திங்கள், 3 ஏப்ரல், 2017

இளைஞர் போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி ....

விவசாயிகளுக்காக இளைஞர்கள் போராட்டம் நடத்த ஏழு நாட்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த சனிக்கிழமை சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ‘உழவே தலை’ என்ற இளைஞர்கள் அமைப்பு சார்பில் விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த ஏற்பாடு நடைபெற்றது. போலீஸ் மற்றும் ஆளும் கட்சியினர் கொடுத்த அழுத்தம் காரணமாக ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகம் கொடுத்த அனுமதியை திரும்பப்பெற்றதாக கூறப்பட்டது. ஆனால் இந்த விவரம் தெரியாமல், போராட்டத்தில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 500 விவசாயிகள் சென்னையில் திரண்டுள்ளனர்.
அவர்கள் கூடி விவாதிக்க இடம் கிடைக்காத காரணத்தால், இளைஞர்களின் உதவியுடன் அந்த விவசாயிகள் சென்னையில் பல்வேறு இடங்களில் தங்கியுள்ளனர். இதையறிந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு, இது ஜனநாயக நாடா? போராடும் உரிமையை மறுப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இளைஞர்களின் உரிமையைப் பறிக்க போலீஸுக்கு அதிகாரம் இல்லை என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, இளைஞர்கள் சார்பில் சென்னை கமிஷனரிடம் முறையிடப்பட்டது. அப்போது கமிஷனர், சென்னைக்கு வெளியே எங்கு வேண்டுமானாலும் போராட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு
விவசாயிகளின் உரிமைக்காகப் போராடும் சந்திரமோகன் சார்பில், People Union for Civil Liberties அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சுரேஷ் மற்றும் நாக சைலா மனு தாக்கல் செய்திருந்தார்கள். இதை அவசர வழக்காக எடுத்து ஏப்ரல் 1ஆம் தேதி காலை 11 மணியளவில் நீதிபதி ரமேஷ் விசாரித்தார். போலீசார் தரப்பில், இளைஞர்கள் வெளியிட்டதாகக் குறிப்பிட்டு சில மீம்ஸ், பதிவுகளைக் காட்டி சட்டம்-ஒழுங்குக்கு இடையூறு ஏற்படக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பையும் விசாரித்த நீதிபதி ரமேஷ், இளைஞர்கள் குழு அடுத்த ஏழு நாட்களுக்கு ஆவடிக்கு அருகே உள்ள பாண்டேஸ்வரத்தில் போராட்டம் நடத்த அனுமதித்து இடைக்கால உத்தரவை வழங்கினார். மேலும் 5000 பேர் வரை அந்த இடத்தில் கூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, உழவே தலை அமைப்பு சார்பில் பாண்டேஸ்வரத்தில் போராட்டம் நடத்த இளைஞர்கள் திரண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள விவசாயிகளும் பங்கேற்கவுள்ளனர்.
ஏப்ரல் 3ஆம் தேதி திங்கட்கிழமை காலை நீதிபதி துரைசாமி தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை மறுவிசாரணை செய்கிறது.
விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் தங்கள் விடுதியில் ஏப்ரல் 3ஆம் தேதி திங்கட்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: