புதன், 20 மே, 2020

உதயநிதியை தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிய ஸ்டாலின்

உதயநிதியை தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிய ஸ்டாலின்மின்னம்பலம் : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுக இளைஞரணி பொதுச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று (மே 20) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இரண்டாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது. ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டைன் நேற்று அறிவித்தார். இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி ஜூலையில் தேர்வை நடத்த வேண்டும் என்று பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை எழுந்து வந்தது.
அதுபோன்று திமுக இளைஞரணி பொதுச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று திடீரென தலைமைச் செயலகத்தில், அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்து பத்தாம் வகுப்புத் தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் அனுமதியுடன் திமுக. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், பெற்றோர், ஆசிரியர் சங்கங்கள், தனியார் பள்ளி உரிமையாளர்கள் என பல்வேறு தரப்புகளிடமிருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் 10 ஆம் வகுப்புத் தேர்வைத் தள்ளிவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். மேலும் தற்போது பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா பரவியுள்ள சூழலில் தேர்வை எதிர்கொள்ளும் மனநிலையில் மாணவர்கள் இல்லை. எனவே அவர்களை மனதளவில் தயார்ப்படுத்தி பள்ளிகள் திறக்கப்பட்டு இரு வாரங்களுக்குப் பிறகு தேர்வை நடத்தினால் தான் சரியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் தேர்வை நடத்துவதில் உறுதியாக இருந்த பள்ளிக் கல்வித் துறை தேர்வை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டது. இதனிடையே கடந்த மே 18ஆம் தேதி திமுக இளைஞரணி-மாணவரணியின் மாவட்ட-மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது. இதில்,பத்தாம் வகுப்புத் தேர்வைத் தள்ளி வைக்கக் கோரி அரசு செயலருக்கும், மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மனு கொடுக்க முடிவெடுக்கப்பட்டது
இதனிடையே ஜூன் 15 தொடங்கி 25 வரை தேர்வு நடைபெறும் என்று புது அட்டவணையையும் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது. உயர் கல்வித் துறை தேர்வுகள் எல்லாம் ஜூலையில் நடைபெறும் நிலையில், பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்துவதில் மட்டும் ஏன் இந்த அவசரம். எதற்கெடுத்தாலும் மத்திய அரசைப் பின்பற்றும் இந்த அரசு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஜூலையில் தேர்வை நடத்துவதாக அறிவித்த மத்திய அரசின் முடிவை ஏன் பின்பற்றவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் இளைஞரணி-மாணவரணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துகளும் இந்த மனுவில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், நோய்த்தொற்று நீங்காத நிலையில் 9.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் நோய் தாக்கும் அபாயத்திற்குள்ளாகின்றனர். இதனால் பெற்றோர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். பொது போக்குவரத்து சேவை தொடங்கப்படாத நிலையில், மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும், இதரப் பணியாளர்களும் தேர்வு மையங்களுக்குச் செல்ல சிரமத்துக்கு ஆளாவார்கள். குறிப்பாக மலைப் பகுதி மாணவர்கள் இன்னல்களுக்கு ஆளாவார்கள்.எனவே தனிமனித இடைவெளியுடன் அமரும் வகையில், பேருந்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.
ஒரு வகுப்பறையில் 10 மாணவர்கள் அமரவைக்கப்படுவார்கள் என்றால் தேர்வெழுதவுள்ள 9.5 லட்ச மாணவர்களை அமரச் செய்யும் உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, அவற்றை உறுதி செய்ய வேண்டும், விடுதிகளில் தங்கிப் படித்த மாணவர்களுக்குத் தங்குமிடம், உணவு குறித்துத் தனிக் கவனம் செலுத்தி ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் பிபிஇ உடைகள் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்குத் தொற்று உள்ளதா என்று கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
எத்தனை ஆயிரம் மாணவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து இடம் பெயர்ந்துள்ளனர் என்ற தகவல் அரசிடம் இல்லை, எனவே இந்த விவரங்களை உடனடியாக சேகரிக்க வேண்டும்,
பல பள்ளி வளாகங்கள் தனிமைப்படுத்தப்பட்டோருக்கான இருப்பிடங்களாக மாற்றப்பட்டுள்ள சூழலில் அங்கே மாணவர்களைத் தேர்வு எழுதச் செய்வது நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும்.
கட்டுப்பாடுகள் உள்ள பகுதிகளில் இருக்கும் மாணவர்களால் எப்படித் தேர்வு எழுத முடியும் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.
கொரோனாவால் எத்தனை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுமா?
கொரோனா பரவி வரும் சூழலில் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் மாணவர்கள் தேர்வினை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள, அவர்களுக்கு கவுன்சிலிங் அளித்து பின்னர் தேர்வை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சருடனான சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “கொரோனா பாதிப்பு சீரடைந்த பிறகு தேர்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கேரளாவில் விரைவில் தேர்வு தொடங்க இருப்பதால், இங்கும் தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். ஆனால் அங்குப் பாதிப்பு அதிகம் இல்லை. இங்குப் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தேர்வை ஒத்திவைக்க வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்று 2,3 நாட்களில் நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் கூறினார். தேர்வு முக்கியம் என்பதைவிட உயிர் முக்கியம்” என்று தெரிவித்தார்.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை: