என்.சரவணன் :தோமஸ் மெயிற்லண்ட் (Sir Thomas Maitland, 1759–1824) ஒரு இராணுவ ஜெனரலாக
போர் முனைகளில் பணிபுரிந்ததன் பின்னர் இலங்கையின் இரண்டாவது ஆங்கிலேய
தேசாதிபதியாக நியமிக்கப்பட்டார். முதலாவது தேசாதிபதி சேர் பிரெடெரிக்
நோர்த்துக்கு அடுத்ததாக நியமிக்கப்பட்டவர் அவர். 1780 இல் இல் இந்தியாவில்
சேவையாற்றிவிட்டு பிரித்தானியா திரும்பி 1790 இல் பிரித்தானிய பாராளுமன்ற
உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.
19-07.1805 முதல் 19.03.1811 வரையான 6 ஆண்டுகள் அவர் இலங்கையில்
தேசாதிபதியாக பதவி வகித்த காலத்தில் நிகழ்ந்த அரசியல், சமூக, பொருளாதார
மாற்றங்கள் முக்கியமானது. இலங்கையின் நிர்வாகத்துறையில் குறுகிய காலத்தில்
பல மாற்றங்களைச் செய்தார்.இலங்கையில் செய்த மாற்றங்கள்
பதவியைக் கையேற்ற முதல் ஆறு மாதங்களை இலங்கை பற்றிய அறிவைப் பெறுவதற்காக
செலவளித்தார். ஆங்கிலேய அதிகாரிகள் செய்து வந்த ஊழல்களால் ஏராளமான அனாவசிய
செலவீனங்களைக் கண்ட அவர் ஆங்கிலேயே திறைசேரியை கையாள்வதை ஒரு ஒழுங்குக்குக்
கொண்டு வந்தார். ஆங்கிலேய அதிகாரிகள் பிழையான வழிகளில் சம்பாதிப்பதை
தடுப்பதற்காக அவர்களின் சம்பளத்தை உயர்த்தினார். உள்நாட்டு மொழியை
கற்றுக்கொண்ட ஆங்கிலேயர்களுக்கே பதவி உயர்வு என்று அறிவித்தார்.
ரோமன் கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தினார். ரோமன்
கத்தோலிக்கர்களுக்கே அரச பதவிகள் என்கிற நிபந்தனையை 1808 இல் அவர் மாற்ற
எடுத்த முயற்சி காலனித்துவ செயலாளரால் தடுக்கப்பட்டது. கண்டியைக்
கைப்பற்றுவதற்கான பாரிய அளவு படையெடுப்பை கட்டுப்படுத்தினார். அதற்குப்
பதிலாக ராஜதந்திர முயற்சிகளை வலுப்படுத்தினார்.
டச்சு ஆட்சியில் நீதி பரிபாலனத்தை ஏற்கெனவே முதலியார்களிடம் இருந்த
எதேச்சதிகார முறையை முதலாவது ஆங்கில தேசாதிபதியான நோர்த்தும் தொடர்ந்தார்.
முதலியார்களிடம் இருந்த நீதி வழங்கும் அதிகாரங்களை சட்ட ஆட்சி முறைமைக்குள்
கொண்டு வந்து சேர்த்தவர் மெயிற்லண்ட்.
குறிப்பாக ஆங்கிலேய ஆட்சியில் முதன் முதலாக சட்டவாக்க விடயங்கள்
நிருவனமயப்படது இவர் காலத்தில் தான். நீதிபதிகளாக சட்ட வல்லுனர்கள்
நியமிக்கப்பட்டார்கள். முஸ்லிம் சட்டங்கள் தொகுக்கப்பட்டன. அந்தந்த
மாகாணங்களுக்கான நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. சிவில் நிர்வாகமும் தரம்
பிரிக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பது. சுதேச மக்களின் நலன்களில் அதிக அக்கறை
காட்டப்பட்டன.
கண்டியைக் கைப்பற்றும் ஆங்கிலேய படைகள் முயற்சித்துக் கொண்டிருக்கையில்
அதற்காக பயன்படுத்தப்பட்ட “மலே” படைப் பிரிவினரின் அட்டூழியங்களைக்
கண்டித்தார். அப்பேர்பட்ட படுகொலைகள் புரிவதை தான் கைவிடுவதாக
மேலிடத்துக்கு (Maitland to Camden, 28th Feb., 1806. C.O. 54/21)
அறிவித்தார் அவர். அதே வேளை கண்டி ராஜ்ஜியத்தின் மந்திரிமார்களை
ராஜந்திரத்துடன் கையாள்வதற்காக ஜோன் டொய்லியை வழிநடத்தியதில் முக்கியமானவர்
மெயிற்லண்ட்.
தலித் காதலி லொவினா
மெயிற்லண்ட் தனக்கு வசிப்பதற்காக ஆளுநர் மாளிகையொன்றை 1806இலேயே கட்டி
அங்கு வசிக்கத் தொடங்கினார். அது தான் கல்கிஸ்ஸவிலுள்ள இன்றைய “மவுன்ட்
லெவினியா” ஓட்டல்.
தேசாதிபதி கண்டு ரசிக்கவென அவ்வப்போது “mestizo” நடனக் கலைஞர்கள்
மாளிகைக்கு வருவிக்கப்படுவதுண்டு. அப்படி நடனமாட வந்த ஐந்து பேரில் லொவினா
அல்போன்சு என்கிற அழகான இளம் பெண்ணின் மீது அவருக்கு காதல் வந்து
விடுகிறது. அந்த பெண்கள் மார்பு வெளிக்காட்டியபடி இருந்தார்கள். "லொவினா
அல்போன்சு" போர்த்துக்கேய காலத்தில் கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்ட “றொடி”
சாதியைச் சேர்ந்தவர்.
“றொடி” சாதி பெண்கள் |
அவர்கள் மார்புக் கச்சை அணிவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அது போல
முழங்காலுக்குக் கீழே உடையணிவதற்கும் தடை. ஆண்களுக்கும் பெண்களுக்கும்
அந்தரங்க உறுப்பை மறைப்பதற்கு மட்டுமே ஒரு காலத்தில் அனுமதியிருந்தது. இது
பற்றி ரொபர்ட் நொக்ஸ்ஸின் குறிப்புகளில் கூட இருக்கின்றன. சுகயீனம், கடும்
குளிர் இருந்தால் மட்டும் தான் அவர்கள் மார்பை மறைக்க அனுமதி இருந்தது.
மார்புகளை மறைத்துக் கொண்டு செல்கின்ற வேளை தற்செயலாக உயர் சாதியினர்
தென்பட்டால் “மன்னியுங்கள் ஐயா குளிராக இருந்தது” என்று கூறி மூடிய சேலையை
அகற்றிவிட்டுச் செல்லும் வழக்கம் இருந்தாக பல நூல்கள் குறிப்பிடுகின்றன.
சிங்கள “றொடி” சாதி
‘றொடி” சாதியினர் (rodi, rodiya, rodiyo, rhodia) சிங்கள சமூகத்தில்
மிகவும் ஒடுக்கப்பட்ட “தலித்” சாதிக்கு ஒப்பானவர்கள். “காடி” சமூகம் (Gadi)
என்றும் அவர்களை சிங்களத்தில் அழைப்பர். ஆரம்பத்தில் “பறை” (பெற) மேளம்
தயாரிப்பது, ஓலைப் பின்னுவது, போன்றவற்றை குலத்தொழிலாகக் கொண்ட இந்த
சமூகத்தினர் மந்திரங்கள், சூனியம், பிச்சை எடுப்பது போன்றவற்றில்
ஈடுபட்டார்கள். புலால் உண்ணுவதாலும் இவர்கள் தீண்டத்தகாதவர்களாக
நடத்தப்பட்டார்கள். அநகாரிக்க தர்மபால மதுவொழிப்பு பிரச்சாரத்தின் போது
தனது வாகனத்தில் இப்படி எழுத்து பொறித்திருந்தார்.
("රා බොන්නා වසලයා", "හරක් මස් කන්නා රොඩියා").
“கள் குடிப்பவர்கள் ஈனர்கள்
புலால் உண்பவர்கள் “றொடி”யாக்கள்’
அந்தளவு இந்த சமூகத்தினர் மீது வெறுப்பு மிக்க புனைவுகள் ஐதீகங்களாக நிறுவப்பட்டிருந்தன.
சிங்களத்தில் தலித் மக்களை “சண்டாள” (சண்டாளர்கள்) என்று பல நூல்களில்
அழைக்கிறார்கள். ஹியு நெவில் (Hugh Nevill) எழுதிய “The Taprobanian”
(1886) என்கிற நூலிலும் “றொடி” மக்கள் வசிக்கும் பகுதியை “சண்டாளர்களின்
இடம்” என்றே அழைக்கிறார்.
சங்கமித்த இலங்கைக்கு வந்த போது அவருடன் உதவிக்கு வந்தவர்களே இவர்கள்
என்கிற கருத்து நிலவுகிறது அதே வேளை கஜபா அரசர் தமிழ்நாட்டிலிருந்து
கொண்டுவந்து அடிமைச் சேவகத்துக்கு பயன்படுத்தப்பட்ட குழுமமே இவர்கள்
என்றும் பல சிங்கள நூல்கள் குறிப்பிடுகின்றன. துட்டகைமுனுவின் ஒரே வாரிசான
இளவரசன் அசேல “றொடி” சாதிப் பெண்ணான அசோகமாலாவை காதலித்து மணந்ததால்
துட்டகைமுனுவுக்குப் பின்னர் அசேலவுக்கு அரச பதவி கிடைக்கவில்லை என்று
மகாவம்சம் கூறுகிறது. அசேல – அசோகமாலா பற்றிய இந்த சாதிப்பிரச்சினையை
மையமாகக் கொண்டு “றொடி கம” (றொடி கிராமம்) என்கிற திரைப்படமொன்று 1974 இல்
டீ.எஸ்.பெரேரா இயக்கி வெளிவந்தது.
“றொடி” மக்கள் வாழும் பல “குப்பங்கள்” இருந்ததாக “ஜோன் டோயிலி” தனது
குறிப்புகளில் எழுதியிருக்கிறார். அவர்களுக்கு சுதந்திரமாக முழுமையான
வீடொன்றை அமைப்பதற்கு கூட அனுமதி கிடையாது. ஜன்னல், கதவுகள் அமைத்துக்
கொள்ளவும் அனுமதியில்லை. வள்ளங்களில் பயணம் செய்ய முடியாது.
அப்படிப்பட்ட சாதியைச் சேர்ந்த “லெவினா”வின் மீது காதல்கொண்ட 47 வயதான
தேசாதிபதி; அந்த 16 வயது பெண்ணை தனது மாளிகைக்கு அழைத்து காதலைத் தெரிவித்த
போதும் அடுத்த நாள் தான் லொவினா தனது இஷ்டத்தை வெளிப்படுத்தினார்.
தேசாதிபதியின் பதவிக் காலம் முழுவதும் அந்தக் காதல் தொடர்ந்தது.
காதலிக்காக கட்டிய சுரங்கம்
“லொவினா” என்கிற பெயரை அவர் “லெவினியா” என்று தான் அழைத்தார். ஒரு
“தீண்டத்தகாத” ஒருத்தியுடன் தேசாதிபதி கொண்டிருந்த காதல் பற்றிய செய்தி
அன்றைய ஆங்கிலேய சமூகத்தினர் மத்தியில் பரவியிருந்தது. இந்தச் செய்தி
அன்றைய அரசர் மூன்றாவது ஜோர்ஜ் மன்னரின் காதுகளையும் சென்றடைந்தது. அதன்
விளைவு அரசரின் இலட்சினை பொரித்த கடிதமொன்று வந்தடைந்தது.
இனிமேல்; தான் அறிவிக்கும் வரை மாளிகையின் பக்கம் வரவேண்டாம் என்று
லொவினாவுக்கு மெயிற்லண்ட் அறிவித்தார். ஆனால் மெயிற்லண்ட் வேறு வழியில் தன்
காதலியை சந்திக்க திட்டமிட்டார். அதன்படி மாளிகையிலிருந்து “றொடி” குப்பம்
வரை நிலத்துக்கடியில் ஒரு சுரங்கத்தை 6 மாதங்களில் அமைத்து முடித்தார்.
அந்த சுரங்கம் நேராக லொவினாவின் வீட்டுக்கே சென்றது. காதலிக்காக இரகசிய
சுரங்கம் அமைத்த மெயிற்லண்ட்; லொவினாவை மாளிகைக்கு அந்த வழியாக அழைத்து
சந்தித்து வந்தார். அந்த சுரங்க வழியை அவர்கள் இருவர் மட்டும் தான்
பயன்படுத்தினார்கள். தொண்டைக் குரலின் மூலம் எப்படிப்பட்ட சத்தத்தை இட்டு
தனக்கு சமிக்ஞை அளிக்க வேண்டும் என்பதை முதல் நாளே மெயிற்லண்ட்
லொவினாவுக்கு பயிற்சியளித்து விட்டார்.
லொவினாவின் மீது ஆசைப்பட்ட ஒரு படையினன் ஒரு தடவை லொவினாவை பின் தொடர்ந்து
வந்தமைக்காக மெயிற்லண்ட் சுட்டுக்கொன்ற சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.
றொடி சமூகத்துக்கு மறுக்கப்பட்ட வீடு கட்டும் உரிமை, சுதந்திரமாக விரும்பிய
தொழிலை செய்யும் உரிமை, சுதந்திரமாக நடமாடும் உரிமை அனைத்தையும் தேசாதிபதி
வழங்கினார். அது மட்டுமன்றி லொவினாவின் வேண்டுகோளுக்கு இணங்க மார்புகளை
மறைக்கும் உரிமையையும் “றொடி” சாதியினர் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் அதன்
பின்னரும் “றொடி” சாதியினர் மீதான சாதி ஒடுக்குமுறை தொடரவே செய்தது என்பதை
பல்வேறு வரலாற்று நூல்களில் இருந்து அறிய முடிகிறது.
வடக்கு பிரதேசத்தில் தமிழ் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினர் மத்தியில்
கச்சை அணிய முடியாதபடி தான் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பல காலம்
இருந்தார்கள் என்பதும் இங்கு பதிவு செய்தாக வேண்டும்.
மன்னரின் ஆணை
1811 ஆம் ஆண்டு அரசர் ஜோர்ஜிடம் இருந்து ஒரு அவசர கடிதம் வந்தது. அதன்படி
இலங்கைக்கான ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக
குறிப்பிடப்பட்டிருந்தது. இரு வாரங்கள் மாத்திரமே அவருக்கு அவகாசம்
வழங்கப்பட்டது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இப்படித்தான் மெயிற்லண்ட்டை
தண்டித்தது. இந்த தீர்மானத்திற்கு பின்புலத்தில் பல காரணங்கள் இருந்தன.
அவருக்கு எதிராக பல இரகசிய முறைப்பாடுகள் அரசருக்கு அனுப்பபட்டிருந்தன.
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணுடன் கொண்டிருந்த உறவும், அதற்காக
கட்டப்பட்ட இரகசிய சுரங்கம் குறித்தும், அந்த சுரங்கத்துக்காக செலவிடப்பட்ட
பணம் இலங்கையின் பரிபாலனத்துக்கான மகாராஜாவின் பணம் என்றும் முறைப்பாடு
செய்யப்பட்டிருந்தது.
மிகுந்த வேதனையுடன் நாடு திரும்பிய மெயிற்லண்ட் லொவினாவிடம் தான் திரும்பி இலங்கை வந்து லொவினாவை அழைத்துச் செல்வதாக கூறியிருந்தார்.
“எனக்குப் பின்னர் வரும் தேசாதிபதி இந்த மாளிகையை தனது உத்தியோகபூர்வ
வாசஸ்தலமாக பயன்படுத்துவாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் இந்த
மாளிகைக்கு “மவுன்ட் லெவினியா” என்று பெயரிட நான் பரிந்துரைத்ததாக
அறிவியுங்கள் என செல்லுமுன் தனது இறுதி ஆசையை தெரிவித்தார் மெயிற்லண்ட்.
அந்த ஆசை நிறைவேற்றப்பட்டது.
லொவினாவுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை.
ஆனால் லொவினா பின்னர் கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார் என்கிற ஒரு கதை நிலவுகிறது. தனது இறுதிக் காலத்தில் மிகவும் சோகத்துடன் வாழ்ந்த மெயிற்லண்ட் விவாகம் செய்து கொள்ளாமலேயே 1824 இல் தனது 65ஆவது வயதில் மரணமானார்.
ஆனால் லொவினா பின்னர் கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார் என்கிற ஒரு கதை நிலவுகிறது. தனது இறுதிக் காலத்தில் மிகவும் சோகத்துடன் வாழ்ந்த மெயிற்லண்ட் விவாகம் செய்து கொள்ளாமலேயே 1824 இல் தனது 65ஆவது வயதில் மரணமானார்.
இவர்களின் காதல் கதையை பிரபல நாவலாசிரியர் மொஹான் ராஜ் மடவல என்பவர்
“லொவீனா” என்கிற பெயரில் சிங்களத்தில் ஒரு நாவலை எழுதினார். இலங்கையில்
2013 இல் அதிகமாக விற்கப்பட்ட நாவல் அது தான். ஆனால் அது
சந்தைப்படுத்தலுக்காக போர்னோகிரபி வகையில் எழுதப்பட்டு விட்டது என்கிற
விமர்சனங்கள் பலமாக முன்வைக்கப்பட்டன.
இன்றைய மவுன்ட் லெவினியா ஓட்டல் |
லொவினா நினைவாக இன்றைய “மவுன்ட் லெவினியா"
கொழும்பு கோட்டையிலிருந்து காலி வரையான இரயில் பாதையை ஆங்கிலேயர்கள் அமைத்த
வேளை இந்த சுரங்கப் பாதை இடைநடுவில் மூடப்பட்டுவிட்டது. ஓட்டல் பகுதியில்
எஞ்சிய சுரங்கப்பாதையை இன்றும் பார்வையிட முடியும். இரண்டாம் உலக மகா
யுத்தக் காலப்பகுதியில் இந்த ஓட்டல் ஒரு இராணுவ வைத்தியசாலையாக இயங்கியது.
1947 இல் தான் அது ஓட்டலாக ஆக்கப்பட்டது. அதன் பின்னர் அது
பெருப்பிக்கபட்டது.
இன்றும் கல்கிஸ்ஸ ஓட்டலில் தேசாதிபதி மெயிற்லண்ட் இங்கிலாந்திருந்து
தருவித்து பயன்படுத்திய குளியல் தொட்டி உட்பட பல்வேறு பொருட்கள்
பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. இன்று உல்லாசப் பிரயாணிகளைக் கவரும்
முதல் தர ஓட்டலாக அந்த ஓட்டல் இருக்கிறது.
இன்றைய கல்கிஸ்ஸ நகரம் ஆரம்பத்தில் “கல்விஸ்ஸ” என்றே அழைக்கப்பட்டது.
சிங்களத்தில் 20 கற்கள் என்பது அதன் பொருள் அதுவே மருவி கல்கிஸ்ஸ என்று
அழைத்தனர். லொவினா ஞாபகார்த்தமாக “மவுன்ட் லெவினியா” ('Mount Lavinia')
என்று பெயர் மாற்றம் பெற்றது.
மெயிற்லண்ட் இலங்கை வந்து 200வது ஆண்டு அங்கு கொண்டாடப்பட்டபோது
மெயிற்லண்டின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் வந்து அதில் கலந்து
கொண்டார்கள்.
அருகில் இருக்கும் அன்றைய “றொடி” குப்பத்தில் தான் இன்று கல்கிஸ்ஸ பௌத்த
மகளிர் பாடசாலை இயங்கி வருகிறது. மாணவிகளும், ஆசிரியைகளும் அங்கு தலைவி
கோலத்துடன் பெண்ணுருவம் தோன்றி மறைந்ததாக பல தடவைகள் அதிபருக்கு
முறைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
லொவினாவை மெயிற்லண்ட் ஒரு பாலியல் போகப்பொருளாகத் தான் பயன்படுத்தினார்
என்கிற பார்வையை முன்வைப்போரும் உளர். விரிவஞ்சி முழுக் கதையையும் இங்கு
பேச முடியவில்லை.
ஆனால் லொவினாவுக்கு ஊடாக அந்த ஒடுக்கப்பட்ட “றொடி” சாதியச் சமூகம் அதுவரை மறுக்கப்பட்டிருந்த பல உரிமைகளைப் பெற்றுக்கொண்டது.
நன்றி - வீரகேசரி - சங்கமம்
உசாத்துணை
- Sir Thomas Maitland - The Mastery Of The Mediterranean By Walter Frewen Lord - New York Longmans, Green & Co -1897
- Parga, And The Ionian Islands; A Refutation Of The Mis-Statements Of The Quarterly Review And Of Lieut.-Gen. Sir Thomas Maitland, London: John Warren, Old Bond Street. 1821 .
- Dutch And British Colonial Intervention In Sri Lanka C. 1780-1815: Expansion And Reform Alicia Frederika Schrikker By Geboren Te Utrecht In 1976
- Ceylon by Sydney D. Bailey assistant director of the hansard society, Hutchinson's university library
- The Pali Literature Of Ceylon By G. P. Malalasekera - M. D. Gunasena " Co., Ltd 1928.
- From Lauren Benton and Lisa Ford, Rage for Order: The British Empire and the Origins of International Law, 1800-1850 (Harvard University Press, in press).
- TRI SIMHALA The Last Phase 1796-1815 - by P. E. PIERIS, LITT D.(Camb.) CEYLON: THE COLOMBO APOTHECARIES' CO. , LTD. 1945
- British Infiltration Of Ceylon (Sri Lanka) In The Nineteenth Century - A Study Of The D’oyly Papers Between 1805 And 1818 By Ramesh Somasunderam - The University Of Western Australia 2008
- Gadi Jana Vatha, by Chandrasri Ranasinghe, Suriya books puvlication, 2009
- Handsome beggars: The Rodiyas of Ceylon by M. D Raghavan – Colombo Book Centre (1957)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக