பணவிநியோக ஸ்பாட்டில் நக்கீரன்!
புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரியின் வழிகாட்டுதலில் 4ம் தேதி நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு பண விநியோகம் தொடங்கியது. இந்தப் பண விநியோகத்தை கண்டுபிடிக்க நம்மையும் ஆர்.கே.நகரில் உள்ள பாரதி நகர் ஆறாவது தெருவில் உள்ள வாக்காளராக அ.தி.மு.க. டீமிடம் பதிவு செய்து வைத்திருந்தோம். சரியாக பனிரெண்டு மணிக்கு நமது செல்போனுக்கு 98844 62445 என்ற எண்ணிலிருந்து போன் வந்தது. ""நான் அ.தி.மு.க.வின் ஆயிரம்விளக்கு தொகுதி மகளிரணி பகுதிச் செயலாளர் கவுசல்யா பேசுறேன். உங்களுக்குப் பணம் தரப்போகிறோம். உங்கள் வீட்டுக்கு வரலாமா? தூங்கிவிட்டீர்களா?'' என நலம் விசாரித்தது.பணம் விநியோகிக்கப்படுகிறது என அறிந்ததும் நாம் உஷாரானோம். பணம் விநியோகம் செய்யப்படுவதை லைவ் ஆக கவனிக்க ஆர்.கே. நகரை நோக்கிப் பறந்தோம். அதற்குள் 96001 13231 என்கிற எண்ணிலிருந்து மற்றொரு போன் வந்தது. ""நான் கவுசல்யா மகன் பேசுறேன். வீட்லயே இருங்க'' என்றது. நாம் நமது முகவரியாக குறிப்பிட்டிருந்த நமது நண்பர் வீட்டுக்குப் போவதற்குள், நமது தொலைபேசி எண்ணுக்குப் போன் போட்டுக்கொண்டிருந்தனர் அ.தி.மு.க.வினர். பாரதி நகருக்கு நாம் சென்று பார்த்தபோது எந்தவிதமான சத்தமும் சலனமும் இல்லை. அந்த நகரில் உள்ள தெருவின் முனையில் உளவுப்பிரிவு போலீசார் சீருடை இல்லாமல் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் நம்மிடம், ""யார் நீ? எங்கே போகிறாய்?'' என விசாரித்தார்கள். நாம் நண்பரின் முகவரியைச் சொல்லி, அவர்களுக்குப் போக்கு காட்டிவிட்டு தெருவில் என்ன நடக்கிறது என நோட்டமிட்டோம். ஒரு ஆட்டோவில் அ.தி.மு.க டீம் பயணித்துக் கொண்டிருந்தது. அந்தத் தெருவில் இருந்த தி.மு.க.வினர் மற்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் வீடுகளைத் தவிர அனைத்து வீடுகளுக்கும் அ.தி.மு.க.வினர் சென்று வந்தனர். அ.தி.மு.கவினரை அழைத்துச் சென்றவர்கள், நமது நண்பரின் தெருவில் குடியிருப்பவர்கள் என்பது அந்தக் கும்மிருட்டிலும் அடையாளம் தெரிந்தது.
பட்டுவாடா ஸ்டிக்கர்!
ஒவ்வொரு வீட்டிலும் நுழையும்போது அந்த டீமின் செல்போன் லைட்டுகள் உயிர்பெற்றன. அவர்களது கைகளில் இருந்த வாக்காளர் பட்டியலில் டிக் செய்துவிட்டு ஓட்டுக்கு 4000 ரூபாய் என இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் இரண்டையும், வேட்டி- சேலை, குத்துவிளக்கு போன்ற பொருட்களையும் கொடுத்துவிட்டு வந்ததை மங்கலான வெளிச்சம் எடுத்துக்காட்டியது. கும்பலாக வந்த அவர்களை நமது நண்பர் வீட்டில் நாம் வரவேற்றோம். நமது செல்போன் எண்ணை குறிப்பிட்டு, "அந்த வீடுதானே' என நம்மிடம் பேசிய கவுசல்யா தலைமையிலான டீம், நண்பர் வீட்டில் பணத்தையும் பரிசுப் பொருட்களையும் கொடுத்துவிட்டு, "தொப்பிக்குத்தான் ஓட்டுப் போடணும்' என நண்பரின் குழந்தையின் தலையில் வைத்து சத்தியம் வாங்கினார்கள். போகும்போது டி.டி.வி. தினகரனுக்கு தொப்பி சின்னத்தில் வாக்கு கேட்கும் ஸ்டிக்கரையும் ஒட்டினார்கள். நம் நண்பரின் வீட்டு சுவரில் அ.தி.மு.க.வினர் ஏற்கனவே பலவித கணக்கெடுப்புகளை நடத்தி, அதன் அடையாளமாக பலவிதமான வண்ணங்களில் குறிப்பெழுதியிருந்தனர். ""அதன்மீது ஏன் புதிதாக ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்கள்'' என நாம் கேட்டதற்கு, ""இந்த ஸ்டிக்கர் ஒட்டுனா பண விநியோகம் முடிந்த வீடுன்னு அர்த்தம்'' என புன்சிரிப்புடன் சொல்லிவிட்டு, ""நீங்க தொப்பிக்குத்தான் போடணும்'' என மிரட்டல் கலந்த தொனியில் பேசிவிட்டுச் சென்றார்கள். நண்பர் வீட்டில் மொத்தம் ஆறு ஓட்டுகள். ஒரு ஓட்டுக்கு 4000 ரூபாய் என ஆறு ஓட்டுக்கு 24,000 ரூபாய் மொத்தமாக கிடைத்ததும் அவர் மகிழ்ந்துபோனார். நாம் அந்தப் பண விநியோகத்தை புகைப்படம் எடுக்காமல் ஒத்துழைத்ததற்காக நன்றி சொன்னார்.
பண விநியோகத்துக்கு போலீஸ்-ரவுடி காவல்!
பக்கா பிளான், கிராண்ட் சக்ஸஸ்!
""என்ன சார் இது?'' என காவல்துறை வட்டாரங்களை விசாரித்தபோது ""இதெல்லாம் பக்கா பிளான் பண்ணி நடந்த வேலை. ஆர்.கே.நகரில் உள்ள ஏழு வட்டங்களில் ஒரு வட்டத்திற்கு பண விநியோகத்தை முடிக்க இரண்டு மணி நேரம் என புலனாய்வுப் பிரிவு கூடுதல் கமிஷனர் உயர் அதிகாரி திட்டம் தீட்டிக் கொடுத்தார். பண விநியோகம் நடைபெறும் பகுதிகள் மாநகர போலீசார் மற்றும் அ.தி.மு.க. ரவுடிகள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. நள்ளிரவு 11 மணி தொடங்கி காலை 6 மணிக்குள் 90 சதவிகித பண விநியோகத்தை இணை கமிஷனர் சாரங்கனும் துணை கமிஷனர் ஜெயக்குமாரும் துணை நிற்க, பக்காவாக நடத்தி முடித்துவிட்டார்கள் என விளக்கினார்கள். ""இதற்காக துணை கமிஷனர் ஜெயக்குமார் வீட்டுக்குப் போகாமல், தூங்காமல் கடந்த பத்து நாட்களாக அவரது அலுவலகத்திலேயே தங்கி, திட்டமிட்டு வேலை செய்து பண விநியோகத்தை கிராண்ட் சக்ஸஸ் ஆக்கிவிட்டார். மற்ற அதிகாரிகளும் ஒத்துழைத்தனர்'' என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.
தி.மு.க.வின் எதிர்வினை!
காசிமேடு பகுதியில் உள்ள ஹெலன் தெருவில் கட்டுக்கட்டாக பண விநியோகம் செய்தவர்களை, தி.மு.க.வின் நாகை தெற்கு மாவட்டச் செயலாளர் கவுதமன் காவல்துறையிடம் பிடித்துக் கொடுக்க ஆயத்தமானார். சூட்கேசுடன் பிடித்துக் கொடுக்க அவர் முயற்சித்தபோது. பணத்துடன் வந்த கும்பல் தங்களுடன் இருந்த வயதான பெரியவரான திருப்பூரைச் சேர்ந்த கமால்பாட்ஷாவை வாக்காளர் பட்டியலுடன் விட்டுவிட்டு ஓடிவிட்டது. அவரிடமிருந்த வாக்காளர் பட்டியலில் அ.தி.மு.க. வாக்காளர்கள் பச்சை நிறம், தி.மு.க. வாக்காளர்கள் சிவப்பு நிறம், நடுநிலை வாக்காளர்கள் ப்ரவுன் கலர் என வண்ணமயமாக ரகம் பிரித்து, அதனடிப்படையில் பணம் கொடுத்ததை நமக்கு காண்பித்தார் கவுதமன். இப்படி தொகுதி முழுவதும் ஒரே இரவில் பண விநியோகம் செய்த அ.தி.மு.க.வினர் பலரைத் தி.மு.க.வினர் பிடித்துக் கொடுத்தார்கள். அவர்களில் பாதிபேரை போலீசாரே தப்பிக்க வைத்தனர். தி.மு.க.வினர் மற்றும் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்தவர்கள் போலீசிடம், "இவர்களைக் கட்டாயம் கைது செய்தே ஆகவேண்டும்' என போராடியதால் 25 பேரை மட்டும் எச்.6 காவல்நிலையத்தில் உட்கார வைத்திருந்தனர். டி.சி.ஜெயக்குமாரின் சிஷ்யப்பிள்ளையான ஆய்வாளர் வீராகுட்டி 25 பேரையும் அவர்கள் வைத்திருந்த 15 லட்ச ரூபாயையும் ராஜமரியாதையோடு ஜார்ஜ்டவுன் கோர்ட்டில், ""தேர்தல் நேரத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பணம் விநியோகித்தார்கள்'' என்கிற சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அனுப்பி வைத்தார். எச்.6 காவல்நிலையத்திற்கு நாம் சென்று பார்த்தபோது, அ.தி.மு.க.வினர் பரிசுப் பொருட்களுடன் காவல்நிலையத்தில் உட்கார வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை சிறைக்கு அனுப்பாமல் ஜாமீனில் எடுக்க அ.தி.மு.க.வின் பொன்னேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான பொன்ராஜா ஆக்டிவ் ஆக அங்கே அலைந்து திரிந்துகொண்டிருந்தார்.
தூங்கும் கண்காணிப்புக் குழு!
ஒரே இரவில் இவ்வளவு பெரிய பண விநியோகம் நடந்துள்ளதே... இதன்மொத்த மதிப்பு எவ்வளவு என அ.தி.மு.க. வட்டாரங்களைக் கேட்டோம். "200 கோடி ரூபாய்' என்றார்கள். ""இரவு முழுவதும் ஒரு லட்சத்து 20,000 வாக்காளர்களை கவர் செய்தோம். 5ஆம் தேதி மதியம் மிச்சமுள்ள 20,000 வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தோம். முதலில் ஓட்டுக்கு 4000 ரூபாய் என ஆரம்பித்த பண விநியோகம் பிறகு 2000 ரூபாயாக குறைந்தது'' என்றார்கள்.இப்படி இரவு பகல் என பண விநியோகம் நடக்கிறதே... இதையெல்லாம் கண்காணிக்க நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர்கள், பிளையிங் ஸ்குவாடு இவையெல்லாம் எங்கே என தொகுதி முழுவதும் சுற்றித் தேடினோம். எல்லோரும் கார்களில் ஏ.ஸி.யைப் போட்டுக்கொண்டு ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்கள்
ஆவேச எம்.எல்.ஏ.!
05ஆம் தேதி இத்தனை அலம்பல்கள் என்றால் 06ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு வேறு அலம்பல். சீர்காழி எம்.எல்.ஏ. பாரதி (தினகரன் ஆதரவாளர்) தனது ஆட்களுடன் பழைய வண்ணாரப்பேட்டையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். டி.என்.09 பி.எஃப்.8805 என்ற எண் கொண்ட அவரது இன்னோவா காரை மடக்கி சோதனை போட்டனர் போலீசார். காருக்குள் இருந்த பாரதியின் ஆள் ஒருவரிடம் பல்க்காக 2,000 ரூபாய் நோட்டுகளைப் பார்த்து ""எதுக்கு இவ்வளவு பணம்'' என போலீஸ் கேட்க, ""என்னோட செலவுக்கு வச்சிருக்கேன். எம்.எல்.ஏ.வான என்கிட்டேயேவா'' என பாரதி எகிற, ""சாரி சார், நீங்க போகலாம்'' என அனுப்பிவிட்டது போலீஸ்.
கார்டனில் மோதல்!
பண விநியோகம் நடக்கும்வரை பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த அ.தி.மு.க. டீம், அதற்குப் பிறகு தொகுதியில் அதிகம் தென்படவில்லை. தீபாவும் ஓ.பி.எஸ்.சும் தங்களது பிரச்சாரத்துக்காக மூன்று மணி நேரம் போக்குவரத்தை நிற்க வைத்தபோதும், அதை தட்டிக்கேட்க தினகரன் அணி தொண்டர் ஒருவர்கூட முன்வரவில்லை. அ.தி.மு.க. தலைமைத் தேர்தல் அலுவலகமே வெறிச்சோடிக் கிடந்தது. ஆர்.கே.நகர் தொகுதி முழுவதுமே ஒருவித மகிழ்ச்சி க்ளைமாக்ஸில் மூழ்கிக் கிடந்த அந்த வேளையில் போயஸ் கார்டனில் இளவரசி குடும்பத்தாருடன் டி.டி.வி. தினகரன் கடுமையான வாக்குவாதம் நடத்திக்கொண்டிருந்ததாக போயஸ் கார்டன் வட்டாரம் தெரிவித்தது. அதன் எதிரொலியாக ஜெயா டி.வி.யில் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.
அடுத்த ரவுண்டும் ரெடி!
இறுதிக் கட்டம்!
திட்டமிட்டபடி பணப்பட்டுவாடா நடந்ததால் தினகரன் தெம்பாக உள்ளார். இத்தனை பார்வையாளர்கள் இருந்தும் வேடிக்கை பார்த்ததால் எதிர்க்கட்சிகளின் கோபத்திற்குள்ளாகியுள்ள இந்திய தேர்தல் ஆணையம் டென்ஷனாகியுள்ளது. "பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் தேர்தல் நடத்திய எங்களுக்கு ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்த முடியாதா?' எனக் கேட்பதுடன், ""தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானிக்கு பதில், மத்திய அரசு அதிகாரி ஒருவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துள்ளது. தேர்தல் கமிஷன் நினைத்தால் உடனே தேர்தலை நிறுத்திவிட முடியும். தேர்தலை நிறுத்துவதா? தினகரனை தகுதியிழக்கச் செய்வதா? என்கிற முடிவை 10ஆம் தேதி எடுக்கும்'' என்கிறார்கள் தேர்தல் ஆணைய வட்டாரத்தினர்.
பிணம் போல செட்-அப்!
ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த ஜெ.வின் உடல் (தேசியக் கொடி போர்த்தப்பட்டது) போல் செட்-அப் செய்து, ஒரு ஜீப்பில் ஏற்றி கொருக்குப்பேட்டை பாரதிநகர் 5-ஆவது தெருவில் 6ஆம் தேதி இரவு வலம் வந்து கொண்டிருந்தார் மாஜி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். இதெல்லாம் தேர்தல் விதிமீறல் என்றபடி செட்-அப் பிணத்தை அப்புறப்படுத்தியது போலீஸ்.
-தாமோதரன் பிரகாஷ், அருண்பாண்டியன்
படங்கள்: ஸ்டாலின், அசோக், செண்பக பாண்டியன் நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக