புதன், 20 மே, 2020

அயோத்தி தாசர் ..முதல் Resistant. சாதி மதங்களற்ற திராவிட சித்தாந்தத்தை வடிவமைத்தத்தவர்

Karthikeyan Fastura : · இணையமோ, முகநூலோ அற்ற உலகத்தையும்
பார்த்திருக்கிறேன். புத்தகங்கள் என்றால் நூலகத்திற்கு தான் செல்ல வேண்டும். எந்த ஊருக்கு சென்றாலும் அங்கே நூலகம் எங்கே இருக்கிறது என்பதை தேடுவது தான் என் முதல் வேலை. நான் தொலைந்து போனால் என் உறவுகள் தேடுவது நூலகத்தில் தான். இப்படித்தான் அறிவை தேடிக் கொண்டே இருந்தேன். எல்லாத் துறைகளிலும் ஆர்வமும் கொஞ்சம் அறிவும் கிடைத்தது இப்படித் தான். ஆனால் ஒருவரை பற்றி அறியாமல் இருந்திருக்கிறேன் பல காலமாக என்றால் அது அயோத்திதாசர் தான். பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு வினவு கட்டுரையில் கேள்விப்படுகிறேன். ஆனால் அதற்கு முன்பு உலகத்தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை நான் படிக்காத பெரும் ஆளுமைகள் இல்லை எனும் அளவிற்கு பார்த்துவிட்டேன். கம்யூனிச மூலதன புத்தகத்தை தொடும்போது எனக்கு 13 வயது. 18 வயதில் காரல் மார்க்ஸ் ஜென்னி தம்பதிகளின் காதல் வரை பார்த்தாயிற்று. பிறகு பெரியார் உள்ளே வந்தார். அம்பேத்கார் உள்ளே வந்தார். மதமும் சாதியும் வெளியே போனது எல்லாம் வேறு கதை
அயோத்திதாசரை நான் ஏன் மிகத் தாமதமாக அறிந்துகொண்டேன். ஏன் நான் படித்த சமூக வரலாற்று நூல்களில் இல்லாமல் போனார்? என்ற கேள்விக்கு ஒரே பதில் பார்ப்பனியம். இதை பார்ப்பனர்கள் உருவாக்கினாலும் அவர்களை விட தீவிரமாக கடைபிடிப்பவர்களாக எல்லா சமூகத்தினரும் இருந்திருக்கிறார்கள்.

நாம் கற்கும் கல்வி என்பதும், புத்தகங்கள் என்பதும் பார்ப்பனிய வசப்பட்டே இருக்கிறது. அந்த Filterல் வடிகட்டப்பட்ட தலைவர்கள் ஏராளம். ஆனால் அவர்கள் அனைவரும் 19 நூற்றாண்டு மற்றும் அதற்கு முற்பட்ட பல ஆயிரம் காலமாக பார்ப்பனியத்தை
கேள்விகள் கேட்ட தலைவர்கள். Resistants.
புத்தரின் வரலாற்றை இந்திய நூல்கள் சொல்வதற்கும், உலக நூல்கள் சொல்வதற்கும் எவ்வளவு வித்தியாசங்கள்?
வரலாற்றில் கத்தியை தூக்கிக்கொண்டு மடிந்தவர்களை வீரர்கள் என்று சொல்கிறார்கள். எத்தனை பெரிய நகைச்சுவை.? அறிவாயுதம் ஏந்தி கேள்வி கேட்டவர்களே உண்மையில் மக்களை மாற்றுகிறார்கள். அந்த வகையில் இந்த மாநிலம் திராவிட கூறுகளுடன் தனித்து இயங்குவதற்கும், தொடர்ந்து சாதி, மதம் உள்ளிட்ட பிற்போக்குத்தனத்திற்கு எதிரான போரினை நடத்துவதற்கும், அதன் பயனாக பொருளாதார ஏற்றம் கண்டு வாழ்வதற்கும் முதல் தீப்பொறியாக விளங்கியவர் அயோத்திதாசர். முதல் Resistant. சாதி மதங்களற்ற திராவிட சித்தாந்தத்தை வடிவமைத்த மூத்தவர்.
அவருக்கு அடுத்து சாதி, மதமற்ற முற்போக்கு சிந்தனையை பெரியார், அம்பேத்கார் போன்ற ஆளுமைகள் நமக்கு முந்தைய தலைமுறையிடம் சேர்த்து அவர்கள் நமக்கு சேர்த்திருக்கிறார்கள். இது ஒரு தொடர்சங்கிலி. அறிவியல், சமூகவியல் இந்த சிந்தனையை Authenticate செய்து ஆம் இது தான் சரி கூறுகிறது. இந்த சங்கிலியை அறுந்துவிடாமல் நாம் அடுத்தடுத்த தலைமுறைகளிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அது தான் இந்த நிலத்தில் இருக்கும் மனிதகூட்டத்தை பாதுகாக்கும். அதுவே நம் அறிவுசார் முன்னோர்களுக்கு நாம் செய்யும் நன்றியும் மரியாதையும்

கருத்துகள் இல்லை: