வியாழன், 21 மே, 2020

முள்ளி வாய்க்காலுக்கு பிந்திய திடீர் கோடீஸ்வரர்கள்.. லண்டன்

கலா ஶ்ரீரஞ்சன் : ; முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஓர் ஆனித்திருநாளில் மறைந்த திரு.அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு உரித்தான வீடொன்று லண்டனில் சீல் வைக்கப்பட்டது. அது தெரியாமல், நான் பாட்டுக்கு வீட்டில் இரண்டு குழந்தைகளுக்கும் படிப்பித்துக் கொண்டிருக்க கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தேன்.
இரண்டு வளர்ந்த ஆங்கிலேய குழந்தைகள், படங்களில் வரும் கதாநாயகர்கள் போல் சொல்லி வைத்தாற்போல் ஒரே நேரத்தில் தமது அடையாள அட்டையை என் முகத்துக்கு நேரே பிடித்தார்கள். கோதாரி விழ, ஸ்கொட்லண்ட் யார்ட் ( Scotland Yard) வந்து கைது செய்யுமளவுக்கு நான் என்னத்தை செய்தன் எண்டு யோசித்து முடிக்க முன்னமேயே அவர்கள் வலும் பௌவியமாக தமது காருக்குள் இருக்கும் ஒரு பெண்ணையும் மூன்று குழந்தைகளையும் காட்டி இவர்களைத் தெரிகிறதா? இவர்களுக்குப் படிப்பித்தாயா? என்றதும், நான் படிப்பிச்சது சரியில்லையோ என்றொரு கவலையும் மின்னலாய் வந்து போயிற்று.

அதன் பின் எல்லாமும் நொடிப்பொழுதில் எனக்கு விளங்கப்படுத்தப்பட்டது. அக்குடும்பத்தலைவரை தாம் விளக்கத்திற்காக கைது செய்துள்ளோம், அவர்கள் வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது, பாவம் இந்தப்பெண், உன்னைத் தவிர வேறு எங்கும் போக மாட்டேன் என்று அடம் பிடித்ததால் தான் இங்கு வரவேண்டியிருந்தது. அவரும் குழந்தைகளும் தான் அதிர்ச்சியில் உள்ளார்கள், எம்மால் இவர்களுக்கு என்ன உதவி தேவையோ எதையும் செய்யக் காத்திருக்கிறோம் என்றவாறே தனது பெயர், தொலைபேசி அடங்கிய ஒரு கார்ட்டை என் கையில் திணித்து விட்டு மெத்தப்பெரிய உபகாரம் என்று சொல்லிப் போனபின் தான் என்ன நடந்திருக்கும் என்பது என் மண்டையில் உறைத்தது.
அதன் பின் வந்த நாட்களில் நடந்தவை சொல்லி மாள முடியாதவை.
எம் இனிய தமிழ் மக்கள் ஒருவர் ஒருவராய் மறைந்து போயினர். வழி தெருவில் என்னைக் கண்ட, கொடி பிடித்து ‘தமிழ் என் உயிர்’ என ஆர்ப்பாட்டம் போட்ட சிலர் என்னை முன் பின் தெரியாத அந்நியர் ஆகினர். வேறு வழியின்றி கதைக்க வேண்டி வந்தவர்கள் அநேகமாக என்னையும் கைது செய்வார்கள் என உண்மையாகவே ஜோக்கடித்தனர். தொலைபேசிகளும் தொடர்புகளும் கூட புலனாய்வு செய்யப்படலாம் என்பதாகிப் போனதில் வீடு அமைதியாகிப் போனது. என் குழந்தைகளோடு அக்குழந்தைகளையும் பாடசாலைக்கு அழைத்துப் போன போது, தலைவர் இவர்களுக்கு தேவையானதை கவனிக்கச் சொன்னதாக காதோடு வந்த சேதியைக் காற்றோடு பறக்க விட்டோம்.
அதை விட தாயும் குழந்தைகளும் நலமா எனக்கேட்டு வந்தது ஒரேயொரு குடும்பம் மட்டுமே. மிகுதியாயிருந்த சறுகுப் புலிகள் அவசர அவசரமாய், தாம் புலிகளின் பெயரில் பொது மக்களிடமிருந்து பிடுங்கியதை பதுக்குவதில் மும்முரமாய் மறைந்து போயினர். இது மட்டுமன்றி அதற்கு முன் சுனாமி -ஆழிப்பேரலையால் சேகரிக்கப்பட்ட பலகோடிகளும், அதன் பின் முள்ளிவாய்க்கால் பேரவலத்தோடு கோடானு கோடிகளும் இன்னும் பல திடீர் கோடீஸ்வரர்களை பல நாடுகளிலும் உருவாக்கியதும் குறிப்பிடத்தக்கது! 😩
அந்த வீட்டை சீல் வைத்த கனவான்களுடன் தொலைபேசி அக்குழந்தைகளுக்குரித்தான, தாய்க்குரித்தான முக்கிய ஆவணங்களை எடுத்துத் தரும்படி கோரி, அவர்களுடன் அந்த சீல் வைத்த வீட்டிற்கு போயிருந்த போது, அவ்வீட்டின் பின்புறம் கூடாரம் அடித்து வீட்டைப் பிரித்துப் போட்டிருந்தார்கள்.
என்னைப் பார்த்த பக்கத்து வீட்டு மிகவும் முதிய ஆங்கிலேய ஆச்சி ஓடி வந்து அவர்களின் முகத்துக்கு முன் என்னிடம் கூறினார்,
“ பிள்ளை அந்நிய நடமாட்டமாய் தெரியுது, பாத்து சூதனமாய் நடந்து கொள், ஆக்கள் சந்தேகத்துக்கிடமாய் இருக்கினம்!”
(“ There are some intruders in the garden sweetheart, you be careful, they seem very suspicious!” )
அவர்கள் சிரிக்க முடியாமல் தலையைச் சொறிந்து கொண்டனர்.
மூலைக்கடை வைத்து தான் வறுமையில் வாடுவதாக அழும் ஒருவர், தன் வீட்டுப்பெண் குழந்தையின் வைபவத்தை பல்லாயிரக்கணக்கில் ஒரு நாள் வாடகைக்கு எடுத்த Addington Palace இல் கொண்டாடித்தீர்த்தார். இது போல இன்றும் எத்தனையோ இன்னும் நடக்கிறது, நம் எல்லோருக்கும் இவர்களை தெரியும் !
நீங்கள் பதுக்கியது புலிகளின் பெயரில், பொது மக்களின் சொத்து! முழுவதையும் பொதுமக்களுக்கே திருப்பித்தருவதில் சிக்கல்கள் இருக்கலாம். நீங்கள் வாங்கி விட்டிருக்கும் மாளிகை போன்ற வீடுகளையும் விற்க முடியாதிருக்கலாம். ஆனால் முன்னாள் போராளிகள் அங்கவீனர்களாக, பொருளாதார வசதியின்றி, அதிலும் குறிப்பாக முன்னாள் பெண் போராளிகள் படும் அன்றாட அவஸ்தையை நீங்கள் அறிந்து கொள்ளாமல் இல்லை. உங்களில் எவரும் இவர்களுக்கு வாழ்வாதார வசதிகளாவது செய்து கொடுக்கலாம் அல்லவா?
கல்வி அறிவும், அரசியல் ஞானமும், மொழி வளமும், காத்திரமான எண்ணங்களும் கொண்ட பலர் புலிகளைப் பூஜிப்பதாக எண்ணிக்கொண்டு ஒரு வித மாயாலோகத்தில் இருந்து கொண்டு , இனவாதத்தையும் மொழிவாதத்தையும் வளர்ப்பதில் பெருமை கொள்வது நாம் மாவீரர்களுக்கு செய்யும் அநியாயமன்றி வேறில்லை. உங்கள் திறமையால், ஒருவரையொருவர் தட்டிக்கொடுத்து இனவாதத்தையும் மதவாதத்தையும் எந்த வித தொலை நோக்கு சிந்தனையுமின்றி வளர்ப்பதை விட, முதலில் இவர்களை கண்டறியுங்கள்.
வருடங்கள் ஓடியதில் இத்திடீர் கோடீஸ்வரர்கள் சமூக சேவகர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். கறுப்பாக இருந்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு படாத பாடு படும் இவர்களை நாம் கண்டு கொண்டு தான் இருக்கிறோம். அனேகமான பாடசாலை விழாக்களில் இவர்களில் ஒருவரையாவது மாலையுடன் மேடையில் பார்க்கக் கிடைக்கிறது என்பது உபரி செய்தி.
எம்மிடையே வாழும் இவ்விசக்கிருமிகளை நோக்கி உங்கள் பேனாக்களும் திரும்பட்டும். இதைச் செய்வதன் மூலம் இறுதி போரில் பாதிக்கப்பட்ட போராளிகளுக்கு உங்களால் ஏதாவது செய்ய முடியுமா எனப்பாருங்கள். அதன் பின் மற்றைய இனத்தவர்களுடன் கம்பு சுற்றலாம்!
நன்றி
- கலா ஶ்ரீரஞ்சன்

2 கருத்துகள்:

Ratnavel Sothivel சொன்னது…

பலர் இதை கண்டவுடனேயே உள்ளுக்குள் நடுங்கி கொண்டு இருப்பார்கள். இதென்ன சனியன் என்று உள்ளுக்குள் எண்ணுவார்கள். அவர்களனை நினைத்து சிரிப்பதா அழுவதா?

பெயரில்லா சொன்னது…

இங்கிலாந்தில் மட்டுமல்ல பல் வேறு நாடுகளில் இது நடந்திருக்கிறது. இந்தியாவிலும் ஏன் இலங்கயிலும்பல இடங்களில் இப்படி நடந்து உள்ளது. பல பெரும் நிறுவனங்களில் அவர்கள் இடட பணம் அந்தந்த நிறுவனங்களின் நிதி என்ற கோதாவில் மெதுவாக அமுக்கப்பட்டு விட்ட்து. கேட்பதற்கு ஆள் இருந்தால் தானே? நடுத்தர வசதி படைத்தவர்கள் உடனடியாக தேள் கொட்டிய திருடர்கள் போல் அமசடக்கக இருக்கவேண்டிய நிர்பந்தம் உடனடியாக இருந்தது உண்மை. காலம் போக அந்த நிர்பந்தமுமும் இல்லை. இலங்கயில் பலர் கிணறுகளில் நகைகளை கண்டுபிடித்ததாக கதைகள் உலாவின. அந்த திடிர் பணக்காரர்களில் பலர் ஊர்களிலே நடந்த கந்து வட்டியிலேயே அழிந்து போனார்கள் என்றும் கேள்வி. இப்படி பலாலாயிரம் கோடி புலிகளின் பணம்ஆயிரக்கணாக்கான கோடி ஸ்வரர்களை உலகமெங்கும் உருவாக்கி இருக்கிறது உண்மை