ட வரிகள் இன்னும் நடைமுறையில் உள்ளன.
தற்போது கூடுதலாக பிரிவு 122-ன் கீழ் 10 சதவீத உலகளாவிய கட்டணத்தை விதிக்கும் உத்தரவில் நான் கையெழுத்திடுவேன்.
இந்த சட்ட பிரிவு அனைத்து நாடுகளுக்கும் 150 நாட்கள் வரை 15 சதவீதம் வரி விதிக்க அனுமதிக்கிறது.
அமெரிக்க அரசு விதித்து உள்ள வரிகள் தொடரும். எதுவும் ரத்தாகாது.அமெரிக்காவுக்கு எதிராக நியாயமற்ற முறையில் வரிகளை விதிக்கும் நாடுகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்.
வரி விதிப்புகளை செயல்படுத்த மாற்று வழிகள் உள்ளன என்றார்.இதற்கிடையே கூடுதல் 10 சதவீத வரி விதிப்பு உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார்.
புதிய வரி உத்தரவில் கையெழுத்திட்ட பிறகு, டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், இந்த வரி உடனடியாக அமலுக்கு வருகிறது என்று தெரிவித்தார்.
இந்த உத்தரவில், சில குறிப்பிட்ட கனிமங்கள், இயற்கை வளங்கள் மற்றும் உரங்கள், ஆரஞ்சு மற்றும் மாட்டிறைச்சி போன்ற சில வேளாண் பொருட்கள், மருந்துகள் சில மின்னணு பொருட்கள் மற்றும் சில வாகனங்கள் உள்பட பல்வேறு வகையான விலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பரஸ்பர வரிக்கு பதிலாக அரசியலமைப்பு சட்டம் 122 சட்டத்தை தற்காலிகமாக டிரம்ப் பயன்படுத்தி உள்ளார்.
இந்த சட்ட பிரிவு மூலம் விதிக்கப்படும் வரி 150 நாட்கள் வரைதான் அமலில் இருக்கும். அதன் பின்னரும் வரி தொடர வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் டிரம்ப் மற்ற விதிகளை பயன்படுத்தியும் சில வரிகளை விதித்தார். இதில் வர்த்தக விரிவாக்க சட்டம் 1962 பிரிவு 232-யை பயன்படுத்தி பல்வேறு வரிகளை விதித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை எட்டிய நாடுகள், பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட வரிகளுக்குப் பதிலாக தற்போது புதிய 10 சதவீத வரிகளை எதிர்கொள்வார்கள்.
இந்த தற்காலிக வரி விதிப்பு வருகிற 24-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. வேறு ஒரு அதிகாரம் செயல்படுத்தப்படும் வரை இந்த புதிய வரி அமலில் இருக்கும். அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளும் இதற்கு கட்டுப்பட வேண்டும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டிரம்ப் தற்போது அறிவித்துள்ள உலகளாவிய 10 சதவீத வரி விதிப்பு அறிவிப்பால் இந்தியா மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைந்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பிற்குப் பிறகு, இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்காவில் 10 சதவீத பரஸ்பர வரி மட்டுமே விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் அது தற்காலிகமானதுதான். வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை முடிவு செய்யப்பட்ட வரி விகிதங்களை செயல்படுத்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதால் 10 சதவீத வரி தற்காலிகமானது என்று வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
இதன்மூலம் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்கனவே விதித்த வரிகளை அமல்படுத்த டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.”,
Post Views: 8
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக