வெள்ளி, 7 ஏப்ரல், 2017

சரத்குமார் ராதிகா , அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் வருமான வரி சோதனை ! பாஜகவுடன் பேரம் படியல்ல?


ஏப்ரல் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை அமைச்சர் விஜயபாஸ்கர், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் சரத்குமார் ஆகியோரின் வீடுகள் உள்பட, அதிமுக அம்மா கட்சி நிர்வாகிகள் தங்கியுள்ள 35 இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் கோடிக்கணக்கில் பணமும் ஆவணங்களும் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிகளவில் பணப் பட்டுவாடா நடைபெறுவதாகவும் தினகரன் அணியினர் ரூ.100 கோடிக்குமேல் பணம் விநியோகம் செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையத்தில் திமுக, பாஜக, மா.கம்யூ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, புதுக்கோட்டை வீடு, அவரது அலுவலகம், குவாரி, அவரின் கல்லூரி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஏப்ரல் 7ஆம் தேதி அதிகாலை முதல் மத்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சோதனையின்போது பல லட்சம் ரூபாய் பணமும் டோக்கன்களும் ஆவணங்களும் சிக்கியுள்ளன.
இதுகுறித்து வருமானவரித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆப் இந்தியா இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், 'ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடாவில் அமைச்சருக்கு நேரடியாகத் தொடர்புள்ளதாக கடந்த சில நாட்களாக எங்களுக்கு தொடர் புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. எனவே, அமைச்சர் மற்றும் அவருடைய உறவினர்கள் வருமானவரித் துறையின் கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டனர். இந்நிலையில், சோதனை நடத்தப்பட்டு வருகிறது' எனத் தெரிவித்துள்ளார்.
சரத்குமார் வீட்டில் சோதனை
ஏப்ரல் 6ஆம் தேதி தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்த சமக தலைவர் சரத்குமாரின் கொட்டிவாக்கம் வீட்டில் ஏப்ரல் 7ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வருமான வரி முறையாகச் செலுத்தாததால் அவரது வீட்டில் சோதனை நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் அதிமுக எம்.பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, மருத்துவ சங்க நிர்வாகி ஒருவர், மருத்துவ பணியாளர் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் சோதனை
சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் 5 அறைகளில் சோதனை நடைபெற்று வருகிறது. இங்கிருந்துதான் ஆர்.கே.நகருக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் எழும்பூரிலுள்ள தனியார் விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில் பலகோடி ரூபாய் பணப் பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. விடுதியில் செய்தியாளர்களை உள்ளே விடாமல் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, திமுக எம்.எல்.ஏ., மா.சுப்ரமணியம் கூறுகையில், ‘ஏற்கனவே தலைமைச் செயலகத்தில் சோதனை நடைபெற்றுள்ள நிலையில் தற்போது சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் சோதனை நடந்திருப்பது தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தலைகுனிவாகும்' என்றார்.
அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம், ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில், மக்கள் மத்தியில் எங்கள் செல்வாக்கை குறைக்கத்தான் எங்களுடைய வெற்றியை பொறுக்க முடியாத எதிர்க்கட்சியினர் தூண்டுதலின்பேரில் இந்தச் சோதனை நடைபெறுவதாக குற்றம்சாட்டினார்.
ஏன் இந்த ரெய்டு ?
தினகரனின் நம்பிக்கைக்கு உரியவராக நெருக்கமானவராக ஆட்சியிலும், அதிகாரத்திலும் வலம் வந்துகொண்டிருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலமாகவே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பணப் பட்டுவாடா நடைபெற்று வந்துள்ளது. மேலும், கூவத்தூர் விடுதியில் எம்.எல்.ஏக்களுக்கு பணம் பிரித்து வழங்கப்பட்டதும் இவரின் மூலமாக நடைபெற்றது.
விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் பணம் பறிமுதல்
விஜயபாஸ்கர் உதவியாளர் நைனார் வீட்டில் நடைபெற்ற சோதனையில் இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா செய்ய வைத்திருந்த 2.20 கோடி ரூபாய் பணமும், பணப் பட்டுவாடா தொடர்பாக பல முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: