minnambalam.com -Pandeeswari Gurusamy : திமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் இன்று (பிப்ரவரி 21) திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த முறை தமிழகத்தில் திமுக, அதிமுக, நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டி உருவாக்கியுள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, அமமுக, பாமக, புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
விஜய் ஆட்சியில் பங்கு தரப்படும் என்று வெளிப்படையாக அறிவித்த போதிலும், இதுவரை எந்தக் கட்சியும் த.வெ.க-வுடன் கூட்டணி அமைக்கவில்லை.ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்தத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர் எம்பி, பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்து பொதுவெளியில் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இது சலசலப்பை ஏற்படுத்தியது.
திமுக பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்காததே இந்த சலசலப்புக்கு காரணம் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்த பிறகு குழு அமைக்கப்படும் என்று திமுக அறிவித்திருந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர். பாலு தலைமையில் இன்று குழு அமைக்கப்பட்டுள்ளது.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான குழுவில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ. ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக