செவ்வாய், 4 ஏப்ரல், 2017

கவண் .. ஊடக பரபரப்பின் மறுபக்கத்தை கொஞ்சம் வித்தியாசமாக காட்டியிருக்கிறது

ஒரு திரைப்படம் முழுமையான பொழுதுபோக்குப் படமாக மட்டுமே எடுக்கப் பட்டிருந்தாலும் எந்த விஷயங்களை வைத்து பொழுபோக்காக எடுக்கப்பட்டிருக்கிறது என்பதும் முக்கியம். ஒரு கதாநாயகன், வில்லன் இடையே பகை, பழிவாங்கல் என செல்லும் ஒரு பொழுதுபோக்குத் திரைப்படத்துக்கும், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, உண்மையாக நடக்கும் சம்பவங்களை, அதன் பின்னணியை வைத்து எடுக்கப்படும் பொழுதுபோக்குத் திரைப்படங்களுக்கும் கண்டிப்பாக வித்தியாசம் இருக்கிறது. கவண்,  கடந்த சில வருடங்களாக தமிழ்நாடு பார்த்து வரும் ஊடக பரபரப்பை, ஊடகத்தின் பலத்தை, பின்னணியை, மறுபக்கத்தை விலாவாரியாக காட்டியிருக்கும் ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம்.


விஜய் சேதுபதி, ஊடகத்தில் மாற்றாய் , நேர்மையாய் செயல்பட விரும்பும்
ஒரு இளைஞர். மடோனா, அவர் அவர் வேலைக்கு செல்லும் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஏற்கனவே வேலை செய்து கொண்டிருக்கும் பழைய காதலி. விக்ராந்த், ரசாயன கழிவுகளால் ஒரு கிராமத்தை பாதிக்கும் ஆலைக்கு எதிராக  களத்தில் இறங்கி போராடும் சுற்றுச் சூழல் செயல்பாட்டாளர். டி.ஆர் , நேர்மையாக தொலைக்காட்சி நடத்த வேண்டும் என்ற கொள்கையோடு வணிகத்தில் தோற்றுக்கொண்டிருப்பவர்.
 'போஸ்' வெங்கட், ரசாயன ஆலை நடத்தி வரும் முன்னாள் ரௌடி, குடிகார அரசியல்வாதி. ஆகாஷ்தீப் சேகல், TRP ரேட்டிங்கிற்காக எந்த அளவுக்கும் இறங்கும் ஒரு தொலைகாட்சி நிறுவனத்தின் அதிபர்.  ஊடகத்தின் நல்ல பக்கத்திலும் , மறுபக்கத்திலும் இருக்கும் இவர்களுக்குள்ளான போட்டி 'கவண்'.

விஜய் சேதுபதி, தன் கதாபாத்திரத்திற்கு சேர்த்திருக்கும் சுவாரசியம் அவருக்கே உரியது. கதாபாத்திரத்தைத் தாண்டி தங்கள் இருப்பால், மதிப்பு சேர்க்கும் நடிகர்களுள் ஒருவராய் இருக்கிறார் அவர். மடோனா ஒரு இளம் ஊடகவியலாளராக பொருந்தியிருக்கிறார். டி.ஆர் இருப்பது, அவரது பேச்சு, சுறுசுறுப்பு ரசிகர்களுக்கு மகிழ்வளிக்கிறது. நடிப்பு என்பதைப் பற்றி பெரிதாய் யோசிக்கவைக்கவில்லை அவரது கதாப்பாத்திரம். விக்ராந்த், துடிப்பாய் இருக்கிறார். மற்ற நடிகர்களும் பொருத்தமாய் சிறப்பாய் நடித்திருக்கின்றனர்.

கே.வி.ஆனந்த் படங்களில் பொதுவாய் இருக்கும் சுவாரசியங்களான காதலர்களுக்குள் நடக்கும் சீண்டல்கள், அவரையும் படக்குழுவில் இருபவர்களையுமே கிண்டல் செய்து கொள்வது, பாடல்களை அழகான வெளிநாட்டு இடங்களில் படமாக்குவது ஆகியன கவணிலும் சிறப்பாய் இருக்கின்றன. கூடுதலாக, ஒரு தொலைக்காட்சி அலைவரிசை நிறுவனம்  இயங்கும் இடமும் விதமும் விரிவாகவும் சுவாரசியமாகவும் காட்டப்பட்டிருக்கின்றன. கலை இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரின் பங்கு சிறப்பு. சுபா-கபிலன் வைரமுத்து  வசனங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் துறை சார்ந்த கலைச்சொற்கள் நம்பகத்தன்மையையும் ஈடுபாட்டையும் உருவாக்குகின்றன. கே.வி.ஆனந்த் - ஹாரிஸ் கூட்டணியின் பாடல்கள்  படத்தோடு அப்படியே சென்று விடுகின்றன, பெரிதான தாக்கம் இல்லாமல். பின்னணி இசை இரண்டாம் பாதியின் பரபரப்பிற்கு ஏற்றது போல் நன்றாய் இருக்கிறது.

தலைப்பிலிருந்தே தொடங்கி இறுதி வரை சொல்லப்பட்டிருக்கும் திரைக்கதை சுவாரஸ்யமாகவே இருந்தாலும், சற்று நீளமாய் இருப்பது அயர்ச்சியை தருகிறது. ஒரு கட்டத்தில், இரண்டு தொலைக்காட்சி அலைவரிசைகளுக்குள் நடக்கும் போராய் மாறிவிடுகிறது படம். எந்த சம்பவம் நடந்தாலும், அங்கு அந்த இரு தொலைக்காட்சிகள் மட்டும் இருக்கிறார்கள். இப்படியெல்லாம் செய்வார்களா என்று ஆரம்பத்தில் இருக்கும் ஆச்சரியம், இரண்டாம் பாதியில், இந்த அளவுக்கெல்லாமா நடக்கும் என்னும் சந்தேகமாக சற்றே மாறுகிறது. ஆனாலும், இவற்றையெல்லாம் பார்த்த பிறகு நாம் தொலைக்காட்சியில் பார்க்கும் பரபரப்பு நிகழ்ச்சிகள் மீது நமக்கு சந்தேகம் ஏற்படும் என்பதும் கவண் தரும் தாக்கம். கவண், பார்த்து ரசிக்கக் கூடிய, வேண்டிய, ஆனால் சற்றே நீளமான பொழுதுபோக்குத் திரைப்படம். 

கருத்துகள் இல்லை: