திங்கள், 3 ஏப்ரல், 2017

சகாயம் IAS :மண்ணையும் மக்களையும் காக்க களத்தில் இறங்குங்கள்!


சென்னை செ.தெ. நாயகம் பள்ளியில் ‘நேர்மையான பாதையில்… இளைஞர்களே ஒன்று கூடுவோம்’ என்னும் தலைப்பில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு சகாயம் ஐ.ஏ.எஸ்., ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
சகாயம் பேசும்போது “தமிழன் என்கிற உணர்வோடு ஒவ்வொரு தமிழரும் இருக்க வேண்டும். இப்போது இருக்கும் நிலையில் விவசாயிகளையும் ,நெசவாளர்களையும் காப்பாற்ற முன்வர வேண்டும். அழிந்து கொண்டிருக்கும் தமிழர்களின் பழைய விளையாட்டுகளை மீட்க வேண்டும். இங்கிருக்கும் ஒவ்வொரு இளைஞர்களும் மண்ணின் மரபுகளை மீட்க களப்பணியாற்ற வேண்டும். ‘திண்ணை திடல்’ என்கிற பெயரில் ஒவ்வொருவரும் அவர் வசிக்கும் பகுதிகளில் மக்களைச் சந்தித்து நம் மண்ணையும் மக்களையும் காக்க பேசுங்கள். உங்களது வேலை நேரம் போக இதற்காக நேரம் ஒதுக்கி, மக்களின் பிரச்னைகளை உங்களால் முடிந்த அளவுக்குக் கேட்டு உதவ வேண்டும். இதற்கு முதலில் இளைஞர்கள் ஒன்று பட வேண்டும்” என்று கோரிக்கை வைத்துப் பேசினார்.


அடுத்து பேசிய தேவசகாயம், “அடிப்படையான சட்டங்களை தெரிந்து கொள்ளுங்கள். ஹெல்மெட் போடவில்லையென்று போலீஸார் உங்களது வண்டியின் சாவியை பறிக்க சட்டத்தில் இடமில்லை. ஹெல்மெட் போடவில்லை என அபதாரம் விதிக்க மட்டுமே சட்டத்தில் இடமுண்டு. இதுபோல அடிப்படையான மக்களுக்கு அன்றாடம் பயன்படும் சட்டங்களை தெரிந்து கொள்ளுங்கள்” என விரிவாக பேசினார். மக்கள் பாதை என்னும் அமைப்பு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. தமிழகம் முழுவதிலுமிருந்து வந்த பல்வேறு மாணவர்கள், இளைஞர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: