ஞாயிறு, 17 மே, 2020

மாநகரங்களின் கதை கேள்விக்குறி? கிராமங்களை நோக்கி மக்கள்?

  மின்னம்பலம்: கொரோனாவால் நாடு முழுதும் விதிக்கப்பட்ட
ஊரடங்கு மாநகரங்களை நோக்கி வேலைக்காக சென்ற இளைஞர்களின் மனதுக்குள் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. மாவட்ட, மாநில எல்லைகளைத் தாண்டி இந்தியா முழுவதிலுமுள்ள கிராமத்து இளைஞர்கள் வேலைக்காக மாநரகங்களைத் தேடிச் சென்றார்கள். உபி, மபி, ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மாநிலத்து கிராம இளைஞர்கள் புதுடெல்லி என்ற மாநகரத்தில் வேலைக்காக மொய்த்தார்கள். அதேபோல மும்பைக்கும் பலர் வேலைக்குச் சென்றார்கள். வட மாநில, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தின் சென்னை, கோவை, திருப்பூர் என்று மாநகரங்களில் பணிபுரிந்து வந்தார்கள்.
அந்த வகையில் உத்திரப்பிரதேச மாநிலம் மொரோதாபாத் பகுதியில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஆகாஷ் மும்பையில் கூலி வேலைக்காக சென்று தங்கியிருந்தார், திடீரென கொண்டு வரப்பட்ட ஊரடங்கால் மும்பையில் சிக்கிக் கொண்ட ஆகாஷ் சிறப்பு ரயிலில் நேற்று (மே 16) தன்னுடைய சொந்த ஊரான மொரோதாபாத்துக்குத் திரும்பினார்.

அப்போது அவரிடம் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் ஊரடங்கு அனுபவம் பற்றிக் கேட்கையில்,

“ஊரடங்கின்போது நான் சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டப்பட்டேன். மும்பையில் நான் கழித்த இந்த இரண்டு மாதங்களும் என் வாழ்க்கையின் இருண்ட காலம். எனக்கு என் முதலாளி பணம் கொடுக்கவில்லை. அதனால் சாப்பாட்டுக்குக் கூட கஷ்டப்பட்டேன். ஒவ்வொரு நாள் சாப்பாட்டுக்கும் நான் பட்ட பாடு மறக்காது. இப்போதுதான் ஒரு வழியாக ரயில் கிடைத்து நான் சொந்த ஊருக்கு வந்திருக்கிறேன். இனிமேல் வேலைக்காக இவ்வளவு தூரம் பயணித்து மாநகரங்களை நோக்கி போகவே மாட்டேன். இங்கே என் ஊருக்குப் பக்கத்தில், என் மாவட்டத்தில் கிடைக்கும் வேலையை செய்துகொண்டு இங்கேயே இருப்பேனே தவிர வெளி மாநிலங்களுக்கு போகவே மாட்டேன்” என்று உறுதியெடுத்துள்ளதாகக் கூறியுள்ளார் ஆகாஷ்.
ஆகாஷைப் போலவே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இனி வெகுதூர மாநகரங்களுக்கு செல்லமாட்டோம், சொந்த ஊரிலேயே சொந்த மாவட்டத்திலேயே வேலை பார்ப்போம் என்று முடிவெடுத்துள்ளனர். இது சமூக, பொருளாதாரத்தில் பெரிய அளவு மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும்.
-வேந்தன்

கருத்துகள் இல்லை: