சனி, 21 பிப்ரவரி, 2026

ராகுலின் திமுக ஒவ்வாமை? பொங்கி எழுந்த முதல்வர் ஸ்டாலின்!

 tamil.oneindia.com  பொறுத்துப் பார்த்த திமுக.. அந்த 2 பேரால் பொங்கி எழுந்த ஸ்டாலின்! ராகுல் காந்திக்கு சீக்ரெட் மெசேஜ்?
தமிழக அரசியல் களத்தில் திமுக - காங்கிரஸ் இடையிலான உறவு இப்போது ஒரு நெருப்பு வளையத்திற்குள் சிக்கியிருப்பதாகவே தோன்றுகிறது.. காரணம் இன்னும் கூட்டணி முடிவாகவில்லை.. இழுபறியில் உள்ளது.. இரு கட்சிகளிடையே இணக்கமான போக்கு இருப்பதாகவும் தெரியவில்லை.. தேமுதிகவும் கூட்டணிக்குள் வந்துவிட்ட நிலையில், காங்கிரஸ் நிலைமை தெரியவில்லை.. என்னதான் நடக்கிறது கூட்டணியில்?
பல ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் இடையிலான "கிச்சன் கேபினட்" நட்பு இப்போது கசக்கத் தொடங்கியிருப்பதாகவே தெரிகிறது.. கடந்த கால தேர்தல்களில் தொகுதிப் பங்கீட்டின்போது முதல் ஆளாக வந்து கைகுலுக்கும் காங்கிரஸ், இந்த முறை இழுபறியில் நிற்பது அரசியல் நோக்கர்களை புருவம் உயர்த்தச் செய்துள்ளது..


10 தொகுதிகளை லாவகமாக அள்ளிக்கொண்டு போன காலம் மறைந்து, இப்போது "ஆட்சியில் பங்கு" மற்றும் "கூடுதல் இடங்கள்" என்ற கோரிக்கைகள் வெளிப்படையாகவே வெடிக்கத் தொடங்கிவிட்டன..
இந்த மோதலுக்குப் பின்னால் காங்கிரஸ் நிர்வாகிகள் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோரின் தொடர்ச்சியான விமர்சனங்களே பிரதான காரணமாகப் பார்க்கப்படுகிறது..
திமுக - காங்கிரஸ் கூட்டணி
இவர்களின் செயல்பாடுகள் திமுக தலைமைக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் ஸ்டாலின் இது குறித்து அதிரடியான முடிவெடுக்கத் தயாராகிவிட்டார்.
ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்ட ஒரு ரகசிய செய்தியில், இந்த இருவர் மீதும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.. தனிநபர் விமர்சனங்கள் கூட்டணியின் அடித்தளத்தையே ஆட்டுவிப்பதாக திமுக கருதுகிறது..
 

மறுபுறம், காங்கிரஸ் மேலிடம் காட்டும் மௌனம் ஸ்டாலினை மேலும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.. சமீபத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் இது குறித்து வருத்தம் தெரிவிக்கப்பட்டும், டெல்லி மேலிடத்திடமிருந்து பெரிய அளவில் எதிர்வினைகள் வரவில்லை..
கசப்பான அனுபவங்கள்
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசும்போது அவருக்கு அரணாக நிற்கும் திமுக எம்பிக்கள், சமீபத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின்போது ஒட்டுமொத்தமாக அவையில் இல்லாமல் போனது, காங்கிரஸிற்கு திமுக கொடுத்த ஒரு மென்மையான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.. ஹரியானா, டெல்லி போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் தமிழகத்திலும் எதிரொலிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது..
 

இந்தச் சூழலில் தான், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் வருகை ஒரு முக்கிய திருப்புமுனையாக மாறியுள்ளது.. திமுகவுடனான உறவு முறிந்தால், காங்கிரஸுக்கு இருக்கும் ஒரே புகலிடம் தவெக மட்டுமே.. விஜய்க்கு தமிழகம், கேரளம், புதுச்சேரி என மூன்று மாநிலங்களிலும் இருக்கும் ரசிகர் பட்டாளம் காங்கிரஸின் தேசிய அரசியலுக்கு உதவும் என ஒரு தரப்பினர் கணக்குப்போடுகிறார்கள்..
விஜய்யுடன் காங்கிரஸ் கைகோர்த்தால், அது திமுகவின் வாக்கு வங்கியில் பெரும் சரிவை ஏற்படுத்தும் என்பதோடு, சிறுபான்மையின வாக்குகளிலும் பிளவை உண்டாக்கும்..
ராகுல் காந்தி முடிவு என்ன?
 

தற்போது நிலவும் சூழலில், திமுக தனது ஆளுமையின் கீழ் கூட்டணிக் கட்சிகள் அடங்கி இருக்க வேண்டும் என விரும்புகிறது.. ஆனால், தங்களது பலத்தை நிரூபிக்கவும் உரிமைகளைக் கேட்கவும் காங்கிரஸ் பிடிவாதம் காட்டுகிறது.. மல்லிகார்ஜுன கார்கேவை செல்வப்பெருந்தகை சந்திப்பதும், டெல்லியில் அரங்கேறும் திரைமறைவு நகர்வுகளும் தமிழக அரசியலில் ஒரு மெகா மாற்றத்திற்கான அறிகுறியாகவே தெரிகிறது..
ராகுல் காந்தி தனது கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்து ஸ்டாலினை சமாதானப்படுத்துவாரா அல்லது புது ரத்தமான விஜய்யுடன் கைகோர்த்து புதிய பாதையில் பயணிப்பாரா என்பதே தற்போதைய மில்லியின் டாலர் கேள்வி.. தமிழக அரசியல் வானில் ஒரு பெரும் புயல் வீசத் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் மறுக்க முடியாது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

கருத்துகள் இல்லை: