புதன், 5 ஏப்ரல், 2017

டெல்லியில் அய்யாக்கண்ணு திடீர் மயக்கம்

Farmers Association Leader Ayyakannu டெல்லி, ஜந்தர் மந்தர் போராட்டத்தின்போது, திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு மயக்கம் அடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 14-ம் தேதி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் காலவரையற்ற போராட்டம் தொடங்கியது. போராட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை ஏற்றார். காவிரி மேலாண்மை அமைப்பது, விவசாயிகள் வாங்கிய வங்கிக் கடன்களைத் தள்ளுபடிசெய்தல் , நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து, விவசாயிகள் வித்தியாசமான போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.


மண்டை ஓடு, மண் சட்டி, தூக்குக்கயிறு உள்ளிட்டவற்றைவைத்து, விவசாயிகள் நூதனப் போராட்டம் நடத்தினர்.  வாயில் எலிக்கறி, பாம்புக்கறியை வைத்தும் போராட்டம் நடத்தினர். தலையை அரைமொட்டை அடித்துக்கொண்டும், ஒரு பக்க மீசையை எடுத்தும் நேற்று போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், போராட்டத் தலைவர் அய்யாக்கண்ணு இன்று, போராட்டக் களத்தில் திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து, அய்யாக்கண்ணு உடனடியாக டெல்லி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். தற்போது, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, போராட்டத்தில் பங்கேற்றுள்ள துவரங்குறிச்சியைச் சேர்ந்த விவசாயி பழனிசாமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் அய்யாக்கண்ணு போராட்டக் களத்துக்கு வந்தார்  விகடன்

கருத்துகள் இல்லை: