வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

ஆண்டாள் அழகர் கல்லூரி முதல் அண்ணா அறிவாலயம் வரை..

 tamil.oneindia : ஆண்டாள் அழகர் கல்லூரி முதல் அண்ணா அறிவாலயம் வரை.. திமுக - தேமுதிக இடையில் உறவு உருவானது இப்படிதான்!
21 ஆண்டு கால தேமுதிக அரசியல் வரலாற்றில், முதல்முறையாக திமுக உடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. பிரேமலதா விஜயகாந்தின் இந்த முடிவுக்கு பின் பல்வேறு சந்திப்புகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. அதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
திமுக கூட்டணியில் முதல்முறையாக தேமுதிக இணைந்துள்ளது. 2011 தொடங்கி 2019 வரை ஒவ்வொரு தேர்தலின் போதும் திமுக தரப்பில் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு கொண்டே இருந்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவின் போது விஜயகாந்த் கண்ணீர்விட்டு அழுத வீடியோ திமுகவினரையும் கலங்க செய்தது.
தேமுதிக கூட்டணி
இதனை மனதில் வைத்து தான் 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது ஸ்டாலின் கூட்டணிக்கு அழைத்தார். அப்போது பிரேமலதா விஜயகாந்த் செய்த சில செயல்கள் திமுகவை கொந்தளிக்க வைத்தது. இதன்பின் விஜயகாந்த் மறைவின் போது யாரும் கேட்காமலேயே அவருக்கு அரசு மரியாதை வழங்கி, பொதுமக்கள் அஞ்சலி செலுத்த திமுக பணிகளை செய்து கொடுத்தது.


பொறுப்புக்கு வந்த பிரேமலதா
இருந்தாலும் 2024 லோக்சபா தேர்தலின் போது தேமுதிக மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைந்தது. இதனால் தேமுதிகவை முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை. இதனிடையே தேமுதிக தலைமைப் பொறுப்புக்கு வந்த பிரேமலதா விஜயகாந்த் தங்களின் கட்சி நிர்வாகிகளை எம்எல்ஏ ஆக்குவதற்கு பொறுப்பை கையில் எடுத்தார்.
ஆண்டாள் அழகர் கல்லூரி
இதனிடையே அதிமுக உறுதி கொடுத்த ராஜ்ய சபா சீட் கொடுக்கப்படாததும் தேமுதிக தலைமையை அதிருப்தி அடைய செய்தது. இப்படியான சூழலில் தான் கடந்த ஆண்டு விஜயகாந்த் நடத்தி வந்த ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி விற்பனை செய்யப்பட்டது. இதனை வாங்கியது தனலட்சுமி சீனிவாசன் குரூப் தான். இந்த மருத்துவக் கல்லூரி நிறுவனத்தின் தலைவரின் மகன் தான் மணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவன்.
ஸ்டாலின் சிக்னல்
இந்த விவகாரம் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் எ.வ.வேலு காதுகளுக்கு சென்றது. விஜய்யின் அரசியல் வருகையால் சில பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய சூழலில் திமுக இருக்கிறது. இதனால் தேமுதிகவை கூட்டணிக்கு கொண்டு வர முதல்வர் ஸ்டாலினும் சிக்னல் கொடுக்க, உடனடியாக பிரேமலதா விஜயகாந்த் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
திமுக கொடுத்த உறுதி
அதிமுக கொடுப்பதாக இருந்த ஒரு ராஜ்ய சபா சீட் மற்றும் 9 சட்டசபைத் தொகுதிகள் என்று பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. அதேபோல் விஜயபிரபாகரனின் வெற்றிக்கு தாங்கள் பொறுப்பு என்றும் திமுக நம்பிக்கை கொடுத்திருக்கிறது. இதனால் பிரேமலதா விஜயகாந்த் இறங்கி வந்திருக்கிறார். அப்போது விருதுநகரில் ஒரு தொகுதியில் விஜயபிரபாகரன் போட்டியிட தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரி இருக்கிறார்.
ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு
அதற்கும் திமுக தலைமை ஒப்புதல் கொடுத்துள்ளது. இதன் காரணமாகவே அப்போலோ மருத்துவமனையில் இருந்து ஸ்டாலின் டிஸ்சார்ஜ் ஆன பின் உடனடியாக வீட்டிற்கு சென்று பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தார். அப்போதே கூட்டணியும் உறுதி செய்யப்பட்டு வந்தது. இதனிடையே பிரேமலதா விஜயகாந்தின் சுற்றுப்பயணத்திற்கும் மறைமுகமாக எவ வேலு உதவியதாக கூறப்படுகிறது.
விஜயகாந்திற்கு உதயநிதி மரியாதை
இதன்பின் விஜயகாந்த் ஜெயந்தியின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சென்று மரியாதை செலுத்தினர். அவ்வளவு எளிதாக மற்ற கட்சிகளின் நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க மாட்டார். இதன் மூலமாகவே கூட்டணி கிட்டத்தட்ட உறுதி என்று விவாதமாகியது.
தேமுதிக மாநாடு
ஆனால் விஜயகாந்த் ஜெயந்தியின் போது எடப்பாடி பழனிசாமி நேரில் வந்தது பலருக்கும் ஆச்சரியம் அளித்தது. இதன்பின் பாஜகவும் பிரேமலதா விஜயகாந்த் உடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் ஜனவரி 9ஆம் தேதியே கூட்டணிக்கான முடிவினை பிரேமலதா விஜயகாந்த் எடுத்துவிட்டதாக பலரும் கூறினர்.
ஆண்டாள் கோயிலில் தரிசனம்
அதற்கு விருதுநகர் சுற்றுப்பயணத்தின் போது பிரேமலதா விஜயகாந்த் ஸ்ரீவில்லுப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்ததே சாட்சி. ஏனென்றால் 2011ஆம் ஆண்டு அதிமுக உடன் கூட்டணி அமைந்த பின்னரும் இதே கோயிலில் பிரேமலதா பிரார்த்தனையில் ஈடுபட்டார். தொடர்ந்து தேமுதிக மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி அறிவிப்பை வெளியிடாததற்கு திமுகவின் கோரிக்கையே காரணமாக பார்க்கப்படுகிறது.
திமுக ஆடிய ஆட்டம்
கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைவதற்கு முன் எந்தெந்த கட்சிகள் அதிக குரல் கொடுக்கிறார்கள் என்பதை கவனிக்கவே திமுக தாமதம் செய்திருக்கிறது. இப்படியான சூழலில் காங்கிரஸ் கட்சி மட்டுமே ஆட்சியில் பங்கு தொடர்பாக பேசியது. இந்த நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன் தேமுதிக கூட்டணி அண்ணா அறிவாலயத்தில் உறுதியாகி இருக்கிறது. இதனால் தேமுதிகவை வைத்து திமுக மறைமுகமாக ஒரு ஆட்டம் ஆடி இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை: