vikatan :ச.பிரசாந்த், க .தனசேகரன் :
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வாச்சாத்தி கிராமத்தில், 1992, தமிழக வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையால், பழங்குடியின மக்கள்மீது நடத்தப்பட்ட வன்கொடுமை, தமிழகம் மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது. ‘வீரப்பனுக்கு வாச்சாத்தி மக்கள் உதவுகின்றனர். சந்தன மரக்கட்டைகளைக் கடத்துகின்றனர்,’ எனக் கூறிய வனத்துறை, காவல்துறை அதிகாரிகள் 1992, ஜூன் 20-ம் தேதி வாச்சாத்தி கிராமத்தை முற்றிலுமாகச் சுற்றிவளைத்து, வன்முறையைக் கட்டவிழ்த்தனர்.
வழக்கு தொடர்ந்த மக்கள்!
‘‘தங்கள் வீடுகளை வனத்துறை, காவல்துறை அதிகாரிகள் சூறையாடினர், குழந்தைகள், பெண்கள் என அனைவரையும் கடுமையாகத் தாக்கியதுடன், 13 வயது சிறுமி உட்பட, 18 பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்தனர். சந்தன மரங்கள் கடத்தியதாகப் பொய் வழக்கு பதிந்தனர்’’ எனக் கூறி, வாச்சாத்தி கிராம மக்கள், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் மா.கம்யூனிஸ்டு கட்சியினர் இணைந்து வழக்கு பதிவுசெய்திருந்தனர்.
‘தமிழக அரசும் (1992ல் அ.தி.மு.க அரசு), காவல்துறையும் இந்த வழக்கை முறையாகக் கையாளவில்லை’ என்ற குற்றச்சாட்டு எழுந்ததால், வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த தருமபுரி முதன்மை அமர்வு நீதிமன்றம், சம்பவம் நடந்து, 19 ஆண்டுகள் கழித்து, 2011-ம் ஆண்டு பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டது.
அதில், ‘‘குற்றம்சாட்டப்பட்ட வனத்துறை, போலீஸார், வருவாய்த்துறை அதிகாரிகள், 269 பேரில் இதுவரை 54 பேர் இறந்திருக்கும் நிலையில், மீதமுள்ள, 215 பேரும் இந்த வழக்கின் குற்றவாளிகள்’’ என, அறிவித்தது. 126 வனத்துறை, 84 காவல்துறை அதிகாரிகள், ஐந்து வருவாய்த்துறை அதிகாரிகள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, 1 – 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வாச்சாத்தியில் ஆய்வுசெய்த நீதிபதி வேல்முருகன்.
வாச்சாத்தியில் ஆய்வுசெய்த நீதிபதி வேல்முருகன்.
க.தனசேகரன்.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அதிகாரிகள், இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், நான்கு நாள்களுக்கு முன்பு வழக்கை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து, கிராமத்தில் நேரடியாக ஆய்வுசெய்யவதாக அறிவித்திருந்தார்.
கிராமத்தில் நேரடி ஆய்வு!
திட்டமிட்டபடி இன்று காலை 10:00 மணி முதல் மதியம், 1:30 மணி வரை, நீதிபதி வேல்முருகன் தலைமையில், நீதிபதிகள், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர், வாச்சாத்தி கிராமத்தில் ஆய்வுசெய்தனர். கிராமத்தில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆலமரம் பகுதி, வீடுகள், பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பகுதி, மலைப்பகுதி என 10-க்கும் மேற்பட்ட இடங்களை ஆய்வுசெய்தார் நீதிபதி வேல்முருகன். ஒவ்வொரு வீதியாகச் சென்று வீடுகள், அந்தச் சூழலைப் பார்வையிட்டு, வழக்கில் சி.பி.ஐ குறிப்பிட்ட இடங்களை ஒப்பிட்டுப் பார்த்தார்.
வாச்சாத்தியில் பாதிக்கப்பட்ட பழங்குடியினப் பெண்கள்.
பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்களிடம், விசாரணை மேற்கொண்டார். அந்தப் பகுதியிலுள்ள மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு, அங்குள்ள மக்களிடம் ஆறுதலாகப் பேசினார்.
வாச்சாத்தியில் ஆய்வுசெய்த நீதிபதி வேல்முருகன்.
வாச்சாத்தியில் ஆய்வுசெய்த நீதிபதி வேல்முருகன்.
க.தனசேகரன்.
மக்களுக்கு ஆறுதல்!
நீதிபதி வேல்முருகன் அங்குள்ள மக்களிடம், ‘‘அனைவருக்கும் கஷ்டமான சூழல் நிலவுகிறது. வாச்சாத்தி கிராமத்தில் தற்போதுள்ள குழந்தைகளின் எதிர்காலத்தைச் சிறப்பாக மாற்ற வேண்டும். அதற்கு அனைவரும் முயல வேண்டும். அனைவருக்கும் கல்வி வாய்ப்பை உருவாக்கி, குழந்தைகளைப் படிக்கவைக்க வேண்டும், அவர்களை அடுத்த நிலைக்கு முன்னேற்ற வேண்டும். கிராமத்துக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும், மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுங்கள். உங்களின் நியாயமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும். வசதிகள் மேம்படுத்தப்படும்’’ எனக் கூறி, வாச்சாத்தி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து அங்கிருந்து விசாரணையை முடித்துக்கொண்டு விடைபெற்றார்.
‘மக்களுக்கு உரிய நீதி வேண்டும்!’
வாச்சாத்தி வழக்கு தொடுத்து, தீர்ப்பு வரும்வரை, மக்களுடன் களத்திலிருந்த, மா.கம்யூ மத்திய செயற்குழு உறுப்பினரும், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவருமான சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் நிருபர்களிடம், ‘‘வாச்சாத்தியில் அரசுத் துறை அதிகாரிகளான வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை சேர்ந்து நிகழ்த்திய வன்கொடுமைகளால், வெறிச்செயலால் மக்கள், பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு நீதி கேட்டு, உண்மைகளைக் கூறி மட்டுமே வழக்கு தொடுத்திருந்தோம்.
மா.கம்யூ மத்திய செயற்குழு உறுப்பினர் சண்முகம்.
சி.பி.ஐ விசாரணையில், அதிகாரிகளின் தவறு உறுதிசெய்யப்பட்டது. வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட நீதிமன்றம், சம்பவம் நடந்து 19 ஆண்டுகள் கடந்து, சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகளைக் குற்றவாளிகளாக அறிவித்தது. இவர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கும் நிலையில், நீதிபதி நேரில் ஆய்வுசெய்திருக்கிறார். ஏற்கெனவே மிக தாமதமாக இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை, விரைவில் உயர் நீதிமன்றமும் உறுதிசெய்யுமென்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. யார் தவறு செய்திருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி வேண்டும்’’ என்றார் விரிவாக.
களத்தில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் (அப்போது 13 வயது சிறுமி) உள்ளிட்ட பெண்கள், முதியவர்களிடம் பேசினோம். ‘உரிய நீதி வேண்டும்’ என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே, கண்களில் கண்ணீருடனும், கனத்த இதயத்துடனும் நம்மிடம் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக