![]() |
தமிழ் செய்திகள் : கோவையை மொத்தமாக பேரம் பேசிய கமல்.. ஒரே போடாய் போட்ட ஸ்டாலின்!!
8 வாக்கு வங்கி இல்லாத நிலையிலும் கடந்த தேர்தல்களில் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் பயன்படுத்திய 'டார்ச் லைட்' சின்னம் மீண்டும் அந்த கட்சிக்கே கிடைத்துள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் 15 தொகுதிகளை கேட்டு பட்டியலை வழங்கியிருக்கிறார் கமலஹாசன். அதில் கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் உள்ளிட்ட தொகுதிகள் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் திமுக தலைமையோ கமலஹாசனுக்கு மூன்று தொகுதிகள் மட்டுமே ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான சின்ன ஒதுக்கீட்டு பணிகளைத் தேர்தல் ஆணையம் வேகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தான், வாக்கு சதவீதம் 8 இல்லையென்றாலும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த தேர்தல்களில் பயன்படுத்திய 'டார்ச் லைட்' சின்னம், மீண்டும் அந்தக் கட்சிக்கே வழங்கப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் இதே சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், மீண்டும் அதே சின்னம் கிடைத்துள்ளது.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்ட அதே நாளில் தான் மக்கள் நீதி மய்யத்துக்கும் அதன் பழைய சின்னம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சின்னம் ஒதுக்கப்பட்டதையடுத்து அடுத்தகட்ட தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்க, மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விரிவான விவாதங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.
தற்போது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம், எதிர்வரும் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை எப்போது தொடங்குவது, மேலும் களப்பணிகளை எந்த வகையில் முன்னெடுப்பது என்பதையும் இந்தக் கூட்டத்தில் அலசப்பட்டுள்ளது. குறிப்பாக, 'டார்ச் லைட்' சின்னத்திலேயே தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் கட்சி உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 2018-ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம், 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் தனித்து களமிறங்கியது.
2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் போட்டியிட்டாலும், எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. அப்போது கட்சி 0.40 சதவீத வாக்குகளை பெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 180 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், 2.62 சதவீத வாக்கு சதவீதத்தை பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து, 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி அமைத்தது. அந்தத் தேர்தலில் போட்டியிட சீட்கள் வழங்கப்படாதபோதும், கட்சிக்கு ஒரு ராஜ்யசபா இடம் வழங்கப்பட்டது. இதன் மூலம் கமல்ஹாசன் தற்போது ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் எத்தனை தொகுதிகளை கோரி பெறுவது, மேலும் எந்தெந்த தொகுதிகளில் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் 15 தொகுதிகள் அடங்கிய ஒரு ஆரம்ப பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த பட்டியலில் கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், வேளச்சேரி, மயிலாப்பூர், மதுரவாயல், அம்பத்தூர், தாம்பரம், சோழிங்கநல்லூர், கவுண்டம்பாளையம், ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, மதுரை மத்தி, ஆலந்தூர் மற்றும் தியாகராயநகர் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், திமுக மக்கள் நீதி மய்யத்திற்கு 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க திட்டமிட்டிருப்பதாகவும், அதுவும் திமுக சின்னமான உதயசூரியனிலேயே போட்டியிட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளதோடு, தமிழகம் முழுவதும் கமல்ஹாசனை பிரசாரத்தில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக