செவ்வாய், 4 ஏப்ரல், 2017

ஓட்டுக்கு பணம் கேட்டு அடாவடி செய்யும் ஆர் கே நகர் வாக்காளப் பெருமக்கள் ... கொடுக்க பயப்படும் கட்சிகள் ..


ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் எட்டு நாட்களே உள்ளன. சசிகலா அணியில் தினகரனும், ஓ.பி.எஸ். அணியில் மதுசூதனனும், திமுக-வில் மருதுகணேஷ் ஆகியோர் போட்டியிடுவதால், பணமழை பொழியும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் கொஞ்சம்கூட பணம் இல்லை என்று புலம்புகிறார்கள் தொகுதி மக்கள்.
தினகரன் தரப்பில், திமுக கொடுத்தபிறகு, நாம் கொடுக்கலாம் என்று காத்திருக்கிறார்கள். தொப்பி தரப்பு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் நாமும் கொடுக்க வேண்டாம் என்று சூரியன் தரப்பு திட்டமிட்டுள்ளதாம். தினகரன் தரப்பில் எவ்வளவு கொடுத்தாலும் நாம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொடுக்க வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளது
திமுக தரப்பு.இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தொகுதி மக்கள் பணம் எங்கே என்று கேள்வி கேட்கத் தொடங்கி விட்டார்களாம் திமுக-வினரிடம். யார் பணம் கொடுத்தாலும் தடுக்காதீங்க, பணத்தை வாங்கிட்டு உங்களுக்கு ஓட்டுப் போடுகிறோம் என்று பேசிவந்தவர்கள், நீங்கள் எப்ப பணம் கொடுக்கப் போறீங்க என்று கேட்கிறார்களாம் நேற்றுமுதல்.
அதையடுத்து, திமுக தொகுதி பொறுப்பாளர்கள், பணம் கேட்கும் வாக்காளர்களிடம், நாளைக்கு கொடுக்கிறோம் என்று அங்கிருந்து தப்பி வருகிறார்கள். தொகுதியில் மூன்று வேட்பாளர்களின் ஆதரவாளர்களிடமும் பணம் கேட்க தொடங்கிவிட்டார்கள் பெண் வாக்காளர்கள். இனி, பணம் கொடுக்காமல் தொகுதியில் தேர்தல் வேலைகள் செய்ய முடியாது என்று புலம்பி வருகிறார்களாம் பூத் பொறுப்பாளர்கள். அதனால் திமுக மூத்த நிர்வாகிகள் செயல் தலைவரிடம் நாம் பணம் கொடுத்துவிடலாம் என்று ஆலோசனை செய்து வருகிறார்களாம். தற்போதைய நிலையில், தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி எப்போதும் இல்லாதளவுக்கு அதிகமாக இருப்பதால் பணம் கொடுக்கத் தயங்குகிறார்கள் கட்சியினர்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: