புதன், 20 மே, 2020

மேற்கு வங்கத்தில் பல பகுதிகளை புரட்டி போட்ட ஆம்பன் புயல்

மேற்கு வங்காளத்தில் பல பகுதிகளை புரட்டி போட்ட ஆம்பன் புயல் தினத்தந்தி : மேற்கு வங்காளத்தில் ஆம்பன் புயல் பல பகுதிகளை புரட்டி போட்டுள்ளதுடன் வெள்ள காடாக உருமாற்றி உள்ளது. கொல்கத்தா, தெற்கு வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, இன்று மதியம் 2.30 மணியளவில் மேற்கு வங்காளத்தின் திகா கடற்கரை மற்றும் வங்காளதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே சுந்தரவன காடுகள் பகுதியையொட்டி கரையை கடக்க தொடங்கியது.  தொடர்ந்து முன்பகுதி, நடுப்பகுதி பின்னர் கடைசி பகுதி என மாலை 3.30 மணி முதல் 5.30 மணிவரைக்குள் புயல் முழு அளவில் கரையை கடந்தது.
இந்த புயலால், மேற்கு வங்காளத்தில், வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட கூடும்.  கொல்கத்தா, ஹூக்ளி, ஹவுரா மற்றும் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டங்களில் காற்று மணிக்கு 110 முதல் 120 கி.மீட்டர் வேகத்தில் வீசும்.  இது மணிக்கு 135 கி.மீட்டர் வரை வேகமெடுக்கும் என கூறப்பட்டது. இந்த புயலானது ஒடிசாவின் பத்ரக் மற்றும் பாலசோர் பகுதிகளில் தொடர்ந்து 2 முதல் 3 மணிநேரம் வரை பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.


இந்நிலையில், புயல் பாதிப்புக்கு மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரத்தில் உள்ள பல தெருக்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டன.  மரங்கள் வேரோடு சாய்ந்தன.  கடுமையான காற்று வீசியதில் மற்றும் கனமழையால் வீடுகளும் சேதமடைந்தன.  வாகனங்கள் மற்றும் வீடுகளின் மேற்கூரைகள் மீதும் மரங்கள் விழுந்து பெருத்த பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தன.

கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள டிகா மற்றும் ஒடிசா எல்லை பகுதிகளுக்கு உட்பட்ட சாலையில் மின் வயர்கள் கீழே விழுந்ததுடன் மரங்கள் சாய்ந்து கிடந்தன.  அவற்றை தேசிய பேரிடர் மேலாண் படையினர் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.  இரவு நேரம் சூழ்ந்த நிலையில், மழையால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.  மின் வயர்கள் விழுந்து, மின் வினியோகம் தடைப்பட்டு உள்ளது.

நாட்டில் நீட்டிக்கப்பட்டு உள்ள ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் சூழ்நிலையில், மழை, வெள்ளம், புயல் பாதிப்புகளால் இரு மாநில மக்களும் பெருத்த அவதிக்கு ஆளாகி உள்ளன

கருத்துகள் இல்லை: