புதன், 21 ஜனவரி, 2026

பேருந்தில் தவறாக நடந்துக்கொண்டதாக வீடியோ! இளம்பெண் அதிரடி கைது!

 tamil.oneindia.com  - Halley Karthik  :  திருவனந்தபுரம்: பேருந்தில் தன்னிடம் தவறாக நடந்துக்கொண்டதாக கூறி, அதை வீடியோ எடுத்து இளம்பெண் ஒருவர் வெளியிட்டார். 
அவர் வெளியிட்ட வீடியோவால், சம்பந்தப்பட்ட இளைஞர் தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவத்தில், இளைஞரின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், வீடியோ வெளியிட்ட இளம்பெண் கைத செய்யப்பட்டிருக்கிறார்.
பெண்கள் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், பாலியல் அத்து மீறல்கள் கொலைக்குற்றம் போல அணுகப்படும் சம்பவங்களும் அதிகரித்திருக்கின்றன.



இந்த சூழலில்தான் கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது ஷிம்ஜிதா முஸ்தாஃபா எனும் இளம்பெண் பேருந்தில் பயணித்தபோது, அதே பேருந்தில் புதியறையைச் சேர்ந்த தீபக் எனும் இளைஞர் பயணித்திருக்கிறார். இவர் ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை பணி நிமித்தமாக கண்ணூருக்குப் பேருந்தில் சென்றபோது, அதே பேருந்தில் பயணித்த இளம்பெண்ணிடம், தவறாக நடந்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேரானது.
தற்கொலைக்கு காரணம்

சமூக ஊடகங்களில் பரவிய இந்த வீடியோ, இளைஞரின் கவனத்திற்குச் சென்றதால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் கூறினர். ஆரம்பத்தில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்த காவல்துறை, குடும்பத்தினர் புகாரைத் தொடர்ந்து, பாரதிய நியாய சம்ஹிதாவின் பிரிவு 108-ன்படி இளம்பெண் மீது தற்கொலைக்குத் தூண்டியதாகப் புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனையடுத்து தற்போது இளம்பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இச்சம்பவம் குறித்து, வட மண்டல துணை ஆய்வாளர் ஜெனரல் ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 19 அன்று நடைபெறும் ஆணையத்தின் அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்படும்.

இதற்கிடையே, பாஜக தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார். விசாரணையில் தாமதம் ஏற்பட்டதாக கூறியுள்ள அவர், வீடியோ எடுத்த பெண் ஓர் அரசியல் கட்சியின் தீவிர பணியாளர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை: