ஞாயிறு, 17 மே, 2020

பிரசாந்த் கிஷோர் என்னிடம் சொன்ன ரகசியம்! -ஸ்டாலின்

பிரசாந்த் கிஷோர் என்னிடம் சொன்ன ரகசியம்! -ஸ்டாலின்  மின்னம்பலம் : மாவட்டச் செயலாளர் கூட்டம் 10.30 க்கு என்றால் 10 மணிக்கே பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்கள் கரை வேட்டிகள் சரசரக்க, நவீன வாகனங்கள் பரபரக்க அறிவாலயத்தில் கூடுவார்கள். மு.க.ஸ்டாலின் கலைஞர் அரங்கத்தில் நுழைவதற்கு முன்னரே பல மாசெக்கள் ஓடி வந்து வரவேற்பார்கள். இது வழக்கமாக நடக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நாம் பார்க்கும் காட்சிகள்.
ஆனால் நேற்று (மே 16) அறிவாலயமே ஆன் லைனில் என்று ஆகிவிட்டதால் காலை 10 மணிக்கே ஒவ்வொரு மாவட்டச் செயலாலரும் காதில் ஒயர்களை செருகிக் கொண்டு ஸ்டாலின் லைவ் வுக்கு வருவதற்கு முன்னரே லேப்டாப்பையும் செல்போனையும் இணைப்பு சரியாக இருக்கிறதா என்று செக் செய்தபடியே காத்திருந்தார்கள். அவரவர் வீடு, அலுவலகம், சில மாசெக்கள் நேற்று கூட நிவாரண நிகழ்ச்சிகள் நிறைய வைத்திருந்ததால் அவற்றையும் ரத்து செய்ய முடியாமல் ஆங்காங்கே ஏதோ ஒரு அறையில் அமர்ந்து மாசெக்கள் கூட்டத்தில் இணைந்தார்கள்.

காலை 10.30 மணிக்கெல்லாம் ஆன் லைன் அறிவாலயத்துக்கு வந்துவிட்டார் திமுக தலைவர் மு.கஸ்டாலின்.
முதலில் அவர் பேசும்போது,
“மாவட்டச் செயலாளர்களாகிய உங்க எல்லாரையும் நான் ரொம்ப பாராட்டுறேன். ஒவ்வொரு வீட்டிலும் தாய், தகப்பன், மனைவி, பிள்ளைகள் என்று பலரும், ‘இந்த நேரத்துல கூட வெளியே சுத்தணுமானு கேட்பாங்க. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தலைவர் சொல்லிட்டாரேனு நீங்க இந்த கொரோனா நிவாரணப் பணிகளை இழுத்துப் போட்டுக்கிட்டு செய்யுறீங்க. இப்படி ஒரு நிர்வாகிகளை பெற்றிருப்பதற்கு நான் மனமார மகிழ்கிறேன். உங்களைப் பாராட்டுகிறேன். அதேநேரத்தில் உங்களது பாதுகாப்பும் முக்கியம். அதேநேரத்தில் நாம் இயக்கத்துக்கான கடமையையும் நாம் செய்ய வேண்டியிருக்கிறது” என்றார் ஸ்டாலின்.
பொருளாளார் துரைமுருகன் பேசும்போது, “மாவீரன் அலெக்சாண்டர் கடுமையான நெருக்கடியில் இருந்தபோது கூட அவரைப் பின்பற்றி வீரர்கள் கடக்க முடியாத ஆற்றையும் குதிரைப் படை மூலம் கடந்தனர். அதேபோல நம் தலைவர் தளபதி மாவீரன் அலெக்சாண்டரைப் போல இருக்கிறார். இந்த கொரோனா காலத்திலும் அவர் இட்ட பணிகளை செய்து முடிக்கிறார்கள் நம் மாவட்டச் செயலாளர்கள்” என்று ஸ்டாலினை அலெக்ஸாண்டருடன் ஒப்பிட்டார். அவர் முழு விவரங்களையும் சொல்லி முடிக்கும்போது, ‘என்னண்ணே தூங்கிட்டீங்களா?’ என்று சிரித்துக் கொண்டே கேட்டார் ஸ்டாலின்.
அதன் பின் ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் பேசினார்கள். பலரும் தத்தமது மாவட்டங்களில் நடக்கும் பணிகளைப் பற்றி பட்டியலிட்டார்கள். ஒன்றிணைவோம் வா, நல்லோர் கூடம் மூலம் மக்களிடம் திமுக மேலும் நெருங்கியிருப்பதாக கூறினார்கள். மேலும் நாம் யார் யாருக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டார்கள்.
ஜெ. அன்பழகனைப் பார்த்த ஸ்டாலின், ‘என்ன முகமெல்லாம் கட்டியா இருக்கு?’ என்று கேட்க. ‘வெப்பக் கட்டிண்ணே’ என்று சொல்லிவிட்டுத்தான் ஐபேக் பற்றிய தன் வெப்ப வார்த்தைகளை வெளிப்படுத்தினார் அன்பழகன். அதைக் கேட்டுக் கொண்ட ஸ்டாலின் எதுவும் சொல்லவில்லை.
கூட்டத்தை முடிக்கும்போது ஸ்டாலின், “நான் பிப்ரவரி 17 ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலேயே சொல்லியிருக்கேன், ஐபேக் டீம் உங்களைக் கட்டுப்படுத்துற டீம் இல்லை. அதையேதான் நான் இப்பவும் சொல்றேன். உங்ககிட்ட நான் கலந்து பேசுற மாதிரி அந்த டீம்லயும் நான் கலந்து பேசுறேன். பேசும்போது பிரசாந்த் கிஷோரே என்கிட்ட சொன்ன ஒரு விஷயத்தை இன்னிக்கு நான் உங்ககிட்ட பகிர்ந்துக்குறேன்.
அவர் என்கிட்ட, ‘நான் இதுவரை ஏழெட்டு கட்சிகளுக்கு தேர்தல் ஆலோசகரா பணியாற்றியிருக்கேன். ஆட்சிக்கு கொண்டு வந்திருக்கேன். நான் இதுவரைக்கும் பணியாற்றின கட்சிகளுக்கெல்லாம் அடிமட்டம் வரை கட்டமைப்பு கிடையாது. ஆனால் திமுக முழுக் கட்டமைப்பு கொண்ட கட்சி. மேலேர்ந்து கீழே வரைக்கும் உறுதியான கட்டமைப்பு கொண்ட கட்சியை நான் இதுவரைக்கும் இந்தியாவுல பார்த்ததில்லை’ என்கிட்ட பிரசாந்த் கிஷோர் சொன்னாரு. அப்போதான் நான் பேரறிஞர் அண்ணாவையும், தலைவர் கலைஞரையும் நான் நன்றியோட நினைச்சேன். எவ்வளவு பெரிய கட்டமைப்புள்ள கட்சிய உருவாக்கி நம் கையில கொடுத்திருக்காங்க. இதை நாம காப்பாத்தணும். அதுதான் நமக்கு முக்கியம், ஒன்றிணைவோம் வா திட்டம் குறித்து நீங்க சொன்ன கருத்தெல்லாம் கேட்டுகிட்டேன். இந்தத் திட்டம் பற்றி இன்னும் ரெண்டு நாள்ல நான் உங்களுக்கு சொல்றேன்:” என்று முடித்தார் ஸ்டாலின்.
-ஆரா

கருத்துகள் இல்லை: