திங்கள், 18 மே, 2020

வன்னிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் ..

புலிகள் முடக்கப்பட்ட போது, தங்களுக்கு மனிதக் கவசங்களாக மக்களைச்

சிறை வைத்த புலிகள் தங்கள் உயிரைக் காப்பாற்ற அந்த மக்களைப் பலி கொடுத்து அதன் மூலமாக சர்வதேச அனுதாபத்தைத் தேடி யுத்தத்தை நிறுத்த பெரும் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார்கள். யுத்தத்தின் அகோரம் தாங்காமல் மக்கள் வெளியேற முயற்சிக்க, மக்கள் வெளியேறினால் இராணுவம் தங்களை வழித்துத் துடைத்து விடும் என்று, வெளியேற முயன்ற மக்களைப் புலிகள் சுட்டுக் கொன்று கொண்டிருந்தார்கள்.

பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி .thayagam.com : : கியூறியஸின் ஒரு பெரியம்மா
வட்டக்கச்சியில் வசித்தார் என்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க செய்தி சர்வதேச ஊடகங்களில் வெளிவந்தது வாசகர்கள் அறிந்ததே. ஓகே.. ஓகே... இராணுவம் வட்டக்கச்சியில் நின்ற போது, தாயகத்தில் கியூறியஸ் எழுதியதை உலகெங்கும் உள்ள மற்ற இணையத்தளங்கள் மறுபிரசுரம் செய்திருந்தன. இந்தப் பெரியம்மாவை கியூறியஸ் முதன் முதலில் சந்தித்த காட்சி நீங்கள் எந்தத் தமிழ்ப் படத்திலும் பார்த்திருக்க மாட்டீர்கள். சிறுவயதிலிருந்தே தன் சகோதரர்களை விட்டு தனியாக வளர்ந்த கியூறியஸ்க்கு தன் தாய்வழி உறவினர்களுடன் பெரிதாக சகவாசம் இருந்ததில்லை.

இதனால் இவர்களில் பலரை சுட்டிப்பயல் கியூறியஸ்க்குத் தெரியாது. இருந்தாலும், கியூறியஸின் தாய்வழிப் பாட்டி தெய்வானைக் கிழவியின் செந்தளிப்பான சுந்தர முகவெட்டு, நான்காம் தலைமுறை வரை மரபணுவால் கடத்தப்படுவதால், எல்லோருக்குமே ஒரு பொதுவான முக அமைப்புண்டு. இதனால் முன்பின் தெரியாதவர்கள் கூட எங்களை அடையாளம் கண்டுகொள்வதுண்டு. இப்படியாகத் தான் ஒருநாள் கியூறியஸ் வீதியால் சென்று கொண்டிருந்த போது, தன்னைக் கடந்து சென்ற ஒரு வயதான பெண்ணின் முகவெட்டு, ஏதோ பரிச்சயமாய் இருந்ததால், சந்தேகம் கொண்டு பின்னால் வந்த ஒரு தெரிந்த பெண்ணிடம், 'ஆர் இந்த மனிசி, தெரிஞ்ச முகமாய் கிடக்கு?' என்று கேட்க... அந்த மனிசி... 'ஐயோ கடவுளே, இது என்ன அநியாயமடா, இது தான் உன்ரை பெரியம்மா' என்று அறிமுகமாக்கி வைத்தார். அம்மாவின் மூத்த சகோதரர்களில் ஒருவரான அவருக்கு 'அக்கான்ரை அம்மா' என்று பெயர். காரணம் அவரது மூத்த மகள் தான் எங்கள் மூன்றாம் தலைமுறையின் முதல் சகோதரி.
இதைவிட, எங்கள் மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளுக்கு எல்லாம் மூத்தவரான அண்ணையைச் சந்தித்த காட்சி நீங்கள் எந்த ஹிந்திப் படத்திலும் கூடக் கண்டிருக்க மாட்டீர்கள். அம்மாவின் சகோதரிகள் எல்லோருக்கும் மூத்தவரான பெரியம்மாவின் மூத்த மகனான அவர் எங்களுக்கு எல்லாம் மூத்தவரானதால் அவரை 'பெரியம்மான்ரை அண்ணை' என்று தான் எல்லோரும் அழைப்போம். இந்த விவகாரம் எல்லாம் கியூறியஸ்க்குத் தெரியாது.
ஐந்தாறு வயதிருக்கும். ஒருநாள் வழியில் கியூறியஸைக் கண்ட ஒருவர், சந்தோசம் மிகுதியால், மணிபர்சைத் திறந்து ஐந்து ரூபாவை நீட்ட... ஐந்து சதம் ஐஸ்பழம் விற்ற காலத்தில் ஐந்து ரூபாவை நீட்டினால்... விடுவானா கியூறியஸ்? யாரோ பிள்ளைபிடிகாரன் பணத்தைக் காட்டி வசியம் பண்ணுவதாக நினைத்து பிடரியில் கால் அடிபட ஒரே ஓட்டம். பின்நாளில் தன் சகோதரனுடன் போன போது, அவரைக் கண்டு, 'உவர் அண்டைக்கு எனக்கு காசு தந்த' கதையைச் சொல்ல... 'அட மடையா, அதுதாண்டா எங்கட அண்ணை' என்று அறிமுகமானார். பொறியியலாளரான இதே அண்ணை தான் பின்நாளில் கியூறியஸ் வெளிநாடு செல்வதற்கான பாஸ்போட்டுக்கு கையெழுத்து வைக்க கொழும்பு வந்தவர்.
இப்படித் தான் கியூறியஸின் உறவினர்களுடனான சம்பந்தம்... பின்னர் வளர்ந்த காலத்தில் விசயம் விளங்கி பழகத் தொடங்கியதில் இருந்து எல்லோருக்கும் கியூறியஸ் 'இளையம்மான்ரை தம்பி'. எக்கச்சக்கமான பிள்ளைகளைக் கொண்ட அந்தப் பெரிய கூட்டத்தில் சொந்தப் பெயர் கொண்டு அழைக்கப்பட்ட ஓரிருவரைத் தவிர, மற்ற எல்லோரின் பெயரும் இப்படித் தான் காரணப் பெயராகவும் காரண காரியமில்லாத இடுகுறிப் பெயராகவும் இருந்து வந்தது.
'அக்கான்ரை அம்மா' வட்டக்கச்சிக்குக் குடிபெயர, கியூறியஸ் கூட அங்கு விஜயம் செய்து அவர்களைக் கௌரவித்திருந்தான். அவருடைய பிள்ளைகளில் ஒருவரான அக்கா ஒருவருக்கும் மைத்துனர் முறையான ஒருவருக்கும் நம் ஊரில் திருமணம் நடந்த போது, அன்புடன் அழைக்கப்பட்டு, அங்கும் போய், வாழையிலை மரக்கறிச் சாப்பாடு சாப்பிட்டு, ஆசீர்வதித்தேகியிருந்தான்.
இவர்களும் வன்னி போய் வட்டக்கச்சியிலேயே இருந்தார்கள். சில வருடங்களுக்கு முன்னர் சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில், கியூறியஸின் சகோதரிகள் வெளிநாடுகளில் இருந்து ஊருக்குப் போய் குடும்பத்தின் றியூனியன் கொண்டாட்டம் ஒன்று நடந்தது. இதில் தேசியத் தலைவரின் நல்லாட்சி காரணமாக கியூறியஸ் அந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்கவேயில்லை. எனவே, கொண்டாட்ட வீடியோ, போட்டோக்களைப் பார்த்து கால்நூற்றாண்டுக்கு முன்னால் கண்ட உறவினர்களை அடையாளம் காண முடியாது திணறி உறவினர்களிடம் கேட்டறிந்து தான் தன் இனசனத்தை கியூறியஸ் அடையாளம் கண்டான்.
அங்கே அக்கான்ரை அம்மாவின் மகளின் கணவரும் பிள்ளைகளும் சமூகமளித்திருந்தார்கள். வழமை போல, தெய்வானைக் கிழவியின் முகவெட்டுக் காரணமாக அவர்களையும் அடையாளம் காண முடிந்தது. ஒரு மகனும் மூன்று பெண்களுமாய் கியூறியஸின் மைத்துனரும் மருமக்களும் அங்கு போட்டோவிலும் வீடியோவிலும் காட்சியளித்திருந்தார்கள். அக்கா பிணை நின்றதாலோ என்னவோ வரவில்லை. மூத்த மருமகள் திருமணம் முடித்திருந்ததால் வைபவத்திற்கு வரவில்லை. மருமக்கள் எல்லாம் கியூறியஸ் தேசாந்திரியாய் புறப்பட்ட காலத்தின் பின்னால் பிறந்ததால் அவர்களை நேரில் கண்டதில்லை. இருந்தாலும் கியூறியஸின் சகோதரர்களுடன் அவர்களுக்கான நெருக்கம் காரணமாக தங்களது மாமா ஒருவர் வெளிநாட்டில் 'தேவையில்லாத வேலை பார்த்துக் கொண்டிருக்கும்' விடயம் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். கொண்டாட்டம் முடிந்து, கியூறியஸின் அக்காமார் வெளிநாடு வர, அவர்கள் எல்லாம் வட்டக்கச்சிக்குப் போய் விட்டார்கள்.
இது முன்கதைச் சுருக்கம்!
பேச்சுவார்த்தை, அது இது என்று ஒரு கூட்டம் பாங்கொங் முதல் சுவிஸ் வரை 'உலகத்தைச் சுத்திக் கொண்டிருக்க', தோள்கள் தினவெடுத்ததோ அல்லது முதுகில் அரிப்பெடுத்ததோ, 'பேச்சுவார்த்தையும் மண்ணாங்கட்டியும்' என்று தேசியத்தலைவர் ஓயாத அலைகளின் இறுதி அத்தியாயத்தை எழுத ஆரம்பித்து விட்டார்.
பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த காலத்தில் கூட, புலிகள் ஊரில் உள்ள பாட்டிகள் வரைக்கும் மிச்சம் விடாமல் இழுத்து வந்து... சே.. அழைத்து வந்து பனம் மட்டைகளைக் கொடுத்துப் பயிற்சி கொடுத்து மக்கள் படை அமைத்துக் கொண்டிருந்தார்கள். மூலையில் நின்ற ஓரிருவருக்கு ஏ.கே களையும் பின்னால் நின்ற முழுப் பேருக்கும் றீப்பைக் கட்டைகளையும் கொடுத்து தள்ளாத வயதிலும் முதியவர்களையும் குடும்பப் பெண்களையும் படம் பிடித்து, புதினத்தில் மக்கள் படை தயாராகும் கதை விட்ட போது, சமாதானத்திற்காகத் தானே பேச்சுவார்த்தை நடக்கிறது, எதற்கு இந்த யுத்த முஸ்தீபுகள் என்றெல்லாம் எந்த புலன் பெயர்ந்த மந்தைக் கூட்டமும் கேள்வி கேட்டதில்லை. ஆகா, தலைவர் மோட்டுச் சிங்களவனை அந்த மாதிரிச் சுத்தி, சாமான் கொண்டு வந்து அடிக்கப் போறார், அந்தா ஈழம் வரப் போகுது என்று தான் இவர்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள்.
சமாதான காலத்தில் தளபதிகளும் போராளிகளும் சம்சார சாகரத்தில் மூழ்கி, யுத்த முனையை மறந்து போயிருக்க... இப்பிடியே போனால் இந்த மோட்டுச் சனம் சமாதானம் என்று தன்னை மறந்து விடும் என்ற பயத்தில் தலைவர் எப்படியாவது யுத்தத்தை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அதை விட, சூரியதேவன் புகழ் பாடல்களால் மமதை தலைக்கேறி தன்னை அசைக்க முடியாது என்ற நம்பிக்கையில் மாவிலாறைப் பூட்டி யுத்தத்தை கோலாகலமாக ஆரம்பித்தார்.
கொஞ்சம் கொஞ்சமாய் அடி நடக்க, ஐந்து முனைகளில் நடந்த யுத்தத்தைச் சமாளிப்பதற்கு, ஆள் பற்றாக்குறையை நிவர்த்திக்க... வன்னியில் உள்ளவர்களைக் கட்டாயமாகப் படையில் சேர்க்க வேண்டிய கட்டாயம். திருமணம் செய்யக் கூடாது, இளவயதினர் வெளியே போகக் கூடாது என்றெல்லாம் வினோதமான சட்டங்கள் போட்டு பலாத்காரமாக ஆட்சேர்ப்பு நடந்தது. அத்துடன் பாடசாலைச் சிறுவர்கள் பலவந்தமாகக் கடத்தப்பட்டு பயிற்சி கொடுக்கப்பட்டார்கள். இதில் சிறுவர்கள் கடத்தப்படுவது பற்றி சர்வதேச அமைப்புகள் புலிகள் மீது குற்றம் சாட்டின. அதையும் விட, வன்னியில் வயது வேறுபாடின்றி கடத்தப்பட்டு கட்டாயப் பயிற்சி கொடுக்கப்பட்டு யுத்த முனையில் தள்ளிப் பலி கொடுக்கப்படும் விடயம் புலன் பெயர்ந்த கூட்டத்திற்கு தெரிந்திருந்தும் தெரியாதது போல நடித்துக் கொண்டிருந்தது. தகவல் அறிய முனைந்த சர்வதேச ஊடகங்களுக்கும், புலன் பெயர்ந்த ஏமாறிகளுக்கும் புலிகளின் ஆய்வாளர்களும் முகவர்களும் 'மக்கள் தாங்களாகவே புலிகளுடன் இணைந்து போராடுகிறார்கள்' என்று கதை விட்டுப் பேய்க்காட்டிக் கொண்டிருந்தார்கள்.
வல்லிபுனத்தில் செஞ்சோலையில் இவ்வாறு சேர்க்கப்பட்டுப் பயிற்சி கொடுக்கப்பட்டவர்கள் மீது விமானத்தாக்குதல் நடத்தப்பட்டபோது, முதலுதவிப் பயிற்சி கொடுத்ததாகப் பொய் கூறி சர்வதேச அனுதாபத்தைப் பெற முயற்சிக்கப் புலிகள் தவறவில்லை.
ஆக மொத்தத்தில் வன்னி புலிகளால் ஒரு திறந்த சிறைச்சாலையாக மாற்றப்பட்டு, வன்னி மக்கள் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டிருந்தனர். பங்கர் வெட்டுவது முதல் புலிகளுக்கு உணவு வினியோகம் செய்வது வரைக்கும் மக்கள் பலவந்தமாக ஈடுபடுத்தப்பட, புதினம் 'யுத்த முனைப் போராளிகளுக்கு உலர் உணவு வழங்கி மக்கள் கௌரவிப்பு' என்று காது குத்திக் கொண்டிருந்தது. வீடுகளுக்குள் நுழைந்து தாய்மார்களின் பிடியிலிருந்து பிள்ளைகளை இழுத்துச் சென்றது முதல் புலிகளின் கடத்தலுக்குப் பயந்து தற்கொலை செய்தது வரைக்கும், திருமண தினத்தன்று மணமக்களைக் கடத்தியது முதல் குடும்பத்தினர் புலிகளுக்கு தர்ம அடி போட்ட கதைகள் வரைக்கும் கடத்திச் சென்ற வாகனத்தின் முன்னால் படுத்து மறியல் செய்தவர்களின் மேலால் வாகனத்தை ஏற்றிச் சென்றது வரைக்குமாய் பல உண்மைகளை யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை., அங்கிருந்து வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள் மூலமாக இந்த அவலச் செய்திகள் வந்தாலும், 'போராடினால் தானே ஈழம் கிடைக்கும், சனம் செத்தால் தானே விடிவு வரும்' என்று, தங்கள் பாட்டன், பூட்டன் முதல் எல்லோரையும் வெளிநாட்டுக்கு இழுத்து வெல்பெயர் அடித்த யாழ்ப்பாணிக் கூட்டம், வன்னி மக்களைப் பலி கொடுக்கத் தயாராகியது.
சிறார்கள் படையில் பலவந்தமாகச் சேர்க்கப்படும் கொடுமையைப் பற்றி யாருமே கதைக்கத் தயாராக இருக்கவில்லை. தமிழீழக் கனவுக்கான பலி கொடுப்பாகத் தான் இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இப்படியான சூழ்நிலையில் தான், வட்டக்கச்சியில் இருந்த அக்கா வீட்டுக்கு வந்த புலிகள் வீட்டில் ஒரு பிள்ளையைத் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்கள்.
வன்னியில் இந்த வேண்டுகோள் ஒரு கொலைப் பயமுறுத்தல் என்பது எல்லோருக்குமே தெரியும். கொண்டு போய் ஒப்படைக்காவிட்டால், புலிகள் வந்து பிடித்துக் கொண்டு போவார்கள் என்பது தெரிந்த உண்மை. இத்தனை வீரம் பேசுபவர்கள், முட்டாள்தனமாக பெருந்தெருக்களை மறித்தவர்கள் யாராவது இப்படிப் புலிகள் வேண்டுகோள் விடுத்தால் தங்கள் பிள்ளைகளைக் கொண்டு போய் புலி முகாமில் விடத் தயாராக இருந்தார்களா?
வீட்டில் ஒரே மகன், மற்றவர்கள் பெண் பிள்ளைகள் என்பதால், அழுது கொண்டே மகள் ஒருத்தியைக் கொண்டு போய் புலிகளிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் அக்கா குடும்பத்திற்கு இருந்தது. மலையில் இருக்கும் பூதம் ஊரை அழித்து விடும் என்பதற்காக, தினசரி ஒருவரைக் கொண்டு போய் பலி கொடுத்த கதையாக, பங்கருக்குள் பதுங்கிக் கொண்டிருந்த கோழைக்கு தங்கள் பிள்ளையை தாங்களாகவே கொண்டு போய் பலி கொடுக்க வேண்டிய நிலைமை. மக்களை வெளியேற விடாமல் இத்தனை அநியாயம் செய்தவர்கள் இன்று வவுனியா முகாம்களில் மக்களை வெளியேற விடவில்லை என்று ஊளையிடும்போது, ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதையாகத் தானே இருக்கும்.
இப்படியாக பிள்ளை இயக்கத்தில் சேர்க்கப்பட்ட விடயம் உறவினர்களுக்குத் தெரிந்தாலும், என்ன தான் செய்ய முடியும்?
கொண்டு போன பிள்ளைக்குச் சில நாட்களில் பயிற்சி கொடுத்து யுத்த முனைக்கு புலிகள் அனுப்பினார்கள். மேதகு தலைவரும் அவர் தம் மாண்பு மிகு தளபதிகளும் வெளிநாடுகளில் படிக்காமல் ஊரில் மிஞ்சியிருந்த அவர்களின் குடும்பத்தினரும் சொகுசு பங்க(ர்)ளாக்களில் தொட்டிகளில் நீச்சல் விளையாட, கியூறியஸின் மருமகள் யுத்த முனைக்கு அனுப்பப்பட்டாள். பயிற்சி பெற்ற போராளிகள் எல்லாம் தலைவருக்குப் பாதுகாப்பு வளையம் கொடுத்துக் கொண்டிருக்க, சீறிப் பாய்ந்து முன்னேறி வரும் இராணுவ பூதத்திற்கு முன்னால் இந்தக் குழந்தைகள் எம்மாத்திரம்?
யுத்தத்தில் காயம் பட்டு பிள்ளை தன்னுடைய ஒரு கையை இழந்து விட்டாள். காயம் பட்ட பிள்ளையைப் புலிகள் பெரிய மனது பண்ணி வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். போராட்டத்திற்கு பறித்தெடுத்தவர்களுக்கு இப்போது காயமடைந்த போராளிகள் சுமையாகி விட்டார்கள். மூர்க்கத்துடன் முன்னேறி வரும் இராணுவத்திற்குப் பயந்து பிள்ளை தன்னுடைய குடும்பத்தினருடன் கையிழந்த நிலையிலும் உயிரைக் காக்க ஓடிக் கொண்டிருந்தாள்.
யுத்தத்தின் இறுதிக்கட்டம் முல்லைத்தீவுக்குள் நுழைந்ததும் தினசரி நடைபெற்ற அகோரமான எறிகணைத் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் இறந்து கொண்டிருந்தார்கள்.
அந்த நாளொன்றில், ஆசிரியையாக பணி புரிந்து கொண்டிருந்த அக்காவின் மூத்த மகளும் அவளது கணவரும் வீட்டில் ஷெல் விழுந்து இறந்து போனார்கள். அவர்களின் இரண்டு வயதுக் குழந்தை தப்பி விட்டது. தப்பிய குழந்தை செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் திருகோணமலைக்குக் கொண்டு வரப்பட்டது. செஞ்சிலுவைச் சங்கம் அந்தக் குழந்தையைக் கொண்டு வந்தது அரசாங்க உதவியுடன்! இன அழிப்புச் செய்வதாக இங்கே இருந்து வயிறு கிழியக் கூச்சல் போட்ட அரசாங்கத்தின் இரக்கத்தில் அந்தக் குழந்தை வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்தது.
இயக்கத்தில் சேர்க்கப்பட்ட பிள்ளை அங்கவீனமாக்கப்பட்டு, இன்னொரு பிள்ளையும் எறிகணைத் தாக்குதலில் இறந்த அந்தக் குடும்பத்தின் துயரத்திற்கு யார் ஆறுதல் சொல்ல முடியும்?
யுத்தம் முள்ளி வாய்க்காலுக்குள் வந்து, சில கிலோமீட்டர்களுக்குள் புலிகள் முடக்கப்பட்ட போது, தங்களுக்கு மனிதக் கவசங்களாக மக்களைச் சிறை வைத்த புலிகள் தங்கள் உயிரைக் காப்பாற்ற அந்த மக்களைப் பலி கொடுத்து அதன் மூலமாக சர்வதேச அனுதாபத்தைத் தேடி யுத்தத்தை நிறுத்த பெரும் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார்கள். யுத்தத்தின் அகோரம் தாங்காமல் மக்கள் வெளியேற முயற்சிக்க, மக்கள் வெளியேறினால் இராணுவம் தங்களை வழித்துத் துடைத்து விடும் என்று, வெளியேற முயன்ற மக்களைப் புலிகள் சுட்டுக் கொன்று கொண்டிருந்தார்கள்.
மக்கள் வெளியேற விரும்பவில்லை, புலிகளோடு தான் மரணிக்க விரும்புகிறார்கள் என்று நடேசனும் தன்னால் முடிந்தளவு சர்வதேச சமூகத்தைச் சுத்த முயற்சிக்க, ஆய்வாளர்களும் ஊடகங்களும் புலன் பெயர்ந்தவர்களுக்கு அதை மறுஒலிபரப்புச் செய்தன.
புலிகளை வழித்துத் துடைப்பதற்கான சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்ட அரசும் மக்களின் அழிவு பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் புலிகளை அழிப்பதற்கு ஈவிரக்கமின்றி கடைசித் தாக்குதலைத் தொடுத்தது.
அந்த நிலையில் தான் புலிகள் கட்டிய மண் அணையைத் தகர்த்து இராணுவம் மக்கள் வெளியேறுவதற்கு வழி அமைத்தது. சுமார் ஒரு லட்சம் பேர் கடல் அலை போல புலிகளின் துப்பாக்கிச் சூடுகளுக்கும் மத்தியில் உயிரைப் பாதுகாக்க, எதிரியின் இரக்கத்திலும் பகுத்தறிவிலும் நம்பிக்கை வைத்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு ஓடி வந்த மனித அவலம் ரூபவாகினியின் சமன் குமார ராமவிக்கிரம புண்ணியத்தில் முழு உலகும் கண்டு கொண்டது.
இப்படியாக நந்திக் கடலுக்குள்ளால் கழுத்தளவு தண்ணீருக்குள்ளால் குழந்தைகளையும் எஞ்சிய உடைமைகளையும் தலைக்கு மேலால் தூக்கி வந்த அவலத்தைக் கண்ட போது, அவர்களைத் தலைவரைக் கை விட்டு வந்த துரோகிகளாகவே புலன் பெயர்ந்த மந்தைக் கூட்டம் சித்தரித்தது. இன அழிப்புச் செய்வதாக கூச்சல் போட்டவர்களால் அதே மக்கள் விடுதலை வீரர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கும் மத்தியில் எதிரியிடம் அடைக்கலம் தேடியதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இப்படி கடலுக்குள்ளால் ஓடி வந்தவர்கள் மீது புலிகள் மிருகத்தனமான துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில், புலிகளால் பிடித்துச் செல்லப்பட்டு தன் ஒரு கையை இழந்த மருமகள் தலையில் புலிகளின் வெடி பட்டு உடனேயே கொல்லப்பட்டாள். தாங்கள் பலாத்காரமாகப் பிடித்துச் சென்று தங்களுக்காக கையை இழந்த குழந்தையைக் கொல்வதில் புலிகளுக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை. உயிரைக் காப்பாற்ற ஓடிச் செல்லும் அவலத்திலும், தான் தூக்கி வளர்த்த குழந்தை கண் முன்னாலேயே தங்களின் பாதுகாவலர்கள் என்று நினைத்த கூட்டத்தினால் கொல்லப்பட்டதையும் தாங்கிக் கொண்டு, இறந்த குழந்தையைiயும் தூக்கிக் கொண்டு மைத்துனர் இராணுவத்திடம் அடைக்கலம் தேடி குடும்பத்தினருடன் ஓடினார். எவ்வளவு கொடுரமான நிகழ்வு இது.
ஆனால், கூட வந்த மக்கள் இறந்த உடலை கொண்டு போய் என்ன செய்வது என்று வற்புறுத்தியதில், தன்னுடைய குழந்தையின் உடலை அதிலேயே விட்டு எஞ்சியிருப்போரின் உயிரைக் காப்பாற்ற அவர்கள் ஓடி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வந்து சேர்ந்தார்கள்.
இப்போது அவர்கள் வவுனியா முகாமில் தங்கியிருக்கிறார்கள்.
வெளிநாடுகளில் இருந்து கொண்டு, புலிகளின் பொய்களையும் தங்களின் கற்பனைப் புழுகுமூட்டைகளையும் அவிழ்த்து விட்டு, புலன் பெயர்ந்தவர்களைச் சுத்திக் கொண்டிருந்த புதினம் சொல்வதை நம்புவதா? இல்லை, சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்த இந்த மக்கள் சொல்வதை நம்புவதா?
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் உலகெங்கும் தலைநகரங்களில் ஊளையிட்டு ஆர்ப்பாட்டம் பண்ணிய கூட்டத்திடம், 'உங்கள் போராட்டம் எந்தப் பயனையும் அளிக்காது, உண்மையில் மக்களைக் காப்பாற்றுவதாயின், மக்களை வெளியேற அனுமதிக்கும்படி புலிகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்' என்று நாங்கள் கேட்டபோது, இந்தக் கூட்டம் என்ன சொன்னது? தாங்கள் மட்டும் ஏதோ மக்களின் உயிர் மேல் இரக்கம் கொண்டவர்கள் போல நடித்துக் கொண்டு, எங்களை எல்லாம் சிங்கள அரசின் இன அழிப்புக்கு துணை போவதாகக் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தது. இவர்கள் போட்ட கூச்சல் எல்லாமே தங்கள் தலைவரைக் காப்பாற்ற மட்டும் தான் என்பதும் அதற்காக இவர்கள் அந்த மக்களை முற்றுமுழுதாகப் பலி கொடுக்கத் தயாராக இருந்த உண்மை எல்லோருக்குமே தெரியும். மந்தைக் கூட்டம் தலைவரைக் காப்பாற்றவும் மாறுவேச தமிழ்த் தேசியவாதிகள் எப்பாடு பட்டும் புலிகளைக் காப்பாற்றவும் எந்த வித வெட்கம் கூச்சமும் இன்றி அந்த அப்பாவி மக்களின் அழிவில் பிழைப்பு நடத்த புலிக்கொடியோடு தெருக்கூத்து நடத்தினார்கள்.
இவர்களின் கூச்சல் இன அழிப்பு என்ற குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டே நடத்தப்பட்டது. அதன் மூலம் சர்வதேச தலையீட்டை அதன் பின்விளைவுகள் பற்றிய கவலை எதுவுமின்றி ஏற்படுத்தி, தங்கள் தலைமையைக் காப்பாற்ற தமிழ் மக்களைப் பலி கொடுக்க மட்டுமன்றி, தமிழ் மக்களின் எதிர்காலத்தை விலை கூறி விற்கவும் இவர்கள் தயாராக இருந்தார்கள். எங்களுக்கு கடைசியாக இருக்கும் நம்பிக்கை அமெரிக்கா தான் என்று இவர்கள் போட்ட கோஷத்தை மறக்க முடியுமா? பிலிப்பைன்ஸின் மார்க்கோஸ் போல, அமெரிக்கக் கடற்படைக் கப்பல் வந்து ஹெலிகொப்டரில் தலைவரை மீட்டுச் செல்லும் என்ற கனவில் எத்தனை பேர் இருந்தார்கள்? இது இந்தியாவின் யுத்தம் என்று சொல்லிக் கொண்டே இந்தியாவே காப்பாற்று என்று கோஷம் போட்ட கோமாளித்தனத்தை மறக்க முடியுமா?
இன அழிப்பு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று துடியாய் துடிப்பவர்கள் நிச்சயமாக இந்த முயற்சியைக் கைவிடக் கூடாது. ஏனெனில் இன அழிப்புக் குற்றச்சாட்டு அரசாங்கத்தின் மேல் மட்டுமல்ல, புலிகளின் மேலும் இருந்தது என்பதை நவநீதம்பிள்ளையின் அறிக்கை நிரூபிக்கும். இப்படியான விசாரணை ஒன்று நடைபெற்றால் தான், தமிழ் மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கப் போவதாகப் போராடியதாகச் சொன்ன புலிகள் தங்கள் சொந்த மக்களைப் படுகொலை செய்தார்கள் என்ற உண்மைகள் எல்லாம் வெளியே வரும். தூக்கிச் சென்று ஹாக் நகரில் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை செய்வதற்கு தலைவர் இல்லாவிட்டாலும், தமிழ் மக்களுக்கு புலிகளால் இழைக்கப்பட்ட இந்த அநீதிகள் வெளிக் கொணரப் பட வேண்டும்.
வன்னிக்குள் புதைக்கப்பட்ட இந்த உண்மைகள் தோண்டிக் கிளறப்பட்டு எங்கள் வருங்காலச் சந்ததிக்கு ஒரு பாடமாக முன்வைக்கப்பட வேண்டும். சிறுபிள்ளை வேளாண்மை எப்படி வீடு வந்து சேராது என்ற அந்தக் கால உண்மையை எங்கள் எதிர்காலச் சந்ததி அறிந்து கொள்ள வேண்டும். மக்களை அடக்கிக் கொண்டு நடக்கும் எந்தப் போராட்டமும் வெற்றி பெற்றதில்லை என்ற உண்மையை எதிர்காலத் தலைமைகள் படிப்பினைகளாகப் பெற வேண்டும்.
எதிரி மக்களை அழிப்பதில் கோபம் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. எதிரி அவ்வாறு தான் நடந்து கொள்வான் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ஆனால், தங்கள் சொந்த மக்களையே கடைசியில் தங்கள் உயிருக்கு ஆபத்து என்றதும் தாங்களே சுட்டுக் கொன்ற தேசியத் தலைவரையும் புனிதப் போராளிகளையும் எப்படி மன்னிக்க முடியும்?
வெளிநாடுகளில் இருந்து கொண்டு ஐயோ, அகதி முகாமில் கற்பழிக்கிறார்கள், கொலை செய்கிறார்கள் என்று கூச்சல் போடுபவர்கள், வணங்காமண், அடங்காப்பற்று என்று புளிச்சல் ஏப்பம் விடுகிறவர்கள் எல்லாம் முடிந்தால், வவுனியா முகாமுக்குப் போய் அந்த மக்களிடம் உண்மைகளைக் கேட்டுப் பார்க்கட்டும். துணிச்சல் இருந்தால் 'இறுதி துளி இரத்தம் இருக்கும் வரை தமிழீழத்திற்காகப் போராடுவோம்' என்று, அழிவில்லாமல் சுதந்திரம் இல்லை என்று, சனம் செத்தால் தான் ஈழம் கிடைக்கும் என்று அவர்களுக்குச் சொல்லிப் பார்க்கட்டும். 'எங்கள் சூரிய தேவன், தேசியத் தலைவர் உங்களுக்காகத் தான் போராடினார்' என்று யாழ்ப்பாண மக்களுக்குப் போய் விளக்கம் சொல்லட்டும்.
உங்கள் தலைவருக்கே இறுதி அஞ்சலி செலுத்த வக்கில்லை. உங்கள் தலைவரால் இழுத்துச் செல்லப்பட்டுப் பலி கொடுக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு ஏதோ நீங்கள் தான் விடுதலை வாங்கிக் கொடுக்கப் போவது போல அல்லவா கதை விடுகிறீர்கள். உங்களுடைய இந்தத் திமிர்த் தனத்திற்கு தானே தன் கண் முன்னாலேயே எதுவுமறியா தன் பிள்ளைகளை உங்கள் தலைவரே பலி கொடுத்த கதையைக் கேட்ட பின்னாலும், பொங்கியெழ முடியாமல், கள்ளனுக்கு குளவி கடித்த கதையாக முழிசிக் கொண்டிருக்கிறீர்கள்.
கியூறியஸின் அக்கா குடும்பத்தின் கதை ஆயிரக்கணக்கான உதாரணங்களில் ஒன்று. இன்று வன்னி முகாமில் இப்படி ஆயிரக்கணக்கான கண்ணீர்க் கதைகள் உண்டு. உயிரைக் காப்பாற்ற நந்திக்கடலுக்குள்ளால் ஓடி வந்த போது, உடைகள் இழந்து, மிதந்து சென்ற சடலத்தின் உடைகளைக் கழற்றி உடுத்து வந்த கதைகள் எத்தனை? அந்த மக்கள் எல்லாம் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் எதிர்காலம் பற்றிய முடிவு எதுவுமில்லாமல் நாட்களைக் கடத்தினாலும், புலிகள் போன்ற ஒரு மிருகத்தனமான கூட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக் கொண்டது பற்றிய ஆறுதலுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த மக்கள் படும் அவலங்களைப் பற்றி எல்லாம் நீங்கள் கூக்குரல் இடுவதன் நோக்கம் அந்த மக்களுக்கு ஒரு தீர்வு பெற்றுக் கொடுப்பதல்ல, அதை வைத்து அரசை அவமானப்படுத்தி நீங்கள் சுய இன்பம் பெறத் தான். அந்த மக்களைக் காட்டி இன்னும் பணம் சேர்த்து சுரண்டிக் கொழுக்கத் தான்.
மக்கள் வெளியேற விரும்பவில்லை, புலிகளோடேயே இருக்க விரும்புகிறார்கள் என்று காது குத்திய நடேசன், தன் உயிருக்கு ஆபத்து என்று வந்ததும் வெள்ளைக்கொடியோடு எதிரியிடம் சரணடைய வந்த கேவலத்தையும் மறந்து, அவரைக் கொன்றது யுத்த தர்ம மீறல் என்று கூக்குரல் போடும் கூட்டத்தை என்ன செய்வது? தப்பியோடும் மக்களைச் சுட்டுக் கொன்ற புலிகள் எந்த மனச்சாட்சியுடன், எந்த நம்பிக்கையுடன் வெள்ளைக்கொடியைத் தூக்கினார்கள் என்பதை இவர்கள் எங்களுக்குச் சொல்லட்டும்.
அந்த மக்களுக்கு இழைத்த அநீதியும் கொடுமையும் போதாதென்று, அந்த மக்களை ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்தும் விதமாக, முகாம்களில் விபசாரம் நடக்கிறது என்று நாக்கூசாமல் சொல்லித் திரியும் இந்தக் கூட்டத்திற்கு மிகுந்த பணிவன்புடன் நாகரீகமாக, கியூறியஸ் சொல்லக் கூடியது ஒன்றே ஒன்று தான்.
போங்கடா, நீங்களும் உங்கள் வணங்கா மண்டைகளும் அடங்காப்.......!

கருத்துகள் இல்லை: