ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

'ஆட்சியில் பங்கும் அதிக தொகுதிகளும் வேண்டும்' - மதுரை காங். கூட்டத்தில் அதிரடி தீர்மானம்

 hindutamil.in - கி.மகாராஜன் :  மதுரை: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கும் அதிக தொகுதிகளும் வழங்க வேண்டும் என மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு வேண்டும், அதிக எண்ணிக்கையில் தொகுதிகள் வேண்டும், உள்ளாட்சி இடங்களில் 30 சதவீத பங்கு வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியினர் அனைவரின் கோரிக்கையாகும். அதை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய தலைவர் கார்கேவை கேட்டுக்கொள்கிறோம்.



சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. காங்கிரஸ் தலைமை கூறும் சீட்டுகளை வழங்க வேண்டும் என்பது உட்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேசியதாவது: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியை பேசவிடாமல் தடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த 8 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்தனர். இதில் 7 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ஒருவர் சிபிஎம்.

யார் பலமாக நடாளுமன்றத்தில் சண்டையிடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள இது ஒரு எடுத்துக்காட்டு. துணை நிற்கிறோம், துணை இருக்கிறோம் என்று சொல்பவர்கள் யாரும் சஸ்பெண்ட் ஆகவில்லை. இது ஏன் என்பது எல்லோருக்கும் தெரியும்.

உண்மையில் பாஜகவை எதிர்க்கும் தைரியமும், தில்லும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தான் உள்ளது. சைடு வாங்கிட்டு போய் வணக்கம் சொல்லும் பழக்கம் காங்கிரஸ்காரனுக்கு கிடையாது.

எங்களை அன்புடனும், மரியாதையுடன் நடத்தினால் அதையே திரும்ப வழங்குவோம். எங்களை எதிர்த்து அவமானப்படுத்தி, கீழ்தரமாக பேசினால் அதே மொழியில் பதிலடி கொடுப்போம்.

ராகுல், கார்கே ஆகியோர் இண்டியா கூட்டணியை ஒருங்கிணைத்து செல்வதற்காக கடுமையாக போராடி வருகின்றனர். பாஜக பாசிச அரசையும், ஆர்எஸ்எஸ் கொள்கைகளையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வருகின்றனர். அந்த பேராட்டத்தில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து நாம் பணிபுரிகிறோம்.

தமிழகத்தில் 2016ல் இருந்து திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து பல வெற்றிகளை பெற்று வருகிறது. இந்த தேர்தலில் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேச 70 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் குழு அமைக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்காக காங்கிரஸ் காத்திருக்கிறது. திமுக இப்போது தான் எப்போது பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவித்துள்ளது.

நாங்கள் தோழமையை மதிக்கிறோம். உரிய மரியாதை அளிக்கிறோம். அதையே நாங்களும் எதிர்பார்க்கிறோம். காங்கிரஸ் கட்சி கட்டுப்பாடான ஜனநாயகக் கட்சி. காங்கிரஸ் கப்பல் போன்றது. பிற ஜாதி கட்சிகளை போல் இடது பக்கம் இன்டிகேட்டரை போட்டுவிட்டு வலது பக்கம் திரும்பாது. மெதுவாகத் தான் திரும்பும். கப்பல் சரியாக கரை திரும்ப வேண்டும், லட்சியத்தை அடைய வேண்டும்.

தோழமை கட்சியிடம் நாங்கள் கேட்பது மரியாதையும் அன்பும் தான். திமுக மாவட்ட செயலாளர் பொதுவெளியில் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டில்லை, பூத் கமிட்டி போட அளில்லை என பேசியுள்ளார்.

அவருக்கு அடுத்து அமைச்சர் ஒருவர், கூட்டணிக்கு வந்தா வரட்டும், இல்லனா போகட்டும் என பேசியுள்ளார்.

இன்னொரு அமைச்சர் அசால்டா பேசியுள்ளார். இது எங்களுக்கு வலியை தருகிறது.

திமுகவுடன் கூட்டணியில் இருப்பதால், திமுகவின் தவறுகளுக்காக பல இடங்களில் பழியை சுமந்தவர்கள் காங்கிரஸ்காரர்கள்.

முதல்வர் ஸ்டாலினை ராகுல் காந்தி, சகோதரர் என்கிறார். ராகுலுக்கு கிடைக்கும் மரியாதை காங்கிரஸ் கட்சியில் கீழ்மட்டத்தில் இருப்பவர்களுக்கும் கிடைக்க வேண்டும். தனக்கு கிடைக்கும் மரியாதை கட்சியில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் என ராகுல் காந்தி நினைக்கிறார். ஆனால், சிலர் தவறு செய்கின்றனர்.

திமுகவின் தளபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்வபெருந்தகை கோரிக்கை வைத்து 20 நாட்களுக்கும் மேலாகிறது. ஆனால், இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, வருத்தமும் தெரிவிக்கவில்லை.

இதன் காரணமாகத்தான் தற்போது காங்கிரசுக்கு எதிராக எல்லோரும் பேசத் தொடங்கிவிட்டனர். அதை கேட்டுக்கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது. எங்களுக்கு மரியாதை தராவிட்டால் அடிப்போம், அதே வார்த்தையில் பேசுவோம்.

அப்படி பேசினால், எங்களால் தான் எம்பிசீட்டில் வெற்றி பெற்றதாக கூறுகிறார்கள். நான் அடுத்த எம்பி தேர்தலில் நிற்கப் போவதில்லை. தலைமை கூறியதால் கடந்த தேர்தலில் போட்டியிட்டேன். எனக்கு கட்சி தான் முக்கியம். கட்சி தான் உயிர்.

நாங்கள் காமராஜர், கக்கன் வழி வந்தவர்கள். அடுத்தவர்களின் சொத்துக்கு ஆசைப்பட்டவர்கள் காங்கிரஸ் கட்சியினர் அல்ல. நம்முடைய லட்சியம் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெற வேண்டும், பாஜகவை காலூன்றவிடாமல் செய்ய வேண்டும் என்பதே.

பாஜக கூட்டணி ஒரு ஓட்டை பானை. அதில் சேர்ந்த அதிமுக, பாமக, அமமுக ஆகியவை காலியாகிவிட்டன. பாஜக கூட்டணி பானையில் தண்ணீர் எல்லாம் வெளியேறி வெறும் பானை மட்டுமே உள்ளது.

2021 தேர்தலில் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என ராகுல் கூறினார். காங்கிரஸ் கட்சியினர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலை பார்த்தனர். 2019ல் ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என ஸ்டாலின் கூறினார். ஆனால், 2024 தேர்தலில் ராகுல் காந்தியை அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. இவ்வாறு மாணிக்கம் தாகூர் பேசியுள்ளார்.

கருத்துகள் இல்லை: