வியாழன், 6 ஏப்ரல், 2017

ஆர்.கே.நகரில் போலீஸ் மூலம் பணப்பட்டுவாடா: திருச்சி சிவா

காவல்துறை மூலமாகவே பணப்பட்டுவாடா நடைபெறுவதாக திருச்சி சிவா தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்துக் கட்சியினரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் ஆளுங்கட்சியாக உள்ள தினகரன் அணியினர் பணப்பட்டுவாடா செய்வதாக திமுக, பன்னீர் அணி, பாஜக, மா.கம்யூ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் ஏப்ரல் 5ஆம் தேதி தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியைச் சந்தித்து புகார் தெரிவித்தனர்.
இந்தச் சூழ்நிலையில், ஏப்ரல் 5ஆம் தேதி மாலை டெல்லியிலுள்ள தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம், ஆர்.கே.நகரில் போலீஸ் மூலமாகவே பணப்பட்டுவாடா நடைபெறுவதாக திமுக சார்பில் திருச்சி சிவா எம்.பி. புகார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “காவல்துறை அதிகாரிகளின் மூலமாகவே ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா வேகமாக நடந்து வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். நாங்கள் முன்னர் கூறிய புகாரில் சில போலீஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்ற செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும், சில காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து அவர்களுடைய பழைய பதவிகளில் நீடித்து வருகிறார்கள்” என்று கூறினார்.  மின்னம்பலம

கருத்துகள் இல்லை: