திங்கள், 18 மே, 2020

பெரிய புராணம் .. மனித நேயத்திற்கும் சமத்துவத்திற்கும் எதிரான கருத்துக்களே நிறைந்துள்ளன

Dhinakaran Chelliah : பெரிய புராணம் கற்றுக் கொடுக்கும் பெரிய பாடம்!
அறிவிற் சிறந்த சைவ சித்தாந்தப் பெருமக்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்:
பன்னிரண்டாம் திருமுறையான பெரிய புராணம் - 8.03 நரசிங்க முனையரைய நாயனார் புராணத்தில் உள்ள 3989 ஆவது பாடல் இது,
‘சீலம் இலரே எனினும்
திருநீறு சேர்ந்தாரை
ஞாலம் இகழ்ந்து அருநரகம்
நண்ணாமல் எண்ணுவார்
பாலணைந்தார் தமக்கு அளித்தபடி
இரட்டிப் பொன் கொடுத்து
மேலவரைத் தொழுது இனிய மொழி
விளம்பி விடை கொடுத்தார்’
“திருமுனைப்பாடி நாட்டினை ஆண்டு வந்தவர் நரசிங்க முனையரையர். திருவாதிரைத் திருநாளில் பெருமானின் அடியார்களுக்கு பொற்காசுகள் கொடுக்கும் பழக்கம் உடையவர். ஒருமுறை அவர் பொற்காசுகள் கொடுத்த போது, காமத்தின் பால் வயப்பட்டு மயங்கிக் கிடந்து காமக்குறிகள் வெளிப்பட தோன்றிய நிலையில் இருந்த மனிதர் ஒருவர், திருநீறு அணிந்தவராக, பொற்காசுகள் வாங்குவற்கு வந்தார். அவரது நிலையைக் கண்டு மற்றவர் எள்ளி நகையாடி, அருவருத்து ஒதுங்கினார்கள். ஆனால் நரசிங்க முனையரையர் அவருக்கு இரண்டு மடங்கு பொற்காசுகள் கொடுத்தார். நல்லொழுக்கம் இல்லாதவராக திகழ்ந்த அவரை, திருநீறு அணிந்த தன்மையை பொருட்படுத்தாமல் இகழ்ந்தவர் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக இரண்டு மடங்கு பொன் கொடுத்தார் என்று சேக்கிழார் கூறுகின்றார்.”

இது ‘வாரம் ஒரு பதிகம்’ https://vaaramorupathigam.wordpress.com/…/6-61-maathinaiyo…/ எனும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளக்கம்.
சீலம் என்றால் ஒழுக்கம் என்று பொருள், “சீலம் இலரே எனினும்” என்றால் ஒழுக்கமே இல்லாமல், அதாவது இன்றைய தேதியில் தண்ணி கஞ்சா அடித்து பல பெண்களுடன் கூடி அடுத்தவர் பணத்தைக் கொள்ளை அடித்து பாழாய் போனாலும் அவர் திருநீறை அணிந்திருந்தால் (திருநீறு சேர்ந்தாரை) அவரைப் போற்றி அவருக்கு இரட்டிப்பாக பொன்னும் பொருளும் அளித்து சிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறார் சேக்கிழார்.
இப்படி சீலம் இல்லாதவர்கள்தான் நம் மத்தியில் உலா வரும் இன்றைய அரசியல்வாதிகளும், ஆன்மீகவாதிகளும்,கொள்ளையர்களும்.
இப்படிப்பட்ட பெரிய புராணக் கதைகளையும் இதிகாசக் கதைகளையும் நாம் கேட்டுக் கேட்டுப் பழகியதன் விளைவுதான் இன்றும் கடவுள் பெயர் சொல்லி ஏமாற்றும் போலிச் சாமியார்களைக் கண்டும் அவர்களை ஒதுக்காமல் சகித்துக் கொண்டிருக்கிறோம்.நமக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டாலும் எல்லாம் விதி தலை எழுத்து என ஒத்துக் கொள்கிறோம்.
நான் உங்களைக் கேட்கிறேன், இன்றைய நாளில் எவனாவது ஒருவன் திரு நீறு அணிந்து காம இச்சையுடன் நம் குடும்பத்தாரை நோக்குகிறான் எனில் அவனை நாம் வேடிக்கை பார்ப்போமா இதுதான் கேள்வி!
கொஞ்சமாவது சிந்திக்கவும், கண்ணை மூடிக் கொண்டு சிவ புராணம் பெரிய புராணம் கந்த புராணம் என ஆதரித்தல் கூடுமா?!
இனி இன்னொரு பெரிய புராணப் பாடலைப் பார்ப்போம்.
பன்னிரண்டாம் திருமுறையான பெரிய புராணம் - 8.05 கலிக்கம்ப நாயனார் புராணத்தில் உள்ள 4019 ஆவது பாடல் இது,
‘வெறித்த கொன்றை முடியார்தம்
அடியார் இவர்முன் மேவுநிலை
குறித்து வெள்கி நீர்வாரா
தொழிந்தாள் என்று மனங்கொண்டு
மறித்து நோக்கார் வடிவாளை
வாங்கிக் கரகம் வாங்கிக்கை
தறித்துக் கரக நீரெடுத்துத்
தாமே அவர்தாள் விளக்கினார்’
“பெண்ணாகடம் நகரத்தில் வாழ்ந்து வந்த கலிக்கம்பர் தினமும், தனது இல்லத்திற்கு வரும் அடியார்களின் திருவடிகளை தூய்மை செய்து, நிதி அளித்து, அவர்களுக்கு அன்னம் அளிக்கும் பழக்கம் கொண்டவர். பல நாட்களுக்கு முன்னர் அவரிடம் வேலைக்காரராக பணி செய்த ஒருவர் சிவனடியார் வேடத்தில் ஒரு நாள் கலிக்கம்ப நாயனார் இல்லத்திற்கு வந்தார். அவர் பழைய வேலையாள் என்பதை உணர்ந்த அவரது மனைவியார், தனது கணவர் அவரது பாதங்களை கழுவதற்கு ஏதுவாக நீர் விடுவதற்கு தயங்கினார். மனைவி தயங்கியதை உணர்ந்த கலிக்கம்பர், மனைவியிடம் இருந்த நீர்ச் சொம்பினை தான் வாங்கி அடியாரின் கால்களை கழுவினார். பின்னர் தயங்கிய மனைவியின் கைகளை வெட்டினார். சிவ வேடத்திற்கு உரிய மதிப்பு அளிக்காத மனைவிக்கு தண்டனை அளித்தமை சேக்கிழாரால் பெரிய புராணத்தில் போற்றப்படுகிறது.”
இதுவும் ‘வாரம் ஒரு பதிகம்’இணைய தளத்தில் கூறப்பட்டுள்ள விளக்கம்.
சிவனடியார் வேடத்தில் வந்தவரை நம்பி மனைவியின் கையை வெட்டுபவர்கள் மனிதர்களா? சொல்லுங்கள் சைவ சித்தாந்த நண்பர்களே?! சமயமும் மத போதனைகளும் உங்களை எந்த அளவு கண்களை மூட வைத்துள்ளது என்பதை உணருங்கள்!
இது போன்ற பற்பல கதைகளைம் மனித நேயத்திற்கும் சமத்துவத்திற்கும் எதிரான கருத்துக்களே புராணங்களில் நிறைந்துள்ளன. ஆதிக்கத்தை ஆதரிக்கவும்,பாமர மக்களை ஏமாற்றும் வித்தைகள் கொண்ட கதைகள்தான் நாம் இது வரை நல்லவை என நம்பிய புராண கதைகளும் இதிகாசங்களும். நாயன்மார்களின் வரலாற்றை, அதுவும் புகழ் பெற்ற ஆறுமுக நாவலர் எழுதிய நூலில் உள்ளவற்றை பல பதிவுகளில் பதிவு செய்துள்ளேன்.தயவு செய்து பதிவு எழுதிய என்மீது உங்கள் கோபம் திரும்புவதைவிட இந்த நூல்களை எழுதியவர்கள் மீதும் இவற்றை உயர்வாகக் கருதி இன்றும் கோயில்களில் பிரசங்கம் எனும் பெயரில் மக்களைப் பாழ்படுத்திவரும், பணம் சம்பாதிக்கும் கும்பல் மீது திரும்பினால் அது தகும்!

கருத்துகள் இல்லை: