சனி, 23 மே, 2020

ஆர் எஸ் பாரதி மீதான தாக்குதல்கள் .. திமுகவை தலித் எதிரியாக சித்தரிப்பதற்கான சதி?

Prabaharan Alagarsamy. : ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணா காலத்து
அரசியல்வாதி. தன்னுடைய 18ஆவது வயதில், தான் சார்ந்த பரங்கிமலை தொகுதியில் எம்.ஜி.ஆர் வேர்பாளராக நிறுத்தப்பட்டது குறித்த தன்னுடைய அதிருப்தியை நேராக அண்ணாவிடம் போய் விவாதிக்கும் அளவுக்கு துணிச்சலானவர்.
55 ஆண்டுகாலம் ஒரே கட்சி , ஒரே தலைமை, ஒரே கொடி, ஒரே கொள்கை என்று உறுதியாக நிற்பவர், இத்தனைக்கும் 50 ஆண்டுகாலம் அவர் உழைப்புக்கு ஏற்ற எந்த பதவியையும் அனுபவித்திராதவர். முழுநேர கட்சிக்காரராக இல்லாமல், மற்றவர்களைப் போல சொந்த தொழிலில் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் இன்றைக்கு சென்னையில் ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞராக பெரிய வசதி வாய்ப்புகளோடு வாழ்ந்திருக்கக்கூடும்.
கட்சியினர் மத்தியில் ஆர்.எஸ்.பாரதி என்றால் கண்டிப்பானவர், கடும்கோபக்காரர் என்கிற பெயர் உண்டு. யாரும் எளிதில் குறை சொல்லிவிடமுடியாத நேர்மையும் துணிச்சலும்தான் அவருடைய பலம்.
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்கிற ஒரு அவதூறு பிரச்சாரத்தை சட்டரீதியாக முறியடிக்கும் பணியை கட்சி அவருக்கு கொடுத்தது. இடைத்தேர்தல் காலத்தில் , திமுகமீது இந்த அவதூறை முன்னெடுத்தது பாமக. தேர்தலிலும் இதன் தாக்கம் கொஞ்சம் இருக்கவே செய்தது.

நியாயப்படி பாமகவின் சதித்திட்டத்தை உணர்ந்து, தலித் இயக்கங்களும், தலித் சிந்தனையாளர்களும், தலித் போராளிகளும் இந்த அவதூறை முறியடித்திருக்கவேண்டும். ஆனால் வழக்கம்போலவே திமுக ஒழியட்டும் என்று காரியவாத கள்ளமவுனம் சாதித்தார்கள். அவர்களில் சிலர் பாமகவுடன் சேர்ந்துக்கொண்டு அவதூறுக்கு வலுசேர்த்தனர்.
திமுக தனித்துவிடப்பட்டது. ஆர்.எஸ்.பாரதி சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தார். திமுக தனியாகவே அந்த அவதூறை முறியடித்தது.
அந்த சூழலில்தான் , ஒரு உள்ளரங்க கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, தன் பேச்சின் ஊடாக முக்கியமான ஒரு வரலாற்று செய்தியை தலித் மக்களின் பொருட்டு சொன்னார். இந்தியாவிலேயே உயர்நீதிமன்ற நீதிபதியாக தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் முதன்முதலில் நியமிக்க காரணமானவர் கலைஞர். அதே நீதிபதிதான் பதவி உயர்வு பெற்று உச்சநீதிமன்றத்தின் முதல் தலித் நீதிபதியாகவும் ஆனார். இந்தியாவிலேயே அதிகமான தலித் சமூகத்தை சேர்ந்த நீதிபதிகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான். இதுயாவும் எவராலும் மறுக்கமுடியாத உண்மை. இந்த செய்தியைதான் ஆர்.எஸ்.பாரதி அந்த உரையில் தொட்டுச்சென்றார். அந்த பேச்சு முழுக்கவே அவர் கொந்தளிப்பான மனநிலையில்தான் இருந்தார். பஞ்சமிநில விவகாரத்தில் திமுக மோசமாக வஞ்சிக்கப்பட்டதன் காரணமான கொந்தளிப்பு அது. அதன் வெளிப்பாடுதான், ஒரு ஆதங்கத்தில் வந்த வார்த்தைதான், "திராவிட இயக்கம் போட்ட பிச்சை" என்பது. (இதே செய்தியை நான் முன்பொருமுறை "திராவிட இயக்கத்தின் சாதனை" என்று தலைப்பிட்டு எழுதியிருந்தேன்).
ஆர்.எஸ்.பாரதி சொல்லும்போதும்கூட, இது "தான் செயதது" என்றும் சொல்லவில்லை, "நாங்கள் செய்தது" என்றும் சொல்லவில்லை, அவ்வளவு ஏன் "கலைஞர் செய்தது" என்றுகூட சொல்லவில்லை. திராவிட இயக்கம் செய்தது என்கிறார். அவர் சொல்கிற திராவிட இயக்கம் என்பது பார்ப்பனரல்லாதார் அனைவரையும் உள்ளடக்கியது, பார்ப்பனரல்லாதார் அனைவருக்குமே உரிமையானது.
55 ஆண்டுகாலம் இந்த இயக்கத்திற்காக தன்னலம் இன்றி உழைத்த ஒருவர், யாருக்காக இந்த இயக்கம் வேலை செய்ததோ அவர்களே இந்த இயக்கத்தை புரிந்துக்கொள்ளவில்லையே என்கிற ஆதங்கத்தில் வெளிப்பட்ட ஒரு வார்த்தை அது. திராவிட இயக்கம் செய்யாத ஒன்றுக்கு அவர் உரிமை கோரவில்லை.
அதேசமயம், அந்த வார்த்தைக்காக பொதுவான கண்டனக்குரல் எழுந்தபோது, அடுத்தநாளே வெளிப்படையாக மனப்பூர்வமாக தன் வருத்தத்தை பதிவுசெய்தார். இத்தனைக்கும் அவர் பேசியவார்த்தைகள் பொதுவாகவே தமிழக மக்களிடம் (பழைய காலத்து ஆட்களால்) இயல்பாக பேசப்படுகிற வார்த்தைகள்தாம். இன்றைக்கு பேச்சு வழக்கின் காலம் கொஞ்சம் மாறிவிட்டதை அவர் கொஞ்சம் தாமதமாக புரிந்துக்கொண்டார்.
மற்றபடி அவர் பேச்சில் எந்த ஒரு தவறும் இல்லை, சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை. ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கு சட்டப்படியும் நியாயப்படியும் கொஞ்சமும் செல்லுபடி ஆகாது. இருந்தாலும் முடிந்தவரை இந்த வழக்கை இழுத்தடிப்பார்கள், திரும்பத்திரும்ப இதை பேசவைப்பார்கள்.
திமுகவை தலித் மக்களுக்கு எதிரியாக சித்தரிப்பதற்கான வேலைகள் முனைப்பாக நடந்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே ஏகப்பட்ட ஒட்டுக்குழுக்களை உருவாக்கி வளர்த்துவருகிறார்கள். எதிரிகளின் சதிவலையில் சிக்கிவிடாமல் இருக்க நாம் மிகமிக கவனமாக இருக்கவேண்டிய தருணம் இது.

கருத்துகள் இல்லை: