புதன், 18 பிப்ரவரி, 2026

அக்கா மானமே போச்சு, அவனை சும்மா விட்றாதே! சேலம் ஆசிரியையின் 4 பக்க ஆங்கில லட்டரில் உருக்கமான ரகசியம்

tamil.oneindia.com : சேலம்: சேலம் மாவட்டம் இளம்பிள்ளையைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியை சண்முகப்பிரியா, தனது முன்னாள் காதலன் கௌதமின் தொடர் மிரட்டலால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..
இந்நிலையில், சண்முகப்பிரியா தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்துள்ள கடிதம், அவரது குடும்பத்தையே உலுக்கி போட்டுள்ளது..
சேலத்தை சேர்ந்த 22 வயது சண்முகப்பிரியா, கல்லூரியில் படிக்கும்போது கௌதம் என்பரை காதலித்துள்ளார்.. ஆனால் கௌதமின் தவறான நடத்தையினால் சண்முகப்பிரியா முறித்துக் கொண்டுள்ளார்.
” இதனை ஏற்காத கௌதம், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதுடன், சண்முகப்பிரியாவிற்குப் பார்த்த வரன்களையும் தடுத்துவந்துள்ளார்..

இதனால் சண்முகப்பிரியாவின் தாயார் நேரில் சென்று எச்சரித்த பின்னரும் கௌதம் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லையாம்.

ஆங்கிலத்தில் 4 பக்க கடிதம்

நாளுக்கு நாள் சண்முகப்பிரியாவுக்கு டார்ச்சர் அதிகரித்துள்ளது.. தனிப்பட்ட போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என ஆபாச மிரட்டல் விடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார் கௌதம்.

இந்த ஆபாச மிரட்டலால் பயந்த சண்முகப்பிரியா, தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விபரீத முடிவை எடுத்துள்ளார்.

சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட சண்முகப்பிரியா, தனது இறப்பிற்கு கௌதமே காரணம் என நான்கு பக்க உருக்கமான கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளார்.

மகுடஞ்சாவடி போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கௌதமைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சண்முகப்பிரியா எழுதியிருந்த கடிதம் இதுதான் “எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த மாதிரியான நிலைமை வரக்கூடாது..

என்னால முடியல.. மன்னிச்சிருங்க.. இடையில் வந்து அவன் என் வாழ்க்கையை அழிச்சிட்டான்.. என்னை மகிழ்ச்சியாக வாழ விடமாட்டான்.. அப்பா இல்லாமல் என்னை வளர்த்தீங்க..

நான் உங்களுக்கு இவ்வளவு கஷ்டத்தைத் தந்துட்டேன்.. அம்மா, அக்கா, மாமா… உங்களுக்கு மகளாக இல்லாமல் போகிறேன்.. எல்லாரும் நிம்மதியாக இருங்க.. கஷ்டப்படாதீங்க.. வாழ்க்கை இப்படித்தான் முடியும் போல.. என் வாழ்க்கை முடிந்து போயிருச்சு..

இனி உங்கள் வாழ்க்கையைப் பாருங்க.. என்னை நினைத்து அழுதுகொண்டு இருக்காதீங்க..

அட்ஜெஸ்ட் பண்ண முடியல

இவ்வளவு நாள் அட்ஜெஸ்ட் பண்ணிட்டு இருந்தேன்.. இனிமேல் என்னால் முடியல.. அவன் ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டான்..

என் மனதைக் கெடுத்துட்டான்.. யார் யார் முன்னாடி வாழணும்னு நினைச்சேனோ, எல்லார் முன்னாடியும் என்னைத் தலைகுனிய வைச்சிட்டான்..

என்னால் முடியல.. இது எல்லாவற்றிற்கும் கௌதம் மட்டும்தான் காரணம்.. அவனை வாழ விடாதீங்க.. நான் கும்பிட்ட சாமி கூட என் கூட நிற்கவில்லை..

இதற்கு மேல் என்னால் வாழ முடியாது.. யாருக்கும் நான் மனதால் கூட கெடுதல் நினைத்தது இல்லை.. அது உங்கள் எல்லாருக்கும் தெரியும்.. என் குடும்பத்தைத் தூங்கவிடாமல் பண்ணிட்டான்.. என் மனம் உடைந்துபோச்சு.. கௌதமை மட்டும் விட்றாதீங்க..

விட்றாதீங்க அக்கா

எனக்கு ஒன்று என்றால் நீ சும்மா விடமாட்டாய் அக்கா, அது எனக்குத் தெரியும்..

அந்த தைரியத்தில்தான் இந்த முடிவை எடுக்கிறேன்.. குடும்பம், குழந்தை என்று ஆசைப்பட்டேன்.. என் வாழ்க்கையை அழிச்சிட்டான்.. என் மானம், மரியாதை எல்லாம் அவனால் போச்சு..

என்ன ஆனாலும் அவனை விடாதீங்க.. நான் செத்தாலும் அவனைச் சும்மா விடாதீங்க.. நான் மகிழ்ச்சியாக வாழணும்னு ஆசைப்பட்டேன்..

நான் நன்றாக வாழணும்னு ஆசைப்பட்டேன்.. ஆனால் அவன் என்னை விடவில்லை.. அவனால் குடும்பப் பெயரைக் கெடுத்துட்டேன், என்னை மன்னிச்சிருங்க.. அவனை நம்பியது மிகப்பெரிய தவறுதான்..” என்று எழுதி வைத்துள்ளார்..!!

கருத்துகள் இல்லை: