![]() |
அதிமுக முன்னாள் அமைச்சரான ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைந்துள்ளார். எம்.எல்.ஏ பதவியை இன்று ராஜினாமா செய்த வைத்திலிங்கம் தனது மகன் பிரபு உடன் அண்ணா அறிவாலயம் வந்தார். திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் வைத்திலிங்கம்.
அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளர்களாகச் செயல்பட்ட வைத்திலிங்கம் எம்.எல்.ஏ, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து கடந்த 2022 ஆம் ஆண்டு நீக்கப்பட்டனர். அதன் பின்னர் ஓபிஎஸ் அணியின் முக்கிய தலைவர்களாக இருவரும் செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து முன்வைத்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில்தான் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்துள்ளார். மேலும் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏகுன்னம் ராமச்சந்திரன் ஆகிய இருவரும் இன்று சென்னையில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்களது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய உள்ளனர்.
சாணக்கியர் ஸ்டாலின்
இந்த இணைப்புகள் எல்லாம் அதிமுக - பாஜக கூட்டணியை வலுப்படுத்த வேண்டும், அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற டெல்லி முயற்சிக்கு இடையில் ஸ்டாலின் செய்த சம்பவங்கள் ஆகும். முக்கியமாக பிரிந்த அதிமுக தலைகளை - எடப்பாடிக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்று டெல்லி முயன்று வந்தது. அதிலும் எடப்பாடி பழனிச்சாமி - ஓ பன்னீர்செல்வம் தரப்பை ஒன்றிணைக்க வேண்டும் என்று டெல்லி நினைத்தது.
அமித் ஷா அதிமுக ஒன்றாக இருந்தால் அது பாஜக கூட்டணிக்கு உதவும் என்று நினைத்தார். ஆனால் இப்போது அந்த இணைப்பு கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிட்டது. காரணம்.. கிட்டத்தட்ட ஓ பன்னீர்செல்வம் அணியை ஸ்டாலின் உடைத்தே விட்டார்.
ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் அணியில் அவரையும் சேர்த்து 4 எம்.எல்.ஏக்கள் இருந்த நிலையில், மனோஜ் பாண்டியன் அண்மையில் திமுகவில் இணைந்தார். அப்போது அவரது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு எம்.எல்.ஏவுமான வைத்திலிங்கம் இன்று எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் ஓபிஎஸ் அணியில் அவரையும் சேர்த்து மொத்தம் 2 பேர் மட்டுமே எம்.எல்.ஏ.க்கள் என்ற அளவிற்கு சுருங்கி உள்ளது. கிட்டத்தட்ட அதிமுக மீட்பு குழுவில் ஸ்டாலின் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.
உடையும் அதிமுக
தமிழ்நாட்டில் இப்போது நடப்பதோ மழைக்காலம்.. ஆனால் அதிமுகவிற்கு மட்டும் அது இலையுதிர் காலம். அதாவது இரட்டை இலையில் இருந்து பல இலைகள் உதிர்ந்து விழுந்து வேறு கட்சிக்கு பறந்து செல்லும்.. இலையுதிர் காலம் இது!
ஆம்.. அதிமுகவில் இருந்து வரும் நாட்களில் பல மூத்த தலைவர்கள் வெளியேற முடிவு செய்துள்ளதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் இருந்து கடந்த சில நாட்களாகவே பலர் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். சமீபத்தில் முன்னாள் அதிமுக எம்.பி. மைத்ரேயன், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவரை உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். "திமுக ஆட்சியில் தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதியானது. இரண்டாவது இடத்திற்குத்தான் போட்டி நடக்கும்" என்று மைத்ரேயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த அன்வர் ராஜாவின் முடிவு பல விவாதங்களை எழுப்பியுள்ளது. அதிமுகவின் முக்கியமான இஸ்லாமிய முகங்களில் ஒருவரான அன்வர் ராஜா, திமுகவில் இணைந்தது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இவர் அதிமுகவின் அமைப்புச் செயலாளராகவும், முன்னாள் எம்.பி.யாகவும் இருந்தார்.
அதேபோல் ஆலங்குளம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரும் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த நிலையில், எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த மனோஜ் பாண்டியன் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துவிட்டார்.
லிஸ்ட் கூடிக்கொண்டே போகிறது
இப்படி வரிசையாக அதிமுகவில் இருந்து வெளியேறும் தலைகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. எங்கடா இங்க இருந்த என் டீமை காணோம் என்று ரியாஸ் கானிடம் மாட்டிக்கொண்ட வடிவேல் தனது அடியாட்களை தேடுவது போல எடப்பாடி பழனிசாமி திரும்பி பார்க்கும் முன் கட்சியில் இருந்து கொத்து கொத்தாக ஆட்கள் வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள்.
இது டீசர்தான்
அதிமுக தரப்பில் விசாரித்ததில் இது வெறும் டீசர்தான் என்கிறார்கள். மெயின் பிக்சர் இனிதான் என்கிறார்கள். அதாவது கொங்கு மண்டலத்தில் இருந்து இன்னொரு தலைவர், சென்னையில் இருந்து ஒருவர், டெல்டாவில் இருந்து இருவர் என்று இன்னும் 4 தலைகள் விரைவில் திமுக தாவ போகிறார்கள் என்று கூறப்படுகிறது. இதை எல்லாம் அதிமுக எப்படி சமாளிக்கும்.. அவர்களுடன் கூட்டணியில் உள்ள பாஜக எப்படி சமாளிக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக