செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

திமுக கூட்டணியில் யாருக்கு எவ்வளவு தொகுதி? ஸ்டாலினின் வியூகம் என்ன? 4 நாளில் பேச்சை தொடங்கும் குழு

tamil.oneindia.com  -Nantha Kumar R  :  சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் திமுக சார்பில் தொகுதி பங்கீட்டு குழு அமைப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். சுமார் ஒரு மணிநேரம் வரை நடந்த ஆலோசனையின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்நிலையில் தான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் திமுக காய்களை நகர்த்தி வருகிறது. திமுக தனது கூட்டணியை வலுப்படுத்தி வருகிறது. மேலும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.



இதற்கிடையே தான் அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு திமுக சார்பில் தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்படும். இந்த குழுவினர் தோழமை கட்சியினருடன் பேச்சுவார்த்தையை நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் இன்று தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். திமுக சார்பில் தொகுதி பங்கீட்டு குழு அமைப்பது தொடர்பாக மூத்த நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். சுமார் ஒரு மணிநேரம் வரை இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் கேஎன் நேரு, எவ வேலு, கனிமொழி எம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனையை தொடர்ந்து திமுக சார்பில் தொகுதி பங்கீட்டு குழு அறிவிக்கப்படும். அந்த குழுவை சேர்ந்தவர்கள் பிப்ரவரி 22ம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீட்டை நிறைவு செய்வார்கள்.

Recommended For You
தமிழ்நாட்டின் மொத்த கடன் ரூ.10.62 லட்சம் கோடி.. இடைக்கால பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு விளக்கம்!

இந்த ஆலோசனையில் தொகுதி பங்கீட்டு குழுவில் இடம்பெறும் தலைவர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. மேலும் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதி வழங்கலாம். முரண்டு பிடிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்கலாம்? என்பது பற்றி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஒருவேளை காங்கிரஸ் கட்சி இறங்கி வராவிட்டால் என்ன செய்வது? என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் தற்போது காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி, ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்டவை உள்ளன. இந்த கூட்டணி கட்சிகளும் தொகுதி பங்கீடு பற்றி திமுகவின் தொகுதி பங்கீட்டு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இதில் காங்கிரஸ் சார்பில் தொகுதி பங்கீட்டுக்கு தனியாக குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் திமுக தொகுதி பங்கீடு பற்றி பேசாமல் தாமதிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர். தொடர்ந்து திமுக காலதாமதம் செய்த நிலையில் கூடுதல் தொகுதி வேண்டும்.ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் குரல் எழுப்பினர். இது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே தான் தொகுதி பங்கீ்ட்டு குழு பிப்ரவரி 22ம் தேதி முதல் தோழமை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று திமுக அறிவித்த நிலையில் அந்த குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் பற்றி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
 

கருத்துகள் இல்லை: