திங்கள், 18 மே, 2020

இந்தியா சுயசார்பு உள்ள நாடாக மாறும் ..வாருங்கள் வல்லரசாவோம் .. தமிழக பாஜக அருள்வாக்கு

hindutamil.in : ‘‘பாங்குறு நாடுகள் தமக்கொரு சேதி,
பண்டு போல் ஆண்டிடும் பாரத ஜாதி’’
கடந்த 1931-ஆம் ஆண்டில் சுதந்திரப் போராட்ட தியாகி அர்த்த நாரீஸ்வரர் வர்மாவால் எழுதப்பட்ட கவிதை வரிகள் இவை.
நமது பாரதப் பிரதமர் முன்னெடுத்துள்ள சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இனி இந்த வரிகள் நிஜமாக போகின்றன. இந்த சுயசார்பு இந்தியா சாத்தியம் தானா? இதன் மூலம் உலக மயமாக்கல் கொள்கையில் இருந்து விலகி நாம் தனிமைப்பட்டு விடுவோமா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்படுவதை காண முடிகிறது. எப்பேற்பட்ட தீமையிலும் ஒரு நன்மை இருக்கும். இந்த
கரோனா என்கிற பெருந்தீமை, தற்சார்போடு வாழ முடியும் என்கிற தன்னம்பிக்கையை நமக்கு அளித்திருக்கிறது.
இடும்பைக்கு இடும்பை படுப்பர்
இடும்பைக்கு இடும்பை படா தவர்

என்ற தெய்வப்புலவர் வாக்குப்படி இந்த பேரிடரிலும் பேரரசாக எழுந்து நிற்க முயற்சிக்கிறது இந்தியா. இந்தக் கரோனா பேரிடர் ஆரம்பிப்பதற்கு முன்பு PPE என்று சொல்லப்படுகின்ற ‘‘நுண் நோய்க்கிருமி பாதுகாப்பு ஆடை’’ உற்பத்தி என்பது இந்தியாவில் இல்லை. ஆனால் இன்று, இந்த குறுகியகால அளவில் ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் PPE ஆடைகளையும் N-95 மாஸ்க்குகளையும் உற்பத்தி செய்கின்ற அளவுக்கு நாம் முன்னேறி உள்ளோம். அது மட்டுமல்ல, சுய உதவி குழுக்கள் மூலமாக மட்டுமே 3 கோடி முகக் கவசங்களும் 1.2 லட்சம் லிட்டர் கிருமி நாசினியும் தயாரித்துள்ளோம்.

இத்தனை தகுதியுள்ள நாம், இத்தனை நாட்களாக அதை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளோம். அதைபோல இறக்குமதி செய்யும் அத்தனை பொருட்களையும் இனி உள்நாட்டிலேயே தயாரிக்க போகிறோம்.
பொருளாதாரம், உட்கட்டமைப்பு, அதிநவீன தொழில்நுட்ப அடிப்படையிலான செயல்பாடுகள், மக்கள் வளம்,தேவை மற்றும் பூர்த்தி ஆகியவை "தற்சார்பு இந்தியா"வை சாத்தியப்படுத்துவதற்கு அவசியம் என்கிறார் நமது பிரதமர் மோடி அவர்கள். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில், பொருளாதார முன்னெடுப்புகளுக்காக, 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்குகிற அளவுக்கு நம்முடைய பொருளாதாரமும் RBI-யும் நல்ல நிலைமையில் உள்ளன. அதாவது 20 லட்சம் கோடி ரூபாய் என்பது நமது பங்காளி நாடான
பாகிஸ்தானில் ஒட்டுமொத்த உள்நாட்டுஉற்பத்தியை விட 2 மடங்கு என்கிறார்கள். இந்த பொருளாதார ஊக்குவிப்புகளுக்காக நம் இந்தியாவை ஐ.நா. சபையின் சர்வதேச பொருளாதார கண்காணிப்புப் பிரிவு தலைவர் ஹமீத் ரஷீத் வெகுவாக பாராட்டி உள்ளார்.
அடுத்து 'உட்கட்டமைப்பு': ஒரு நாளைக்கு நாம் போடும் தேசிய நெடுஞ்சாலைகளின் அளவு ஒரு நாளைக்கு 30 கிலோ மீட்டர், ரயில் பாதைகள் மின்மயமாக்கலின் அளவு கடந்த ஆண்டு 5,276 கிலோ மீட்டர், நான்குவழிச்சாலைகள் எட்டு வழிச் சாலைகளாக மாறத் தொடங்கியுள்ளன. புல்லட் ரயில் போன்ற முன்னெடுப்புகளை இந்தியா தொடங்கியுள்ளது. அடுத்தடுத்த 5 ஆண்டுகளில் 100 லட்சம் கோடி உட்கட்டமைப்புளுக்காக முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மக்கள் ஆதரவோடு, துரிதமாக செயல்படுத்தப்படும் பட்சத்தில் வல்லரசு நாடுகளுக்கு நிகரான உட்கட்டமைப்பை நாம் வெகு விரைவில் அடைய முடியும்.
அடுத்து, அதிதொழில்நுட்ப அடிப்படையிலான செயல்பாடுகளில் பெரும் மாற்றத்தை சந்தித்து வருகிறோம். உதாரணத்துக்கு UPI எனப்படுகிற United Payment Interface அடிப்படையிலான பண பரிவர்த்தனை. நாம் பயன்படுத்துகிற bhim, g pay, phone pe போன்ற செல்போன் செயலிகள் இதன் அடிப்படையிலேயே செயல்படுகின்றன. இது மத்திய அரசால் தயாரிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்ட ஒரு முறையாகும். இப்போது கூகுள் நிறுவனம் இந்தியாவின் யுபிஐ மேற்கோள்காட்டி இதுபோன்ற ஒரு செயல்பாட்டை செய்வதற்கு அமெரிக்க அரசை பரிந்துரைத்துள்ளது.
ஏன், இந்த கரோனோ கால கட்டத்தில் குறுகிய காலத்தில், வெறும் 500 ரூபாய் செலவில் பரிசோதனை செய்யும் அளவில், பேப்பர் அடிப்படையிலான டெஸ்ட் கிட்களை இந்திய அரசு நிறுவனமான CSIR-Institute of Genomics & Integrative Biology (IGIB) கண்டறிந்துள்ளது.
அடுத்தது 'மக்கள் வளம்'. இயற்கையிலேயே மனித வளம் நிறைந்த ஒருநாடு இந்தியா. அதிலும் இளைஞர்களை 70 சதவீதம் அளவுக்கு கொண்டுள்ள ஒரு நாடு. உலக அரங்கில் 130 கோடி நுகர்வோர்கள் உள்ள நாடு. உலகின் ஆறில் ஒரு பங்கு நுகர்வோர்களை கொண்ட நாம், நம் திறனை அதிகரிப்பதன் மூலம், முதலில் நமக்கான தேவையை நாமே உற்பத்தி செய்து உறுதி செய்து கொள்ள முடியும். 130
கோடி நுகர்வோர்களை நம்பி உற்பத்தியை பெருமளவு அதிகரிக்கலாம். திறன் மேம்பாடு சார்ந்த 'ஸ்கில் இந்தியா' போன்ற திட்டங்கள் இதற்கு பெருமளவு உதவி புரிகின்றன.
நமது தேவை மற்றும் பூர்த்திக்கேற்ப உள்நாட்டு தயாரிப்பை அதிகரிக்க அதிகரிக்க இறக்குமதியின் அளவு குறைந்து கொண்டே வரும். நமது தேவை பூர்த்தி அடைந்த பிறகு உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வது அதிகரிக்கும்.
இதன் மூலமாக உலக மயமாக்கல் கொள்கையில் இருந்து விலகி நாம் தனிமைப்பட்டு விடுவோமா என்ற கேள்விக்கு இடமில்லாமல் போய்விடும். வியாபாரம் என்பதும், நல்ல நட்பு என்பதும், வாங்கும் போது மட்டும் அல்ல,விற்கும் போதும் நீடிக்கதான் போகிறது. உதாரணமாக, ஹைட்ராக்ஸிகுளோரோகுவின் உள்ளிட்ட மருந்துகளை நம் தேவைக்கு வைத்துக் கொண்டு மீதமுள்ள மாத்திரைகளை உலக நாடுகளுக்கு வழங்கி வருகிறோம். இதுபோன்ற செயல்களால் இந்தியா உலக அளவில் ஒரு சுகாதார வல்லரசாக உருவெடுத்து நிற்கிறது. மருத்துவப் பொருட்களில் நாம் செய்த ஒரு உற்பத்தி அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதியை மற்ற பொருட்களிலும் செய்யும் போது ஒரு மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக இந்தியா உருவெடுக்கும்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகையே நம் சொந்தமாக நினைக்கிற நம் இந்திய சமூகம், அதில் இருந்து விலகப் போவதில்லை. இது ஏதோ நமக்கு புதிய விஷயம் அல்ல. முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் படையெடுப்புகளுக்கு முன்பு இந்தியா ஒரு தன்னிறைவு பெற்ற தேசமாக உலகுக்கு படியளந்த ஒரு தேசமாக தானே விளங்கியது!
கிராமங்களில் மண்ணைக் குழைத்து சுவர் எழுப்பி வீடுகளுக்குக் கூரை போட்டது, பசு மாடுகளை பாதுகாத்து, அது தருகிற சாணம் மற்றும் கோமியத்தில் இருந்து விவசாய உற்பத்தி பெருக்கியது எல்லாம் தற்சார்பு பொருளாதாரம்தான்.
மக்கள் அனைவரும் தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்கவேண்டும். சுதேசி இயக்கம் போன்றதொரு சமுதாய புரட்சி ஏற்பட வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்களின் சோப்புகளுக்கு பதிலாக, நம் ஊரிலேயே சுயஉதவிக் குழுக்கள் மூலமாக அல்லது குடிசை தொழிலாக தயாரிக்கப்படுகிற சோப்புகளை வாங்குவதில் இருந்து, இதற்கான பங்களிப்பை நாம் தொடங்கலாம்.
வாருங்கள்! வல்லரசாவோம்!
கட்டுரையாளர்: பாஜக செய்தித் தொடர்பாளர்
மாநில செயலாளர் (பாஜக சட்டப்பிரிவு)

கருத்துகள் இல்லை: