வெள்ளி, 22 மே, 2020

செருப்பில்லா பிஞ்சு கால்கள் கொளுத்தும் வெயிலில்சாவித்திரி கண்ணன் : ஏன் முடியாது?
எது தடுக்கிறது உங்களை?
உலகின் மிகப் பெரிய ரயில்வே கட்டமைப்பு கொண்டது இந்தியா! 20,000 ரயில்களை கொண்டது நமது ரயில்வேதுறை!
இந்தியாவில் அரசுகள்,மற்றும் தனியார்கள் ஆகிய இரு தரப்பிலுமாக மூன்று லட்சம் பேருந்துகள் உள்ளன!
ஒரே நாளில் 6,400 விமானங்களை பறக்கவிடும் சக்தி கொண்டது இன்றைய இந்தியா!
நமது அரசாங்கம் மனம் வைத்தால் ஒரே நாளில் அல்லது அதிகபட்சம் மூன்றே நாளில் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களையும் அவரவர் ஊர்களுக்கு அனுப்பிட முடியும்.!
ஏன் செய்ய மறுக்கிறீர்கள்…?
இந்த உழைக்கும் மக்கள் அல்லவா இந்தியாவைக் கட்டமைத்தவர்கள்.
இந்தியாவின் மகத்தான செல்வமே இந்த உழைப்பாளர்களின் மாபெரும் மனித வளம் தானே!
அந்த மனித வளத்தை மதித்து கண்ணும் கருத்துமாக கட்டிக் காக்கவேண்டியது பொறுப்புள்ள அரசின் கடமையல்லவா….?

ஊரடங்கு அறிவிக்கும் ஒரு வாரத்திற்கு முன்பே இந்திய உயர் தொழில் நுட்ப கல்வி( ஐ.ஐ.டி) மாணவர்களை அவரவர் ஊருக்கு பொறுப்பாக அனுப்ப முடிந்த உங்களுக்கு,ஏன் இந்த தொழிலாளர்களிடம், ’’அவரவர் ஊர் போய் சேருங்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட உள்ளது’’ என்று சொல்லத் தோணவில்லை?
அப்போதும் இப்படித்தான் பலர் நடையாய் நடந்து உயிர்விட்டனர்!
ஐம்பது நாட்களுக்கும் மேலான காத்திருப்புக்குப் பிறகும் இப்படியாக நடந்து உயிர்விடுகின்றனர்!( இது வரை வழியில் உயிர் இழந்தவர்கள் 360)
லட்சோப லட்சம் மக்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் நாதியற்று அனாதையாக நடந்து போகின்றனரே….?
இங்கே எதுவும் உலகப் போரோ, தேசம் தழுவிய பெரும் மதக்கலவரமோ நடந்து ஓய்ந்ததொரு அசாதரண சூழல் இல்லையே!
வரலாறு காணாத பஞ்சம் ஏற்பட்டிருக்கவில்லையே…! இந்த ஆண்டு இராணுவத்திற்கான செலவில் உலகின் மூன்றாவது நாடாக வரலாற்றிலேயே இல்லாத வகையில் சுமார் 5,33,000 கோடியை அள்ளி இறைத்தீர்களே…!
அதில் ஒரு பத்து சதவிகிதத்தை இவர்களின் பயண செலவுக்கு ஒதுக்கி இருந்தாலே போதுமே!
செருப்பில்லா பிஞ்சு கால்கள் கொளுத்தும் வெயிலில் நடப்பதுவும், உருத்தெரியாமல் காய்ந்த பாதங்களால் இவர்கள் தேசத்தையே கால் நடையாய் கடப்பதுவும்..வயிறு பசித் தீயில் வேக,வதனத்தை அக்னி வெயில் வாட்டியெடுக்க,வழியில் ஒரு தாய் பிள்ளையை பெற்றெடுக்க,வாடி வதங்கிய சிலரோ தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள…..இவை எதுவுமே உங்கள் இதயத்தை உலுக்கவில்லையா?
அட,உங்களுக்குத் தான் மனசில்லை? நாங்கள் ரயில்செலவை ஏற்கிறோம் என காங்கிரஸ் முன் வந்ததே அதை பெற்றாவது செய்திருக்கலாமே! ’சரி,விடுங்கப்பா,எங்களால் முடிந்த அளவுக்கு கொஞ்சம் பேருந்துகளில் அனுப்பி வைக்கிறோம்’’ என்றால்,அதற்கும் ஆயிரத்தெட்டு குறை சொல்லி தடுக்கிறீர்கள்…!
ஆட்சி அதிகாரம் ஒரு கட்சிக்கு தரப்பட்டிருக்கிறது என்றால்,அது மக்களை காப்பாற்றுவதற்கு தானேயன்றி,அவர்களின் அடிப்படை உரிமையான உயிர்வாழ்தலையே பறிப்பதற்கான லைசென்ஸ் அல்ல!
அல்லல்பட்டு ஆற்றாது அழுத இந்த மக்களின் கண்ணீருக்கான ஒரு விலையை இயற்கை உங்களிடமிருந்து பெறாமல் விடாது! நிச்சயமாக விடாது!

கருத்துகள் இல்லை: