திங்கள், 18 மே, 2020

புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ்

  மாலைமலர் : புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- 
புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள புலம்பெயர்ந்த வெளி மாநிலத்
தொழிலாளர்கள் போக்குவரத்து முடக்கத்தால் சொந்த ஊர் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். கடந்த 1-ந் தேதி முதல் அவர்கள் சிறப்பு ரெயில்கள் மூலம் சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள். ஏராளமான தொழிலாளர்கள் நடை பயணமாகவும், சைக்கிள் மூலமும் ஊருக்கு செல்கின்றனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பும்போது விபத்துக்களை சந்தித்து பலியாகும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மத்திய அரசு பல்வேறு உதவித் திட்டங்களை அறிவித்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர் வி‌ஷயத்தில் ஆளும் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி சமீபத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சந்தித்து, ஆறுதல் கூறினார். இந்த வி‌ஷயத்தில் ராகுல்காந்தி நாடகம் செய்கிறார் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விமர்சித்து இருந்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது:-
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவல நிலையை வைத்து அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ‘டிராமா பாஸ்’ என்று கூறிய கருத்துக்காக அவர்களிடம் பிரதமர் மோடியும், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜீவாலா கூறியதாவது:-
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்கள் தங்களது நிலைமையை ராகுல் காந்தியிடம் விளக்கினார்கள். இதற்காக நாடகம் நடத்துவதாக கூறுவது கண்டிக்கத்தக்கது.
இதற்காக பிரதமர் நரேந்திர மோடியும், நிர்மலா சீதாராமனும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். லட்சக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவமதித்தற்காக நிர்மலா சீதாராமனை நாட்டு மக்கள் விட மாட்டார்கள்.
உதவியில்லாமல், பசியுடன் தங்களது வீடுகளுக்கு நடந்து செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் துயரங்கள் அரசாங்கத்திற்கு ‘டிராமாபாசி’ போல இருக்கிறதா? தயவு செய்து லட்சக்கணக்கான தொழிலாளர்களை அவமதிக்காதீர்கள்.

இந்த நெருக்கடி நேரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேதனையை பகிர்ந்துகொள்ள ராகுல்காந்தி சந்தித்துள்ளார். வலியை பகிர்வது ஒரு குற்றம் என்றால், காங்கிரஸ் இந்த குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்யும். இந்த உணர்ச்சியற்ற அரசாங்கத்தை பற்றி, தொழிலாளர்களின் துயரங்களை கேட்பது ஒரு குற்றம் என்றால் ராகுல்காந்தி மீண்டும் இந்த குற்றத்தை செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

கருத்துகள் இல்லை: