சசிகலா அணியினரால் கடத்திச் செல்லப்பட்டு கிழக்குக் கடற்கரைச் சாலையில்
உள்ள விடுதிகளிலும், புதுச்சேரியிலும் கட்டாய சிறை வைக்கப்பட்டுள்ள
120-க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''தமிழ்நாட்டில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அரசு பதவி விலகிவிட்ட
நிலையில் புதிய அரசு இன்னும் பதவியேற்கவில்லை. பன்னீர் செல்வம் தலைமையிலான
அணியும், சசிகலா தலைமையிலான அணியும் தங்களுக்குத்தான் பெரும்பான்மை
இருப்பதாக கூறி வரும் நிலையில் 120-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் சசிகலா
அணியினரால் கடத்திச் செல்லப்பட்டு கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள
விடுதிகளிலும், புதுச்சேரியிலும் கட்டாய சிறை வைக்கப்பட்டிருப்பதாக
செய்திகள் வெளிவந்திருக்கின்றன. ஆதாரங்களுடன் கூடிய இந்த செய்திகளை
உதாசீனப்படுத்தி விட முடியாது.
சென்னையில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில்
மொத்தமுள்ள 135 பேரில் 131 பேர் கலந்து கொண்டு சசிகலாவின் தலைமைக்கு ஆதரவு
தெரிவித்துள்ளனர் என்று அக்கட்சித் தலைமை அறிவித்திருக்கிறது. இதைத்
தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை முதலமைச்சராக்க வேண்டும் என்று
அவரது ஆதரவாளர்கள் மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றனர்.
ஆனால், சென்னையில் எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்த சிறிது நேரத்தில் அதில்
பங்கேற்ற எம்எல்ஏக்கள் அனைவரும் பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டு ரகசிய
இடங்களில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை அவர்களின் குடும்பத்தினர் கூட
தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதிமுக தலைமையைத் தொடர்பு
கொண்டு இதுகுறித்து கேட்கும் குடும்பத்தினர் மிரட்டப்படுவதாகவும்
குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ரகசிய இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் எம்எல்ஏக்களை வேறு இடத்திற்கு
மாற்ற முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், சட்டப்பேரவையில் சசிகலா
பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை இவர்கள் பிணைக் கைதிகளாகவே
வைத்திருக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இது ஜனநாயகத்திற்கும்,
அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரான செயல் ஆகும். எந்த ஒரு விஷயத்திலும்
எவர் ஒருவரும் முடிவெடுப்பதற்கு முன்பாக தெளிவான மனநிலையில் இருக்க
வேண்டியது அவசியம் ஆகும்.
சாதாரண குற்ற வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களோ, சாட்சிகளோ அந்த வழக்கு
தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 164-ஆவது பிரிவின் கீழ்
சாட்சியம் அளிக்க முன்வந்தால், அவர் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில்
நேர் நிறுத்தப்பட்டு, அவர் தெளிவான மன நிலையில் இருக்கிறாரா என்பது உறுதி
செய்யப்படும். அதன் பிறகும் அவரிடம் உடனடியாக சாட்சியம் பெறப்படாது.
அவருக்கு 24 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டு, அதன்பிறகே அவரிடம் சாட்சியம்
பெறப்படும். சாட்சி ஏதேனும் அழுத்தத்திற்குப் பணிந்து சாட்சியம் அளித்தால்
அது வழக்கின் தன்மையை பாதித்து விடும் என்பதால்தான் இத்தகைய நடைமுறைகள்
கடைபிடிக்கப்படுகின்றன.
சாதாரண குற்றவழக்கைக் கையாள்வதிலேயே இவ்வளவு நடைமுறைகள் இருக்கும் போது ஒரு
மாநிலத்தை ஆளப்போவது யார் என்பதைத் தீர்மானிப்பதில் எடுத்தேன் கவிழ்த்தேன்
என்று முடிவு எடுத்து விடக் கூடாது. சாதாரணச் சூழலில் ஒருவருக்கு
ஆதரவளிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை குறித்த அறிவிப்புகளை முழுமையாக
ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், இப்போதைய சூழலில் சசிகலாவை ஆதரிக்கும்
உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்த அறிவிப்பை அப்படியே ஏற்றுக்கொள்ள
முடியாது. காரணம், சசிகலாவுக்கு ஆதரவளித்தாகக் கூறப்படும் 131 பேரில்
எத்தனைப் பேர் சுய விருப்பத்தின் அடிப்படையில் முடிவெடுத்தார்கள் என்பது
யாருக்கும் தெரியாது.
தமிழகத்தின் முதலமைச்சராகக் கடந்த 60 நாட்களாக இருந்து வரும்
ஓ.பன்னீர்செல்வம், தனது பதவி விலகல் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்துகள்
இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன. முதலமைச்சர் பதவியிலிருந்து விலகும்படி
தாம் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், பதவி விலகுவதாக அறிவிக்காவிட்டால்
கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
தமக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.
அதுமட்டுமின்றி, அதிமுகவின் எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டதே தமக்குத்
தெரியாது என்றும் சென்னையில் அவர் கூறியிருப்பதை புறந்தள்ளிவிட முடியாது.
தமிழகத்தின் முதலமைச்சர் பதவியில் இருப்பவருக்கே கடுமையான அழுத்தம்
தரப்பட்டு, பதவி விலகல் கடிதம் பெறப்பட்டதுடன், புதிய முதலமைச்சராக
சசிகலாவை முன்மொழிய வைப்பது சாத்தியமாகியுள்ள நிலையில், சாதாரண
எம்எல்ஏக்களுக்கு அழுத்தம் கொடுத்து அவர்களின் ஆதரவை பெற்றிருப்பதாகக்
கணக்கு காட்டுவது கடினமான ஒன்றல்ல. அதிலும் குறிப்பாக அனைத்து
எம்எல்ஏக்களும் பிணைக்கைதிகள் போல சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களால்
சுதந்திரமாக முடிவெடுக்க முடியாது.
எனவே கடத்தி சிறை வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் உடனடியாக
மீட்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பின் அனைத்து
எம்எல்ஏக்களையும் ஆளுநர் தனித்தனியே அழைத்துப் பேசி விருப்பத்தை
அறியவேண்டும். இந்த நடைமுறைகள் அனைத்தும் நிறைவு பெற்ற பிறகே தமிழகத்தில்
ஆட்சி அமைக்க யாரை அழைப்பது என்பது குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்க
வேண்டும்.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, தமிழகத்தில் மிகவும் குழப்பமான அரசியல்
சூழலும், குதிரை பேரமும் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்திற்கென நிரந்தர
ஆளுநர் நியமிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் அரசியல்
முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான தமிழகத்தில் ஆளுநர், முதலமைச்சர் ஆகிய
அரசியல் சட்ட பதவிகள் அனைத்தும் காலியாக இருப்பது சரியல்ல.
தமிழகத்தில் இப்போதுள்ள சூழலை சமாளிக்க ஆளுநர் தமிழகத்தில் இருந்திருக்க
வேண்டும். ஆனால் அவரோ 2000 கி.மீ. தொலைவில் இருக்கிறார். இது தமிழக அரசியல்
சூழலை மேலும் மோசமாக்கிவிடும். எனவே, தமிழக அரசியல் நெருக்கடிக்கு தீர்வு
காணப்படும் வரை ஆளுநர் சென்னையில் முகாமிட வேண்டும். வெகுவிரைவில்
தமிழகத்திற்கு நிரந்தர ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும்.'' இவ்வாறு அன்புமணி
தெரிவித்துள்ளார்.tamilthehindu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக