சனி, 23 மே, 2020

கடைமடைக்கும் கரன்சி- அதிமுகவின் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிக் கழகச் செயலாளர்கள் பதவி நீக்க ரகசியம்

டிஜிட்டல் திண்ணை:  கடைமடைக்கும் கரன்சி- அதிமுகவின் அதிரடித் திட்டம்!மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை: கடைமடைக்கும் கரன்சி- அதிமுகவின் அதிரடித் திட்டம்! மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“ஓ.பன்னீர் அணியும், எடப்பாடி அணியும் இணைந்து நடத்திய பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் பதவியை நீக்கியதைத் தவிர, அன்று முதல் அதிமுக கட்சி அமைப்புகளில் பெரிதாக எந்த மாற்றத்தையும் செய்யத் துணியாதவர்கள் இப்போது அதிரடியாக ஒரு மாற்றத்தைச் செய்திருக்கிறார்கள். தமிழகம் முழுதும் அதிமுகவில் இருக்கும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிக் கழகச் செயலாளர்களை அந்தப் பதவியில் இருந்து தூக்கி அந்த பதவியையே ரத்து செய்திருக்கிறார்கள். நீக்கப்பட்ட அனைவருக்கும் மாற்றுப் பொறுப்பும் வழங்கப்படும் என்று தாஜா அறிவிப்பும் கூடவே வந்திருக்கிறது. இவ்வளவு பெரிய நடவடிக்கையை ஒரே ஒரு அறிவிப்பின் மூலம் செய்துவிடக் காரணம் என்ன என்று விசாரிக்கையில் மேலும் மேலும் தகவல்கள் கிடைத்து வருகின்றன.

ஒரு ஊராட்சிக்குள் கட்சி அமைப்பில் பத்துக்கும் மேற்பட்ட கிளைகள் கூட இருக்கின்றன. முன்பெல்லாம் ஒன்றிய செயலாளருக்கும், கிளைச் செயலாளர்களுக்கும் இருக்கும் நல்ல நெருக்கம் இருக்கும், ஆனால் ஊராட்சிக் கழக செயலாளர்கள் வந்தது முதல் ஒன்றிய செயலாளர்களுக்கும் கிளைச் செயலாளர்களுக்குமான தொடர்பில் இடைவெளி விழுந்துவிட்டது. ஒன்றியச் செயலாளர் தன் ஒன்றியத்தில் இருக்கும் அனைத்து கிளைச் செயலாளர்களுடன் பேசுவார், கட்சிப் பணிகளைப் பற்றி ஆராய்வார். எந்த கிராமத்தில் எந்த கிளையில் நமக்கு வீக் ஆக இருக்கிறது என்று அறிந்து அதை சரிசெய்வார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பத்து கிளைச் செயலாளர்களிடம் பேசுவதை ஒரே ஒரு ஊராட்சி செயலாளரிடம் பேசிவிடுகிறார்கள். இதனால் கிராமங்களில் என்ன நடக்கிறது என்பதே ஒன்றிய செயலாளர்களுக்கு ஊராட்சி செயலாளர் சொன்னால்தான் தெரியும் என்ற நிலை உருவாகிவிட்டது.
இந்த நிலையில்தான் நாடாளுமன்றத் தேர்தலில் பட்ட அடியை வைத்து இந்த முடிவெடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் கிராமங்களை வரை செல்ல வேண்டுமென்று தலைமையால், அல்லது அந்தந்த வேட்பாளர்களால் கொடுக்கப்பட்ட பணம் ஒன்றியத்தைத் தாண்டிவிட்டது ஆனால் கிளைகளுக்குள் செல்லவில்லை. இந்தத் தடை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தது 5 எம்பிகளையாவது அதிமுக கைப்பற்றியிருக்கலாம் என்று ஓ.பன்னீருக்கும், எடப்பாடிக்கும் சில அதிமுக வேட்பாளர்களே புகார் அளித்தனர். அதாவது கிளைகளுக்கு சென்று சேர வேண்டிய பணம் அதற்கு முன்னர் ஊராட்சி செயலாளர்களோடு நின்றுவிட்ட்டது என்பதுதான் அவர்களின் புகார். நாடாளுமன்றத் தேர்தலில் நடந்தது வரும் சட்டமன்றத் தேர்தலில் நடந்துவிடக் கூடாது என்பதால்தான், சட்டமன்றத் தேர்தலில் பண விநியோகம் கிராமங்கள் வரைக்கும் சென்று சேர வேண்டும் என்பதால்தான் இந்த நடவடிக்கை என்கிறார்கள் அதிமுக மேல் மட்டத்தில்.

மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்பாக கடைமடை வரை தண்ணீர் சென்று சேர வேண்டும் என்பதற்காக வாய்க்கால்களை தூர்வாருதல் பணிகளை தீவிரப்படுத்துவார்கள். அதேபோலத்தான் தேர்தல் என்னும் அணை திறக்கப்பட சில காலங்களே இருப்பதால் கட்சியின் கடை மடை வரைக்கும் கரன்சித் தண்ணீர் சென்று சேர்வதற்காக நடத்தப்பட்டிருக்கும் தூர்வாரும் நடவடிக்கைதான் இது என்கிறார்கள். கழகத்தின் கரன்சிப் பாசனத்துக்கு இடையூறாக இருந்த அடைப்புகளை தூர்வாரும் இந்த நடவடிக்கை மூலம் அதிமுக தேர்தல் வேலைகளைத் துவங்கிவிட்டது என்றே அர்த்தம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: