திங்கள், 3 ஏப்ரல், 2017

3,200 பேருந்துகள் ரத்து.. வருவாய் போதாதாம் ... இனி மணிகணக்கில் காத்திருக்க நேரிடும்!


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வருவாய் இல்லாத வழித்தடங்களில் இயங்கும் 3,200 அரசு பேருந்துகளை நிறுத்த முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் 8 கோட்டங்கள், 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் சார்பில் தினந்தோறும் 22,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகள் அதிகளவில் இயங்கியும் போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் மட்டுமே இயங்கி வருகிறது.
2011ஆம் ஆண்டு டிக்கெட் கட்டணம் 40 சதவிகிதம் உயர்த்தப்பட்டபோதும், போக்குவரத்து கழகம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் டீசல் மீதான வாட் வரி உயர்வால் ஓய்வூதியம்கூட வழங்க முடியாத நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. நிதி நெருக்கடியைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வருவாய் இல்லாத வழித்தடங்களில் இயங்கும் 3,200 அரசு பேருந்துகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது றித்து பஸ் போக்குவரத்து தொழிலாளர்கள் அமைப்பு நிர்வாகி ஒருவர் கூறுகையில், “மொத்தமுள்ள 3,200 பேருந்துகளில் மாநகரப் போக்குவரத்து கழகம் 360 பேருந்துகளை ரத்து செய்துள்ளது. பெரும்பாலும், புறநகர் பகுதியில் உள்ள வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகரில் பேருந்துகள் மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்து வருகிறது. அதாவது 2010-11ஆம் ஆண்டு ஒரு பேருந்து மூலம் நாளொன்றுக்கு ரூ.1,563 வருவாய் கிடைத்தது. ஆனால் தற்போது 2016-17ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு ஒரு பேருந்து மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.1,325 ஆக குறைந்துவிட்டது.
குறைந்த வருவாய் காரணமாகவே போக்குவரத்து கழகம் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன. பேருந்துகளின் எண்ணிக்கையை குறைப்பது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பேருந்துக்காக மணிக்கணக்கில் காத்து கொண்டிருக்கிற சிரமத்துக்கு ஆளாகுவார்கள். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: