வியாழன், 21 மே, 2020

ராஜீவ் மீதான கொலை முயற்சிகள்!.. சிறப்புக் கட்டுரை

மின்னம்பலம்:   ஆர்.முத்துக்குமார் அமைதிப்பூங்காவாகத் திகழ்ந்துகொண்டிருந்த
தணு-  -    நளினி
தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டுக்குப் பலியானார் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி. 1991 மே 21இல் நடந்த அந்தப் படுகொலை இந்தியாவில் நிகழ்ந்த பயங்கரவாதச் செயல்களுள் முக்கியமானது. அந்தக் கொலையைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி ரத்த வெள்ளத்தில் மிதந்த காட்சி ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியெடுத்துவிட்டது. அந்தக் கொலைக்குக் காரணம் யார் என்ற கேள்வியில் தொடங்கிய விசாரணை பல ஆண்டுகளுக்கு நீடித்து, ஒருவழியாகக் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தண்டனைகளும் விதிக்கப்பட்டன.
 உண்மையில், ஸ்ரீபெரும்புதூரில் நடந்தது ராஜீவைக் கொல்வதற்கான இறுதி முயற்சி. அது அவருடைய உயிரைக் குடித்துவிட்டது. ஆனால், அதற்கு முன்னரே ராஜீவ் காந்தி மீது வெவ்வேறு காலகட்டங்களில் கொலை முயற்சிகள் நடந்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றில் இருந்தும் நல்வாய்ப்பாகத் தப்பியிருக்கிறார் ராஜீவ் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். அப்படித்தான் சொல்கின்றன வரலாற்றுப் பக்கங்கள்.

சுதந்தர இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த நேரு தொடங்கி இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், சரண் சிங் உள்ளிட்ட எவருக்கும் இயல்பான பாதுகாப்பைத் தாண்டி, சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று எதுவுமே இருந்ததில்லை. ஆனால், அந்த நிலையை அப்படியே புரட்டிப் போட்டது இந்திரா காந்தியின் படுகொலை. ஆபரேஷன் ப்ளூ ஸ்டாருக்கு எதிர்வினையாகப் பிரதமர் இந்திரா காந்தி தன்னுடைய மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்படவே, பிரதமர்களின் உயிருக்குச் சிறப்புப் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது இந்திய அரசு.
அதுநாள் வரை ஐ.பி என்கிற இந்திய உளவுத் துறைப் பிரிவின் வசமிருந்த பிரதமரின் பாதுகாப்புப் பணிகள் சிறப்புப் பாதுகாப்புப் படை என்கிற எஸ்.பி.ஜியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டன. அதன் இயக்குநராக டாக்டர் எஸ்.சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே பிரதமரின் பாதுகாப்புப் பணிகளில் பழுத்த அனுபவசாலி என்பதால் அவரைத் தேர்ந்தெடுத்திருந்தனர்.
பதவியேற்ற கையோடு அவர் போட்ட முதல் உத்தரவு, பிரதமர் ராஜீவ் காந்தி எட்டு மாதங்களுக்கு எந்தவொரு வெளிநாட்டுப் பயணத்தையும் செய்யக் கூடாது என்பதுதான். அந்த அளவுக்கு இந்திரா படுகொலை அரசின் உயரதிகாரிகளின் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அப்போதும்கூட பிரதமர் பயன்படுத்தும் குண்டு துளைக்காத வாகனங்களும் அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பும் ரா என்கிற உளவுத் துறையின் மற்றொரு பிரிவின் வசமே இருந்தன.
தொடக்க காலத்தில் தன்னுடைய பாதுகாப்பு அதிகாரிகள் இத்தாலிய நிபுணர்களிடம் பயிற்சியெடுக்க வேண்டும் என்று விரும்பினார் ராஜீவ். ஆனால், இத்தாலிய நிபுணர்கள் இந்திய வீரர்களிடம் கடுமையாக நடந்துகொண்டதைக் கேள்விப்பட்டதும், இத்தாலிய நிபுணர்களைத் திருப்பியனுப்பி விட்டார். சிறப்புப் பாதுகாப்புப் படையினர் சொன்னபடி எந்தவொரு வெளிநாட்டுப் பயணத்தையும் மேற்கொள்ளாமல் இருந்த ராஜீவ், 1985 ஜூனில் அமெரிக்கா, பிரான்ஸ், அல்ஜீரியா நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.
இந்திரா காந்திக்கு இருந்தது போலவே ராஜீவுக்கும் காலிஸ்தான் தீவிரவாதிகளிடமிருந்து ஆபத்து இருந்தது. அதனால் ராஜீவின் ஒவ்வொரு நகர்விலும் கூடுதல் கவனம் செலுத்தியது எஸ்.பி.ஜி. அந்தப் பயணத்தின்போது ஜெனீவாவில் ஏற்பாடாகியிருந்த விழாவில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்தார் ராஜீவ். அப்போது அவரை ஜெனீவாவில் வைத்துக் கொலை செய்ய காலிஸ்தான் தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பதாகவும் அதற்காக குர்தீப் சிங் சிவியா என்ற தீவிரவாதி பணிக்கப்பட்டிருப்பதாகவும் உளவுத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த நொடியில் இருந்து எஸ்.பி.ஜி ஏகப்பட்ட கெடுபிடிகளை விதிக்கத் தொடங்கியது. ராஜீவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்குமான பாதுகாப்பு வளையம் இறுகத் தொடங்கியது.
ராஜீவ் குடும்பத்தினர் ஜெனீவாவில் உள்ள இன்டர்கான்டினென்டல் ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் உளவுத் துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஐ.நாவில் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்த முகுந்த் துபேயின் வீட்டில் ராஜீவ் குடும்பத்தினர் தங்கவைக்கப்பட்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் என்றதும் எஸ்.பி.ஜியினருக்கு சீக்கியர்கள்தான் நினைவுக்கு வந்தனர். பிரதமர் ராஜீவைச் சுற்றி எந்தவொரு சீக்கியரும் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். ஏர் இந்தியா அலுவலகத்தில் பணியாற்றி வந்த சீக்கியர் ஒருவரை உடனடியாகக் கட்டாய விடுப்பில் அனுப்புங்கள் என்று சொல்லும் அளவுக்கு அதிகபட்ச எச்சரிக்கை காட்டியது எஸ்.பி.ஜி.
அதேபோல, ஜெனீவாவில் அந்த நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து ஒருங்கிணைப்புப் பணியைச் செய்வதற்கு ஒரு சீக்கிய அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரையும் அனுமதிக்க முடியாது என்றது எஸ்.பி.ஜி. அதனைத் தொடர்ந்து அந்த அதிகாரி கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். அந்த அளவுக்குப் பேராபத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக சீக்கியர்களைக் கருதினர் பாதுகாப்பு அதிகாரிகள். ஆனால் அவர்கள் அஞ்சியபடி எந்தவொரு ஆபத்தும் நிகழவில்லை.
அதேபோல, பிரதமர் ராஜீவ் அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்னால் தீவிரவாதி அமைப்புகள் அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டிருப்பதாகவும் அதற்காக சர்வதேச சீக்கிய இளைஞர் சம்மேளனத்தைச் சேர்ந்த மன்ஜீத் சிங் என்கிற லால் சிங், தல்வீந்தர் சிங் பார்மர் ஆகிய இருவர் களமிறங்கியிருப்பதாகவும் அமெரிக்க உளவு நிறுவனமான ஃபெடரல் பியூரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் அமைப்பு பிரதமர் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரிகளை எச்சரித்தனர். அதனைத் தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ததால், எந்தவொரு ஆபத்தும் நிகழவில்லை. வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களை முடித்துக்கொண்டு பத்திரமாக நாடு திரும்பினார் பிரதமர் ராஜீவ்.
அதன்பிறகு ராஜீவின் பாதுகாப்பில் அதிதீவிர கவனத்தைச் செலுத்தியது எஸ்.பி.ஜி அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சந்தேகப்படும் அமைப்புகள், நபர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. பிரதமர் ராஜீவ் எந்த நாட்டுக்குச் சென்றாலும், உளவுத் துறை அதிகாரிகள் சந்தேகப்படும் நபர்களின் பட்டியலை அந்த நாட்டு அதிகாரிகளிடம் தருவது வழக்கம்.
அப்படி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இலங்கை சென்றபோதுதான் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டார் அந்த நாட்டு கடற்படை வீரர் ஒருவர். அவர் பெயர், விஜயமுனி விஜிதா ரோகண டிசில்வா. இலங்கையில் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நிலவிய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் இறங்கினார் பிரதமர் ராஜீவ்.
அவர் எடுத்த தொடர் முயற்சிகளின் பலனாக 1987 ஜூலை மாத இறுதியில் ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் என்ற பெயரில் இந்தியா – இலங்கை இடையிலான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் கையெழுத்திடுவதற்காக இலங்கை சென்றிருந்தார் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி. வழக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் முறைப்படி செய்யப்பட்டிருந்தன.
அப்போது பிரதமர் ராஜீவுக்கு இலங்கை கடற்படை சார்பில் அணிவகுப்பு மரியாதை தர விரும்பியது இலங்கை. அதற்கு முன்னால் பிரதமர் ராஜீவின் பாதுகாப்புப் படையினர் அந்த அணிவகுப்பில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்களை எல்லாம் கவனமாகச் சோதனை செய்தனர்.
முக்கியமாக, கடற்படை வீரர்களின் துப்பாக்கிகளில் தோட்டாக்கள் இருக்கின்றனவா என்று சோதித்தனர். அதற்குக் காரணம் இருந்தது. 1981இல் எகிப்து அதிபர் அன்வர் சதாத் தனக்குத் தரப்பட்ட அணிவகுப்பு மரியாதையின்போது சொந்த நாட்டு ராணுவ வீரர் ஒருவராலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். உலகத் தலைவர்கள் மத்தியில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்திய நிகழ்ச்சி அது.
அதன் பிறகு அணிவகுப்பு மரியாதையில் தோட்டா இல்லாத துப்பாக்கிகளையே பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறை உலக நாடுகள் பலவற்றில் பின்பற்றப்பட்டது. அதற்காக அணிவகுப்பு நடப்பதற்கு முன் துப்பாக்கிகள் சோதனையிடப்படும் நடைமுறை உருவானது. பிரதமர் ராஜீவ் விஷயத்திலும் அந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது. அதன்பிறகே அணிவகுப்பு மரியாதை தொடங்கியது.
வெள்ளைச் சீருடை அணிந்த 72 இலங்கைக் கடற்படை வீரர்களுக்கு மத்தியில் பிரதமர் ராஜீவ் நடந்துவரத் தொடங்கினார். அப்போது திடீரென ராஜீவ் காந்தியை நோக்கி தனது துப்பாக்கியை ஓங்கினார் ஒரு கடற்படை வீரர். அவருடைய நிழலை வைத்து சட்டென்று சுதாரித்துக்கொண்ட ராஜீவ், தாக்குதலில் இருந்து லாகவமாகத் தப்பினார். அதனால் அவரது பின்னந்தலையில் விழவேண்டிய அடி தோளில் விழுந்தது. அந்த அடியால் சற்றே தடுமாறிப் போனார் ராஜீவ்.
தாக்குதல் நடந்த அடுத்த நொடி ராஜீவின் பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து சென்று அந்த இலங்கை வீரரைக் கெட்டியாகப் பிடித்து, மேற்கொண்டு தாக்குதல் எதுவும் நடத்திடாத வகையில் தடுத்தனர். உடனடியாக அணிவகுப்பு மரியாதை நிறுத்தப்பட்டது. பிரதமர் ராஜீவ் பத்திரமாக மீட்கப்பட்டார்.
என்றாலும், அந்தத் தாக்குதல் சம்பவம் இந்தியாவில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. இலங்கை அரசுக்குக் கண்டனக் கணைகள் குவிந்தன. இந்தியப் பிரதமரின் பாதுகாப்பில் இலங்கை அரசு அலட்சியம் காட்டிவிட்டதாக அதிருப்திக் குரல்கள் எழுந்தன. பிரதமர் ராஜீவ் காப்பாற்றப்பட்டு விட்டார் என்றபோதும் அந்த விஜயமுனி எதற்காகக் கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்ற கேள்வி பலரையும் துளைக்கத் தொடங்கியது.
உண்மையில், ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட போராளித் தலைவர்கள் பலரும் அரைமனத்துடன் ஏற்றுக்கொண்டது போலவே இலங்கையில் உள்ள சிங்கள மக்கள், அரசியல் தலைவர்கள் பலருக்கும் விருப்பம் இல்லை. ஒப்பந்தத்தின் மீது தனக்குள்ள அதிருப்தியைப் பதிவு செய்யும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் பிரேமதாசா பங்கேற்கவில்லை. அமைச்சர் காமினி தியநாயக நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டு, வெளிநாடு சென்றுவிட்டார்.
ஒப்பந்தத்துக்கு எதிராக இலங்கையில் உள்ள புத்தபிக்குகளும் சிங்கள மக்களும் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என்று சாலையில் இறங்கியிருந்தனர். பேருந்துகள் கொளுத்தப்பட்டன. ஆங்காங்கே கடைகள் அடைக்கப்பட்டன. கொழும்பு கொந்தளித்துக் கொண்டிருந்தது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே சமரசம் செய்துகொண்டது போன்ற தோற்றத்தை புத்தபிக்குகளும் இலங்கை எதிர்க்கட்சிகளும் உருவாக்கிக் கொண்டிருந்தனர். இலங்கை என்ற நாட்டை இந்தியாவிடம் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டார் ஜெயவர்த்தனே என்று விமர்சித்தது சிறீலங்கா சுதந்தரக் கட்சி.
அப்படி ராஜீவ் – ஜெயவர்த்தனேவுக்கு எதிராக அதிருப்தியடைந்து, ஆத்திரத்தில் மனம் கொதித்தவர்களில் இலங்கை கடற்படை வீரர் விஜயமுனியும் ஒருவர். ராஜீவ் மீதான கொலை முயற்சிக்கான காரணம் பற்றி விஜயமுனி பதிவு செய்த தகவல்கள் முக்கியமானவை.
இலங்கையின் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்தது ராஜீவ் செய்த தவறு என்று விமர்சித்த விஜயமுனி, இலங்கையைக் கட்டாயப்படுத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்த ராஜீவின் செயல் தனக்குள் தீராத ஆத்திரத்தை ஏற்படுத்தியது என்றார். அதோடு, ராஜீவுக்கு எதிராகப் பழிவாங்கும் உணர்ச்சியை வளர்த்துக் கொண்டதாகச் சொன்ன விஜயமுனி, அதன் நீட்சியாகவே ராஜீவைக் கொல்லத் தயாரானேன் என்றார்.
தனது தாக்குதலில் இருந்து ராஜீவ் காந்தி தப்பியது குறித்துப் பேசிய விஜயமுனி, “நான் ராஜீவின் தலையைக் குறிவைத்தே தாக்க முற்பட்டேன். ஆனால் எனது கையுறை வழுக்கிவிட்டதால் இலக்கு தவறிவிட்டது” என்று சொன்னதோடு, இன்னொரு முக்கியமான குறிப்பையும் பதிவுசெய்திருந்தார். அது ராஜீவின் பணி அனுபவம் சார்ந்த குறிப்பு.
பொதுவாக அணிவகுப்பு மரியாதையின்போது தலைவர்கள் படையினரை உன்னிப்பாகக் கவனிப்பதில்லை. ஆனால் ராஜீவ் ஒவ்வொரு வீரரையும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உன்னிப்பாகக் கவனித்தார். அதனால்தான் தனது நிழல் அசைவில் ஏதோ நடக்கப் போவதை உணர்ந்து, சட்டென்று சுதாரித்துத் தப்பிக்க முடிந்தது. அதற்கு அவர் விமானியாக இருந்து பெற்ற அனுபவம் ஒரு காரணமாக இருந்திருக்கும் என்பது விஜயமுனியின் பார்வை.
இங்கே கவனிக்கவேண்டிய முக்கியமான சங்கதி என்ன தெரியுமா? பிரதமர் ராஜீவ் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய விஜயமுனி மூளைக்கோளாறு நோயால் பீடிக்கப்பட்டவர் என்றார் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே. பின்னர் விஜயமுனி உடனடியாகக் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணைகளின் முடிவில் அவருக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பிரேமதாசா அதிபரானதும் அவர் விடுதலை செய்யப்பட்டார் என்பது தனிக்கதை. வியப்பு என்னவென்றால், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கையோடு தன் மீது கொலைமுயற்சி நடத்தப்பட்டதை பிரதமர் ராஜீவ் அதிகம் அலட்டிக்கொள்ளாமலேயே இந்தியா திரும்பினார்.
அதன்பிறகு இரண்டாண்டுகளுக்கு பிரதமர் ராஜீவின் உயிருக்கு எந்தவிதமான மிரட்டலும் வரவில்லை. என்றாலும், பாதுகாப்பு கருதி குண்டு துளைக்காத உடை, குண்டு துளைக்காத வாகனம் என்றுதான் இயங்கிக்கொண்டிருந்தார். இப்படியான சூழலில்தான் 1987இல் பிரதமர் ராஜீவ் காந்தியைத் துப்பாக்கியால் சுட்டுக்சொல்லும் முயற்சியில் ஈடுபட்டார் ஒரு சீக்கியர். அவர் பெயர், கரம்ஜித் சிங்.
டெல்லிவாசியான இவர், பொறியியல் மாணவராக இருந்தபோதுதான் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதற்கான எதிர்வினையாக டெல்லி வாழ் சீக்கியர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டனர். அந்தத் தாக்குதலின் கரம்ஜித் சிங்கின் நண்பர் பல்தேவை உயிரோடு எரித்தனர் கலவரக்காரர்கள். கரம்ஜித் சிங் உள்ளிட்டோர் முகாம்களில் அடைபட்டிருக்க வேண்டிய சூழல் உருவாகியிருந்தது.
அந்தத் தாக்குதலைத் தடுத்து நிறுத்தாமல் விட்டதற்காக பிரதமர் ராஜீவைச் சுட்டுக்கொன்று பழி தீர்க்க வேண்டும் என்று சபதமெடுத்தார் கரம்ஜித் சிங். முதலில் பஞ்சாப்பிலிருந்து நவீன ரக துப்பாக்கியை வாங்க விரும்பினார். ஆனால் அது கிடைக்காமல் போகவே, ராஜஸ்தானின் ஸ்ரீகங்கா நகரிலிருந்து 300 ரூபாய் செலவில் நாட்டுத் துப்பாக்கியை ஏற்பாடு செய்துகொண்டு, ராஜீவைக் கொல்லத் தயாரானார்.
காந்தி ஜெயந்தியன்று ராஜ்காட் வரும் ராஜீவ் காந்தியைக் கொல்வதுதான் கரம்ஜித் சிங்கின் திட்டம். அதற்காகப் பத்து நாட்களுக்கு முன்பாகவே ராஜ்காட்டுக்குச் சென்றுவிட்டார். அப்போது துப்பாக்கி மட்டுமின்றி, அத்தியாவசியத் தேவைகளுக்காக 35 பொருட்களைக் கைவசம் கொண்டுசென்றிருந்தார். தரையிலிருந்து பத்தடி உயரத்தில் இருக்கும் முட்புதர்களுக்கு மத்தியில் தன்னை மறைத்துக்கொண்டார்.
விஷயம் யாருக்கும் தெரியாது என்றுதான் கரம்ஜித் சிங் நினைத்திருந்தார். ஆனால் அந்த நாட்டுத் துப்பாக்கி விற்பனையாளர் மூலம் எப்படியோ விஷயம் கசிந்துவிடவே, உடனடியாக ராஜ்காட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. ஆனால் அதற்கு முன்பே ராஜ்காட்டில் தனது நிலையை உறுதி செய்திருந்த கரம்ஜித் சிங், பாதுகாப்பு அதிகாரிகளின் கழுகுப்பார்வையில் சிக்கவில்லை.
காந்தி ஜெயந்தி அன்று காலை 7 மணிக்கு ராஜீவ் ராஜ்காட்டுக்குள் நுழைந்தனர். சட்டென்று துப்பாக்கியை எடுத்து தோட்டாவைச் செலுத்தினார் கரம்ஜித் சிங். ஆனால் அது ராஜீவைத் தாக்கவில்லை. அது ஏதோ வெடிச்சத்தம் என்று கருதிவிட்டனர் பாதுகாப்பு அதிகாரிகள். பிறகு காந்திக்கு அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பிய ராஜீவின் கண்களில் அந்தத் தோட்டா சிக்கவே, அதை எடுப்பதற்காகக் குனிந்தார் ராஜீவ்.
சட்டென்று அடுத்த தோட்டாவைச் செலுத்தினார் கரம்ஜித் சிங். ஆனால் அதுவும் ராஜீவைத் தாக்கவில்லை. விபரீதத்தை உணர்ந்துகொண்ட ராஜீவ் அந்த இடத்தை விட்டு ஓடத் தொடங்க, அவர்களைப் பாதுகாப்பு அதிகாரிகள் சூழ்ந்துகொள்ள, மூன்றாவது தோட்டாவைச் செலுத்தினார் கரம்ஜித் சிங். ஆனால் அதுவும் ராஜீவைத் தாக்கவில்லை. பிறகு பாதுகாப்பு அதிகாரிகள் ராஜீவை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.
அடுத்த சில நொடிகளில் பாதுகாப்பு அதிகாரிகளின் பிடியில் சிக்கினார் கரம்ஜித் சிங். அதிகாரிகள் அவரைக் கடுமையாகத் தாக்க, அப்போது அந்த இடத்தை நோக்கி ஆவேசமாக வந்த ஜெகதீஷ் டைட்லர் உள்ளிட்ட தலைவர்கள் கரம்ஜித் சிங்கைச் சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஆவேசப்பட்டனர். பிறகு கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார் கரம்ஜித் சிங்.
பின்னாளில் சிறைக்குச் சென்று கரம்ஜித் சிங்கைச் சந்தித்துப் பேசினார் பிரதமர் ராஜீவ். அப்போது நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரினால் விடுவிக்கப்படுவீர்கள் என்று ராஜீவ் சொன்னபோது, மன்னிப்பு கேட்க மறுத்த கரம்ஜித் சிங், தண்டனைக்காலம் முடிந்த பிறகே வெளியே வந்தார்.
பிரதமர் ராஜீவ் மீது ராஜ்காட்டில் நடந்த கொலை முயற்சிக்குப் பிறகு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. 1989 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்து, பிரதமர் பதவியை ராஜீவ் இழந்தபிறகும்கூட அவருக்குத் தரப்பட்டிருந்த பாதுகாப்புகள் தளர்த்தப்படவில்லை. இரண்டாண்டுகள் கழித்து மீண்டும் தேர்தல் வந்தபோதும் பலத்த பாதுகாப்புடன்தான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ராஜீவ் காந்தி.

அப்படித்தான் 1991 மே இரண்டாம் வாரத்தில் கர்நாடக மாநிலம் மைசூரில் தேர்தல் சுற்றுப்பயணத்தில் இருந்த ராஜீவைக் கொலை செய்ய ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆம், தேர்தல் பிரசாரத்துக்காக வந்திருந்த ராஜீவின் கார் லலித் மஹால் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென வயதான பெண் ஒருவர் காருக்கு குறுக்கே பாய்ந்தார். சட்டென்று சுதாரித்த ஓட்டுநர் காரை நிறுத்தவே, அந்தக் காருக்குப் பின்னால் வந்த கார்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. என்ன நடக்கிறது என்றே பலருக்கும் புரியவில்லை. பிறகு எந்தவிதமான ஆபத்துமின்றிப் பிரசாரம் செய்துவிட்டுப் பத்திரமாகப் புறப்பட்டார் ராஜீவ்.
ஸ்ரீபெரும்புதூரில் வைத்து ராஜீவ் கொல்லப்படுவதற்கு முன்பே மைசூரில் வைத்து அவரைக் கொல்வதற்குச் சதி நடந்தது. அந்தச் சதியின் ஓர் அங்கமே அந்த சாலை விபத்து என்பது கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் பதிவு.
நேருவின் பேரனை, இந்திராவின் மகனை, இந்தியாவின் முன்னாள் பிரதமரை, இந்தியாவை அதிகமுறை ஆண்ட கட்சியின் தலைவரைத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுவதற்குத் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு செய்தது. ஆனால் அந்த முயற்சிகள் எல்லாம் 1991 மே 21 அன்று முடிவுக்கு வந்தன. அன்றைய தினம் ராஜீவ் படுகொலை செய்யப்பட்டிருந்தார்!
கட்டுரையாளர் குறிப்பு:
ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர். “இந்தியத் தேர்தல் வரலாறு”, ”இந்துத்வ இயக்க வரலாறு”, ”தமிழக அரசியல் வரலாறு”, “திராவிட இயக்க வரலாறு” உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். (தொடர்புக்கு: writermuthukumar@gmail.com)

கருத்துகள் இல்லை: