ஞாயிறு, 17 மே, 2020

8 கோடி இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன்: 15 நாளில் வழங்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 8 கோடி பேருக்கு இலவச ரேஷன் பொருள்: 15 நாளில் வழங்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு தினத்தந்தி:   8 கோடி மாநிலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 15 நாட்களில் இலவச ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. புதுடெல்லி, கொரோனாவின் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வெளிமாநில தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட 8 கோடி புலம் பெயர்ந்த
தொழிலாளர்களுக்கு 2 மாதங்களுக்கு ரூ.3,500 கோடி செலவில் இலவச உணவுப்பொருள் வழங்கும் திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது.< புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சிறப்பு ரெயில்கள் மூலம் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஏராளமானோர் நூற்றுக் கணக்கான கிலோ மீட்டர் தூரம் நடந்தும் செல்கிறார்கள். இதில் பலர் இறந்து உள்ளனர்.


இந்தநிலையில், உணவு தானிய கிடங்குகளில் இருந்து தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை பெற்று நாடு முழுவதும் உள்ள 8 கோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 15 நாட்களுக்குள் வினியோகம் செய்யவேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கேட்டுக் கொண்டு உள்ளார்.

மத்திய அரசு அல்லது மாநில அரசின் ரேஷன் கார்டுகள் அற்றவர்களுக்கும் உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.

இந்த தகவலை நேற்று அவர் காணொலி காட்சி மூலம் பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

அப்போது அவர் மேலும் கூறியதாவது:-

உணவு தானியம் வழங்கும் இந்த திட்டத்தின் மூலம் மராட்டியத்தில் 70 லட்சம், கர்நாடகாவில் 40.19 லட்சம், தமிழ்நாட்டில் 35.73 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர் கள் பயன் அடைவார்கள்.

புலம் பெயரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 8 கோடியை தாண்டினால் அவர்களுக்கும் இலவசமாக கூடுதலாக உணவுப் பொருட்களுக்கு ஏற்பாடு செய்யப்படும். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் 81 கோடி பயனாளிகளில் 10 சதவீத பயனாளிகளான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நலன் கருதி இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு வழங்கி கிடங்குகளில் இருந்து உணவுப் பொருட்களை பெற்று புலம் பெயரும் தொழிலாளர்களுக்கு உடனடியாக வினியோகிக்க தொடங்க வேண்டும்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இப்போதும் தங்கள் ஊர்களுக்கு நடந்து செல்கிறார்கள். இவர்களில் சிலர் வழியில் மரணம் அடைந்து உள்ளனர். அவர்கள் படும் துயரங்கள் பெரும் வேதனை அளிக்கிறது. மாநிலங்கள் கிடங்குகளில் இருந்து 2 மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்களை பெற்று உடனடியாக வினியோகத்தை தொடங்க வேண்டும். பயனாளிகள் எண்ணிக்கை பற்றிய தகவலை பிறகு தாக்கல் செய்யலாம்.

தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களிலோ அல்லது பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கூப்பன்கள் வழங்கியோ அல்லது உரிய முறையிலோ 15 நாட்களுக்குள் உணவுப்பொருட்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு ராம் விலாஸ் பாஸ்வான் கூறினார்

கருத்துகள் இல்லை: